சனி, 8 செப்டம்பர், 2018

அமைச்சர் வேலுமணியின் ஒப்பந்த ஊழல் Times now ஊடகம் விடியோ லீக்ஸ்


மின்னம்பலம் :அமைச்சர் வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆதாரங்களை டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
அமைச்சர் வேலுமணி மீது ஊழல் சர்ச்சை!தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடைபெற்றுவருவதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த ஊழல், சுகாதாரத் துறை சார்ந்த நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் ஊழல் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த ஊழல் சர்ச்சையில் அமைச்சர் வேலுமணி சிக்கியுள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக வேலுமணி உள்ளார்.
சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் உள்ளாட்சித் துறை தொடர்பான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை டைம்ஸ் நவ் ஊடகம் நேற்று (செப்டம்பர் 7) வெளியிட்டுள்ளது.

150 நாட்கள் நடத்திய புலன் விசாரணையில் இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளரும் கோவை இளைஞர் அணி செயலாளருமான ராஜன் சந்திரசேகருக்கு சொந்தமான கே.சி.பி. இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்டுக்கு கோவை மாநகராட்சியின் பல்வேறு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் வேலுமணிக்கு ராஜன் சந்திரசேகர் மிகவும் நெருக்கம் என்றும் அதன் காரணமாகவே ஒப்பந்தங்கள் அனைத்தும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. கடந்த 2014-15ஆம் ஆண்டில் ரூ.100 கோடியாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய், 2016-17ல் ரூ.142 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள மற்றொரு நிறுவனமான வரதன் இன்ஃப்ராஸ்டரக்சரின் வருவாய் 2014-15ஆம் ஆண்டில் ரூ. 15.17 கோடியாக இருந்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 339.74 சதவிகிதம் அதிகரித்து 66.71 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. மூன்றாவது நிறுவனமான கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியாவின் வருவாய் 86 லட்சத்தில் (2014-15) இருந்து 28.55 கோடியாக (2016-17) உயர்ந்துள்ளது. அதாவது 3219.76 சதவிகிதம் வருவாய் உயர்ந்துள்ளது.
அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு சொந்தமான பி. செந்தில் அண்ட் கோ நிறுவனத்திற்கு ரூ. 80 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கே.சி.பி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சந்திரபிரகாஷ் என்பவரின் தாயார் சுந்தரி கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான நிறுவனம் வரதன். சந்திரபிரகாஷின் மனைவியின் நிறுவனம் கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா. இந்த நிறுவனங்களுக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ள 4 நிறுவனங்களுமே அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தங்கள் வழங்கியது மூலம் ரூ.125 கோடிவரை அமைச்சர் வேலுமணி லாபமடைந்துள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அன்பழகன் என்பவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளார். 4 மாதங்கள் கடந்த நிலையில், இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டைம்ஸ் நவ் ஊடகம் அமைச்சர் வேலுமணியிடம் விளக்கம் கேட்டது. அதற்கு அவர், “இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளேன். எனக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுவது பொய். நான் விருப்பப்பட்டால் மட்டுமே நீங்கள் என்னிடம் கேள்வி எழுப்ப முடியும். மு.க.ஸ்டாலினின் பினாமியாக நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள் என்று நான் குற்றம்சாட்ட முடியுமா” என்று பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: