வியாழன், 18 அக்டோபர், 2018

கேரளா அமைச்சர் கே கே சைலஜா:சபரிமலை போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல

சபரிமலை - அரசியல் நடக்கிறது: கேரள அமைச்சர்கள்!
மின்னம்பலம்: சபரிமலை விவகாரத்தில் அரசியல் நடப்பதாக கேரள அமைச்சர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே நேற்று முதல் வரும் 22ஆம் தேதி வரை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நேற்று கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் கோயிலுக்குப் பெண்கள் செல்ல அனுமதி மறுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பம்பையில் போராட்டம் நடைபெற்றது. சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களைச் சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இரு பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மாநில விவசாயத் துறை அமைச்சர் சுனில் குமார், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஒருபக்கம் பாஜகவைச் சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். மற்றொரு பக்கம் அனைத்துப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. உண்மையான போராட்டக்காரர்கள் அமைதியை மட்டுமே விரும்புவார்கள், பிரச்சினையை ஏற்படுத்த விரும்ப மாட்டார்கள். இவர்கள் போராட்டக்காரர்கள் போல் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள். சபரிமலை விவகாரத்தை ஓட்டுக்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல என்று தெரிவித்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.சைலஜா, “சபரிமலை போராட்டம் உள்நோக்கம் கொண்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்லர். ஏன் என்றால் இறைவனின் முன்னால் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அவர்கள் எவ்வாறு அங்கு பெண்களைத் தாக்கலாம்? இந்தப் போராட்டத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, “இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து மேற்கொண்ட ஏற்பாடுகள். அவர்கள் இனவாத ஒற்றுமையைத் தொந்தரவு செய்ய விரும்புகிறார்கள். கேரள அரசைக் குற்றம் சாட்டுவதற்கு ஒன்றும் இல்லை” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: