திங்கள், 3 செப்டம்பர், 2018

பவானிசாகர் MLA திருமணம் .. மணப்பெண் ஓட்டம் .. மணமகன் அதிமுக எம் எல் ஏ ஈஸ்வரன் .. எடப்பாடி தலையில் நடக்கவிருந்த திருமணம்

எம்.எல்.ஏ. ஈஸ்வரன் திருமண  பேனர்
tamil.thehindu.com ஈரோடு, பவானிசாகர் எம்.எல்.ஏ மணக்கவிருந்த பெண் திருமணத்திற்கு ஒருவாரம் இருந்த நிலையில் மாயமானார். அவரை கண்டுபிடித்து தரும்படி பெண்ணின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன் (43). இவர் தற்போது அதிமுக எடப்பாடி அணியில் உள்ளார். பவானிசாகர் ஒன்றிய மாணவர் அணி செயலாளராக உள்ளார். ஈஸ்வரனின் சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும்.
சமீபத்தில் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (23) என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் 20 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ள நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகள் சந்தியா எம்.சி.ஏ. பட்டதாரி ஆவார்.

செப்டம்பர் 12 அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்து வந்தது. திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மணமகள் வீட்டிலும் மணமகன் ஈஸ்வரன் எம்எல்ஏ வீட்டிலும் அவரவரது உறவினர்களும் மும்முரமாக திருமண பத்திரிகையை கொடுத்து வந்தனர்.
திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்வதாக இருந்தது. ஊரெங்கும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தடபுடலாக திருமண வேலை நடந்துவரும் வேளையில் கடந்த 1-ம் தேதி மணமகள் சந்தியா சத்திய மங்கலத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் அதன் பின்னால் வீடு திரும்பவே இல்லை.
அக்காவீட்டுக்கும் அவர் செல்லவில்லை. இரண்டு நாட்களாக அவரை தேடியும் கிடைக்காததால் அவரைக்காணவில்லை என மணமகள் சந்தியாவின் தந்தை ரத்தினசாமி கடத்தூர் போலீஸில் புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ மணக்கவிருந்த பெண் மாயமானது பவானிசாகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: