திங்கள், 15 அக்டோபர், 2018

MeToo ஹேஷ்டேக் .. இந்தியாவில் அரசியல் ஆயுதம் ஆகிறதா? இந்துத்வாக்களின் மற்றுமொரு ஆயுதம்

சிறப்புக் கட்டுரை: #MeToo: ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!மின்னம்பலம்: பெருந்தேவி #MeToo ஹேஷ்டேக் அடையாளத்தோடு இன்று ஒரு புயல் வேக இயக்கம் சமூக வலைதளத்திலும் ஊடகத்திலும் தமிழகத்தில் மையம்கொண்டிருக்கிறது. இது தேநீர்க் கோப்பைப் புயல் அல்ல. சமூகப் பண்பாட்டுத் தளத்தில் அதிகாரம் மிக்க நபர்களால் பெண்களும் குழந்தைகளும் (ஏன் சில ஆண்களும்கூட) முன்னர் பாதிக்கப்பட்டது உண்டா, அதைப் பொதுவெளியில் பகிர்ந்தது உண்டா என்றால் நிச்சயம் உண்டு. உடனடியாக நினைவுக்கு வருவது எழுத்தாளர் அனுராதா ரமணன் காஞ்சிபுர சங்கர மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி அவரிடம் முறைகேடாக நடந்துகொண்டது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தது.

2004இல் ஜெயேந்திர சரஸ்வதி, சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவுடன், அவரது பாலியல் அத்துமீறல்களைப் பெண்கள் முன்வந்து தெரிவித்தார்கள். அப்போது, அனுராதா ரமணனும் சில வருடங்களுக்கு முன் சங்கர மடத்தில் பத்திரிகை ஒன்று தொடங்கப்போவதாக தன்னை அழைத்த ஜெயேந்திரர் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாகத் தெரிவித்தார். தமிழகக் காவல் துறையிடம் வாக்குமூலமும் அளித்தார். ஆனால், இந்த வாக்குமூலத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக, அனுராதா ரமணனுக்கு நியாயம் கிட்டியதாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியில் தற்காலிகக் கவனம் என்பதோடு அவர் பகிர்வு நின்றுபோனது.
திறந்திருக்கும் நீதியின் பாதை
அனுராதா இன்று உயிரோடு இருந்திருந்தால் ஒருவேளை தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து #MeTooவில் எழுதியிருக்கலாம். நடிகர் தனுஸ்ரீ தத்தாவுக்கு நீதியை நோக்கிய பாதையில் நடக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு அவருக்கும் கிட்டியிருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பு (2008) புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் படப்பிடிப்பொன்றில் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டது குறித்து தனுஸ்ரீ குற்றம்சாட்டியிருக்கிறார். தனுஸ்ரீயோடு நெருங்கி நடிக்கும் வகையில் பாடல் - நடனக் காட்சிகளை வடிவமைக்கக் கோரிய படேகரை எதிர்த்து அவர் முறையிட்டது இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் யாராலும் காதில் வாங்கிக்கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால் நடன இயக்குநர் படேகரின் கோரிக்கையே ஏற்று நடனக் காட்சியை அமைக்கப் பார்த்தார்.
தனுஸ்ரீயின் மனக் கொந்தளிப்பு பொதுவெளிக்கு வந்தது. ஆனால், படேகரின் நடிப்புத் தொழில் வாழ்க்கையில் சிறு பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை. ஆனால், இன்று #MeToo இயக்கம் வேகம்பெற்றிருக்கும் தருணத்தில் மீண்டும் தன் குற்றச்சாட்டை முன்னெடுத்திருக்கிறார் தனுஸ்ரீ. #MeToo காரணமாக விளைந்த சமூக அழுத்தத்தால் ஒருவழியாக இப்போதுதான் படேகர் மீது காவல் துறை எஃப்ஐஆர் பதிந்திருக்கிறது. அதாவது அத்துமீறல் நடந்த பத்து வருடங்கள் கழித்து. #MeTooவின் ஒரு வெற்றி இது எனலாம்.
தொடரும் அம்பலங்கள்
வேறு பலருக்கும் இந்த இயக்கம் நீதியின் பாதையைத் திறந்துவிட்டிருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டின் சீனியர் எடிட்டரான கே.ஆர்.ஸ்ரீனிவாஸ் பதவி விலகியிருக்கிறார். அவரால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பத்திரிகையாளர் சந்தியா மேனன் #MeToo ஹேஷ்டாக்கில் பகிர்ந்தவுடன் வேறு பல பெண் பத்திரிகையாளர்களும் பகிர்ந்துகொண்டார்கள். விளைவு அவர் விலகல்.
இதேபோல ஹிந்துஸ்டான் டைம்ஸ் நாளிதழின் தலைமைப் பொறுப்பு வகித்த பிரஷாந்த் ஜாவும் பதவி விலகியிருக்கிறார். சென்ற ஆண்டு #MeToo ஹேஷ்டேக் சார்ந்த பெண்கள் பகிர்வுகளால் மியூசிக் அகாடமியின் காரியதரிசியாக இருந்த பப்பு வேணுகோபால ராவ் பதவி விலகினார்.
பத்திரிகையாளரும் வெளியுறவுத் துறை இணையமைச்சருமாக இருக்கும் எம்.ஜே.அக்பரின் பாலியல் தொல்லைகள் பற்றி ஒன்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் தற்போது, குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அவர் பதவி விலக அழுத்தம் தரப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு திரைக் கலைஞர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் தங்களிடம் அத்துமீறல் செய்ததாகப் பெண்கள் தொடர்ந்து ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, திரைப்படப் பாடலாசிரியரான வைரமுத்து, பாடகர் கார்த்திக், கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் ஓ.எஸ்.தியாகராஜன், சசிகிரண், டி.என்.சேஷகோபாலன் முதலானோரின் பாலியல் அத்துமீறல்கள் பற்றிய ட்விட்டர் பகிர்வுகள் காணக் கிடைக்கின்றன. தமிழ்நாடு பிராமண சங்கத் தலைவர் நாராயணனின் பாலியல் அத்துமீறல்களைப் பற்றியும் பெண்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
#MeToo இயக்கத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?

பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களும் அனுபவக்கதைகளும் இணையத்தை, பொதுவாக ஊடகத்தையே நிறைத்திருக்கின்றன. #MeToo இயக்கம் இந்த அளவுக்குச் செயல்வேகம் பெற்றிருப்பதன் காரணம் இந்தப் பயன்பாட்டில் உள்ள உம்மை. #MeToo ‘எனக்கும்’ எனும்போது வேறொருவருக்கும் இது நடந்திருக்கிறது என்ற பொருள் அதில் தொக்கி நிற்கிறது. ‘எனக்கு’ என்பது முன்வைக்கும் தனக்கான இடம், ‘எனக்கும்’ எனும்போது பலருக்கும் ஆனதாக மாறுகிறது. பலருக்கும் என்பதாகும்போது ஒன்றிப்பு (solidarity) என்பதற்கான இடமாகவும் உம்மை இருக்கிறது. பதின்மூன்று வருடங்களுக்கு முன்பே, இந்தப் பயன்பாட்டின் மூலமாக இத்தகையச் சகோதரித்துவ ஒன்றிப்பை மக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தவர் தாரனா புர்கே. சிவில் உரிமைகளுக்காகப் போராடிவரும் அமெரிக்கக் கறுப்பினத்தவரான புர்கே வழிநடத்திய களப்பணியாளர்களின் குழுவின் பெயர் “Me too.”
பாலியல் கொடுமைகளை, தாக்குதல்களை எதிர்கொண்ட கறுப்பின இளம் பெண்களுக்காக அலபாமா உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் பெயரில் பயிலரங்குகளை அவர் நடத்தியிருக்கிறார். பெண்களின் பரஸ்பர ஆதரவு, பாதுகாப்பு வெளிகள் ஆகியவற்றை முதன்மைப்படுத்தியது அவர் குழு. “Empowerment through empathy,” - “ஒத்த புரிவுணர்வின் மூலம் அதிகாரம் பெறுதல்” என #MeToo பயன்பாட்டைக் குறித்து அவர் அழகாக விளக்குகிறார். ஒன்றிப்பு, ஒருமித்த புரிவுணர்வு எனும்போது பன்மை வலியுறுத்தப்படுகிறது.
பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் அமெரிக்காவில் #MeTooவின் இரண்டாம் அலை பொதுவெளியில் சூடுபிடிக்கத் தொடங்கியது. முன்னாள் அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வே வெய்ன்ஸ்டீன் (Harvey Weinstein) செய்த பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட வன்முறையை எண்பதுக்கும் மேல் எண்ணிக்கையிலான பெண்கள் அம்பலப்படுத்தினார்கள். ஆனால், இந்த எதிர்ப்பியக்கத்தின் தலைமை எனத் தவறாக அலிசா மிலனோ (Alyssa Milano) என்ற பெண் நடிகர் சுட்டிக்காட்டப்பட்டார். தவிர, அலிசா, புர்கேயின் பெயரை, பங்களிப்பை அறிந்திருக்கவில்லை, ஊடகத்தில், சமூக வலைதளத்தில் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத புர்கேயின் அடக்கத்தை இது காட்டுகிறது என்று நாம் கொள்ளலாம்.
இந்த ஹேஷ்டாக்கைப் பயன்படுத்தி அதிகாரம் மிக்க ஆண்களின் வன்முறையை அம்பலப்படுத்தியதால் அலிசாவை நட்பு என்று புர்கே குறிப்பிட்டார். அதே நேரத்தில், #MeToo பயன்பாடு அலிசாவைப் பற்றியது அல்ல, அப்படி இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். அலிசாவையோ, வேறு யாரையோ தலைமை / தலைவர் என்று யாரும் குறிப்பிடும்போது, கறுப்பினப் பெண்களின், குறிப்பாக புர்கேயின் உழைப்பு அழிக்கப்படுகிறது என்பது முக்கியமாகச் சுட்டப்பட வேண்டியது. புர்கேயும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் #MeToo இயக்கம்

இந்தியாவைப் பொறுத்தவரை, சென்ற வருடம் அக்டோபர் மாதம் #MeToo ஹேஷ்டாக்கை அமெரிக்காவில் சட்டம் பயிலும் தலித் மாணவர் ரயா சர்க்கார் அறிமுகப்படுத்தினார். இந்தியக் கல்விப் புலத்தில் பாலியல் துன்புறுத்தல்களைச் செய்த, செய்யக்கூடிய கல்வியாளர்கள் பெயர்கள் இடம்பெற்ற பட்டியலை (“The List”) அவர் முகநூலில் பகிர்ந்தார். நமக்கு அறிமுகமான சில பெயர்களும் அதில் உண்டு. பாதிக்கப்பட்ட பல்வேறு மாணவர்களிடமிருந்து தகவல்கள் திரட்டி ரயாவால் பகிரப்பட்டது அந்தப் பெயர்ப் பட்டியல். அவருக்கும் அவர் தோழமைகளுக்கும் கடும் சவாலை அளித்திருக்கக்கூடிய பணி அது. கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள் மத்தியிலும் ஆங்கில ஊடகத்திலும் பெரும் கவனம் பெற்றது அந்தப் பட்டியல். ராஜஸ்தானைச் சேர்ந்த சமூகப் போராளியான பன்வாரி தேவியைத் தன் முன்னோடியாக ரயா கருதுகிறார்.
தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை திரையிசைப் பாடகர் சின்மயி, பத்திரிகையாளர் சந்தியா மேனன் போன்றோர் #MeToo ஹேஷ்டாக்கில் அவர்கள் சந்தித்த, மற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை, அத்துமீறல்களை ஒரு பணியாக எடுத்துப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பகிர்வுகளுக்குப் பின்னணியாக மேற்கூறியவர்களின் பங்களிப்பை நாம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியதும் அங்கீகரிக்க வேண்டியதும் அவசியம்.
(#MeToo இயக்கம் குறித்த பெருந்தேவியின் அலசல் நாளையும் தொடரும்)
கட்டுரைத் தரவுகள்:
https://timesofindia.indiatimes.com/india/Seer-threatened-to-bump-me-off-Tamil-writer/articleshow/940899.cms
https://economictimes.indiatimes.com/magazines/panache/tanushree-dutta-files-police-complaint-against-nana-patekar-ganesh-acharya/articleshow/66105589.cms)
https://www.theguardian.com/world/2018/jan/15/me-too-founder-tarana-burke-women-sexual-assault
https://www.vogue.com/article/me-too-tarana-burke-frustrations-mainstream-twitter-thread
https://www.livemint.com/Leisure/JYk9SoKvaPjeo9nevmUUPO/I-would-like-to-credit-Bhanvari-Devi-for-igniting-the-MeTo.html

கருத்துகள் இல்லை: