சனி, 8 செப்டம்பர், 2018

செபஸ்டியன் ஜார்ஜின் ஆணவம் குறித்து ஜனவரி 2013ல் எழுதிய கட்டுரை Savukku ·

george1Shankar.A :அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும்.  அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும் என்கிறார் அய்யன் வள்ளுவர்.
“ஜார்ஜ்.  இவர் ஐஐடியில் படித்தவர்.  பொதுவாகவே ஐஐடியில் படித்தவர்கள் மற்றவர்களை எருமை மாடுகளாகவே பார்ப்பார்கள். அதுவும் ஐஐடி முடித்து விட்டு ஐபிஎஸ் ஆகி விட்டால் மற்றவர்களை பன்றிகளைப் போலவே பார்ப்பார்கள்.   ஐஐடியில் படித்து ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, அமெரிக்காவில் உள்ள மாசச்சூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்தால் … … மற்றவர்களை புழுக்களைப் போலத்தான் பார்ப்பார்கள்.  ஜார்ஜ் அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டியில் எம்.டெக் படித்தவர். இதையும் படித்து விட்டு, எம்.பி.ஏ மற்றும் எம்.பில் படித்தவர். கேட்க வேண்டுமா…”
இது பிம்ப் ஃபிக்ஷன் என்ற கட்டுரையில் சவுக்கு ஜார்ஜைப் பற்றி எழுதியிருந்தது.   ஜார்ஜின் அணுகுமுறை குறித்து சவுக்கில், அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற கட்டுரையிலும் விரிவாக எழுதப்பட்டிருந்தது.
கடந்த 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் ஆறுமுகசாமி ஒரு உத்தரவு பிறப்பித்தார்.

The attitude of the Assistant Commissioner of Police as well as the Commissioner of Police is deprecated one which is the black mark on the entire government as well as the Commissioner of Police.  This court observes with heavy heart that the Commissioner of Police is a police officer and he is not an Emperor in Fort St. George.  As a public officer he is expected to receive the complaint and redress the complainant and expected to take action against the culprits after due investigation.   He should act without showing any partiality.   He has no means to refuse audience for the public like the defacto complainant.   He should hear the grievance of the public and then only he can take any decision after due investigation.   He has created such a situation after assuming his official position and this court has no other option except to pass orders after orders.
Hence I am of the view to direct Mr.George, the Commissioner of Police, Chennai City, Chennai to appear before this Court on 11.01.2013 to appraise the  position of the present case.
உதவி ஆணையர் மற்றும் காவல் ஆணையரின் அணுகு முறை கண்டனத்திற்குரியது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த அரசுக்கும் காவல் ஆணையருக்கும் ஒரு கரும்புள்ளி.   மாநகர காவல் ஆணையாளர் ஒரு காவல்துறை அதிகாரியே தவிர, புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் சக்ரவர்த்தி அல்ல என்பதை இந்த நீதிமன்றம் கனத்த மனதுடன் பதிவு செய்ய விரும்புகிறது.   ஒரு அரசு அதிகாரி என்ற முறையில், பாரபட்சமின்றி தன்னிடம் வரும் புகார்களை பதிவு செய்து விசாரித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த வழக்கின் மனுதாரரைப் போல தன்னைப் பார்க்க வரும் பொதுமக்களை அவர் பார்க்க இயலாது என்று மறுக்க இயலாது.  பொதுமக்களின் குறைகளைக் கேட்டால்தான், புலனாய்வுக்குப் பின் அவர் உரிய முடிவு எடுக்க இயலும்.   அவர் காவல் துறை ஆணையாளராக பதவியேற்ற பிறகு, நீதிமன்றங்கள் ஆணைக்கு மேல் ஆணைகளாக பிறப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜ், 11.01.2013 அன்று நேரில் ஆஜராகி இந்த வழக்கு பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
நீதியரசர் ஆறுமுகசாமிக்கு ஜார்ஜ் மன்னர் என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று எப்படித் தோன்றியதோ தெரியவில்லை.  அந்த வர்ணனை ஜார்ஜ் ஐபிஎஸ்சுக்கு முழுமையாகப் பொருந்தும்.  2001ல் ஜார்ஜ் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநராக வந்தார்.  அப்போது இவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே…..  வானத்திலிருந்து குதித்து வந்தவர் போலவே நடந்து கொள்வார்.   வழக்கமாகவே நேரடியாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று வரும் அதிகாரிகள், க்ரூப் 1 அதிகாரிகளை மதிக்க மாட்டார்கள்.  ஜார்ஜ் க்ரூப் 1 அதிகாரிகளை புழு போல நடத்துவார்.  க்ரூப் 1 அதிகாரிகள், ஐபிஎஸ் அந்தஸ்துக்கு வந்தால் கூட அவர்களை மதிக்க மாட்டார்.  2001ல், அவரிடம் பணியாற்றிய அதிகாரிகளை அவர் படுத்திய பாடு இருக்கிறதே….  வரச் சொல்லி விட்டு, வாசலில் இரண்டு மணி நேரம் காக்க வைப்பது, எந்த வேலை செய்தாலும் சரியாகச் செய்யவில்லை என்று வம்படியாக குறை சொல்வது, அந்த அதிகாரிகளின் வாகனங்களுக்கு ஓட்டுனர் தராமல் அடாவடி செய்வது, மதுரையைச் சேர்ந்த அதிகாரி சனி ஞாயிறு விடுமுறை கேட்டு விடப் போகிறார் என்று, வெள்ளிக்கிழமை மாலை ஒரு வார வேலையை கொடுப்பது என்று ஜார்ஜ் செய்த அட்டூழியங்களுக்கு அளவே கிடையாது.   இந்த பத்து ஆண்டுகளில் ஜார்ஜ் மாறியிருப்பார் என்று பார்த்தால், ஜார்ஜ் துளி கூட மாறவில்லை.  அந்த அதிகாரிகள் எத்தனை வேதனைகளை அனுபவித்தார்கள் என்பது சவுக்குக்குத் தெரியும்.
அந்த அதிகாரிகளைத்தான் இப்படிச் செய்தார் என்றால், அப்போது மத்திய சரக கண்காணிப்பாளராக டி.வி.ரவிச்சந்திரன் என்ற நேரடி ஐபிஎஸ் அதிகாரி இருந்தார்.  அவர், ஜார்ஜுக்கு சொம்படிக்கவில்லை என்பதால், அவருக்கு எப்படியெல்லாம் தொல்லை கொடுக்க முடியுமோ அப்படித் தொல்லை கொடுத்தார். தன்னிடம் பணிந்து போகவில்லை என்பதால், அவரது ஆண்டு ஆய்வறிக்கையில் சரியாக பணியாற்றவில்லை என்று எழுதினார்.
இந்தப் பின்னணியில்தான் நீதியரசர் ஆறுமுகசாமி பிறப்பித்துள்ள உத்தரவைப் பார்க்க வேண்டும்.  இப்படி நீதியரசர் கடும் கோபத்தோடு பொரிந்து தள்ள வேண்டிய அவசியம் என்ன… அப்படி என்ன வழக்கு அது
25.01.2002 அன்று பாப்புலர் போர்ஜ் என்ற நிறுவனத்தின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு ராஜாமணி என்ற ஒருவர், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள 4800 சதுர அடி நிலத்தை விற்பனை செய்வதற்காக ஒருவரோடு ஒப்பந்தம் போடுகிறார்.   இந்த விற்பனைக்காக பாப்புலர் நிறுவனம், தன்னை அங்கீகரித்திருப்பதாகவும் கூறுகிறார். இதை நம்பி ஒருவர் 12 லட்ச ரூபாய் முன்பணமாக கொடுக்கிறார். ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் நிலம் அவர் பெயருக்கு பதிவு செய்து தரப்படவில்லை.  இதற்கிடையே, பாப்புலர் போர்ஜ் நிறுவனம், ராஜாமணி என்பவரை, நிலம் விற்பனை செய்யும் முகவராக அங்கீகரிக்கவில்லை என்றும், அவர் நில விற்பனைக்காக போட்ட ஒப்பந்தம் செல்லாது என்றும் ஒரு வக்கீல் நோட்டீஸ் வருகிறது.   செக் மூலமாக, கம்பெனி பெயருக்கு வழங்கப்பட்ட பணம் அத்தனையைம் வங்கியில் போட்டு, காசாக்கிய ராஜாமணியும், பாப்புலர் போர்ஜ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், நிலத்தை பதிவு செய்யாமல் இழுத்தடித்ததோடு அல்லாமல், ராஜாமணி தங்கள் முகவர் அல்ல என்றும் ஏமாற்றியிருக்கிறார்கள்.
இதனால், பணத்தை பறிகொடுத்து ஏமாந்தவர், சென்னை மாநகர காவல்துறையில் 11.04.2005 அன்று புகார் கொடுக்கிறார். 09.05.2005 அன்று இந்தப் புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி, மற்றும் ஏமாற்றுதல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.   சென்னை மாநகரக் குற்றப்பிரிவு மற்றும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குற்றப்பிரிவுகளில் உள்ள வழக்கம் என்னவென்றால், ஏதாவது ஒரு புகார் வந்தால், அந்தப் புகாரை பதிவு செய்வதற்கு பணம்.   பதிவு செய்த பிறகு குற்றவாளிகளை கைது செய்ய பணம்.   கைது செய்யாமல் இருக்கிறேன் என்று குற்றவாளிகளிடம் பணம்.   முன் ஜாமீன் தாக்கல் செய்தால், அரசு வக்கீலிடம் பேசி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறேன் என்பதற்கு பணம்.   முன் ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் வரை கைது செய்யாமல் இருப்பதற்கு பணம்.  கைது செய்தால் உனக்கு வரவேண்டிய பணம் வராது, ஆகையால், சமரசம் செய்து கொள் என்று புகார்தாரரிடம் பேசி கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு பணம்.   அதையும் மீறி கைது நடவடிக்கை நடந்தால், உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்ய மனு போட ஆலோசனை கூறி, அந்த வழக்கில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு பணம். இப்படி பல்வேறு படிகளை கடந்தே ஒரு வழக்கு அதன் முடிவை அடையும்.
இந்த வழக்கில் முதல் படியே தாண்டாததால், புகார்தாரர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, தனது வழக்கை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்றுமாறு உத்தரவு கோருகிறார். 22.08.2005 அன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை சென்னை மத்தியக் குற்றப்பிரிவிலேயே வேறு ஒரு பிரிவுக்கு மாற்றி, மூன்று மாதத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறது. மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் சாவகாசமாக 30.03.2007 அன்று இந்த வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்கிறது காவல்துறை. இப்படி மேல்நடவடிக்கையை கைவிட்டு அறிக்கை தாக்கல் செய்தால், புகார் கொடுத்தவருக்கு தகவல் சொல்ல வேண்டும்.  ஆனால், அப்படி எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் வசதியாக மறந்து விடுகிறது காவல்துறை.
புகார்தாரர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், காவல்துறையின் இறுதி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவில் தீர்ப்பளித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், ஏற்கனவே விசாரித்த அதிகாரிக்கு பதிலாக வேறு ஒரு அதிகாரி, மேல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் என்று உத்தரவிடுகிறது. மீண்டும் இந்த வழக்கை விசாரித்த உதவி ஆய்வாளர் 21.03.2011 அன்று இந்த வழக்கில் காவல்துறை விசாரிக்க ஏதுமில்லை இது ஒரு சிவில் வழக்கு என்று அறிக்கை தாக்கல் செய்கிறார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத புகார்தாரர் மீண்டும் சைதை நீதிமன்றத்தில் இதை எதிர்த்து மேல் விசாரணைக்கு உத்தரவிடும்படி, ஒரு மனுத்தாக்கல் செய்கிறார். இந்த வழக்கில் சைதை நீதிமன்றம், 10.11.2011 அன்று, சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கிறது. அந்த உத்தரவில், வேறு ஒரு காவல்துறை ஆய்வாளரிடம் இந்த வழக்கை ஒப்படைத்து உரிய விசாரணை நடத்துமாறு கூறுகிறது.
இந்த வழக்கை ஒழுங்காக விசாரிக்க மாட்டார்கள் என்று அஞ்சும் புகார்தாரர், வழக்கை சிபி.சிஐடி விசாரணைக்கு மாற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். சென்னை உயர்நீதிமன்றம் 10,07.2012 அன்று தனது தீர்ப்பில்,  குற்றப்பிரிவில் உள்ள உதவி ஆணையர் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
இந்த உத்தரவின்படி, விசாரணையை மேற்கொண்ட முருகேசன் என்ற உதவி ஆணையர், நிலம் இருக்கும் இடத்தை பார்வையிட்டு விட்டு,  புகார்தாரரை நேரில் ஆஜராகச் சொல்கின்றனர்.  அவரும் அதிகாரியைப் பார்க்கிறார்.  ஆனால், அதன்  பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.  இதனால், புகார்தாரர் தனது வழக்கறிஞரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி, என்ன ஆயிற்று என்று விசாரிக்கச் சொல்கிறார். ஆனால் காவல்துறை ஆணையரைப் பார்க்க முயன்றாலும் முடியவில்லை.  உதவி ஆணையரைப் பார்க்க முயன்றாலும் முடியவில்லை. இறுதியாக 30.12.2012 அன்று இந்த காவல் ஆய்வாளரை வழக்கறிஞர் சந்தித்தபோது, இந்த வழக்கு மேல் நடவடிக்கை இன்றி முடிக்கப்பட இருப்பதாகவும், அதே போல இவ்வழக்கை முடிக்க உதவி ஆணையர் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மீண்டும் இந்த வழக்கை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் புகார்தாரர். இதன் அடிப்படையிலேயே மேலே குறிப்பிட்டபடி, சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஜார்ஜை காய்ச்சி எடுத்திருக்கிறார் நீதியரசர்.
நீதியரசர் கோபப்பட்டதில் ஏதாவது தவறு இருக்கிறதா ?   ஒரு நபரிடம் நிலத்தை விற்கிறேன் என்று ஒரு கும்பல் 12 லட்ச ரூபாயை மோசடி செய்கிறது.  அந்த நபர் உயர்நீதிமன்றத்தை அணுகி, காவல்துறை வழக்கை விசாரிக்குமாறு உத்தரவு பெறுகிறார்.  அதற்குப் பிறகு 2005ம் ஆண்டு முதல் கடந்த 7 ஆண்டுகளாக விசாரிக்காமல் தண்ணி காட்டுகிறார்கள் என்றால் இவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் ?  உயர்நீதிமன்றத்தில் ஆணை பிறப்பித்த பிறகும் இதே நிலைதான் என்றால், உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் ?
இந்த வழக்கின் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பின்படி வெள்ளியன்று ஜார்ஜ் ஆஜராகியிருக்க வேண்டும்.
காலை 10.30 மணிக்கே அதிமுக அடிமைகள்…. மன்னிக்கவும், அரசு வழக்கறிஞர்கள், வண்டு தலைமையில் நீதிபதி ஆறுமுகசாமியின் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.   நீதிமன்றம் தொடங்கியதும், இந்த வழக்கு குறித்து ஆரம்பித்தார் வண்டு.  நீதிபதி, எத்தனையாவது ஐடெமாக இன்றைய வழக்குப் பட்டியலில் வருகிறது என்று வினவினார்.   வண்டு 99 என்றார்.  என்ன விஷயம் கூறுங்கள் என்றார்.  கமிஷனர் சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்களை கவனிக்க வேண்டும் அதனால் இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார். அந்த வழக்கு வருகையில் இது குறித்து கூறுங்கள் என்று கூறி விட்டு நீதிபதி, மற்ற வழக்குகளை கவனிக்கத் தொடங்கி விட்டார்.  வண்டு உள்ளிட்டோர் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
பிற்பகல் 12.30 மணியளவில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே நீதிபதி ஆறுமுகசாமியின் நீதிமன்றத்தில் கூட்டம் அலைமோதியது.   வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், உளவுத்துறையினர் என்று எள் விழாத அளவுக்கு கூட்டம்.
ஐடெம் 99 என்று நீதிமன்ற அதிகாரி அழைத்ததும் அனைவரும் கண்களும் காதுகளும் கூர்மையாயின.  அனைவரது கவனமும் நீதிபதியின் மீது திரும்பியது.
வழக்கு அழைக்கப்பட்டதும், வண்டு மை லார்ட் என்று வழக்கம் போலத் தொடங்கினார்.  ஆணையர் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.  இன்று அவர் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றார்.  எப்போது அவரால் வர முடியும் என்றார். கமிஷனர் பதவி பல சட்டம் ஒழுங்கு பணிகளை கவனிக்க வேண்டிய பதவி என்றார் வண்டு.  அப்போது வரவே மாட்டாரா என்றா நீதிபதி.
இணை ஆணையர் வந்திருக்கிறார் என்றார்.  உடனே சேஷசாயி அந்த நெருக்கடியில் முன் வரிசைக்கு சென்றார்.  யார் இவர் என்றார் நீதிபதி.  இவர் இணை ஆணையர் என்றார்.  ஏன் அவர் சீருடையில் இல்லை என்றார்.  அவர் க்ரைம் ப்ரான்ச் என்றார் வண்டு.   நீதிபதி அதை கண்டுகொள்ளாமல் அடுத்த விவகாரத்துக்கு சென்றார்.    க்ரைம் ப்ரான்ச்சில் இருந்தால் நீதிமன்றத்துக்கு சாதாரண சட்டை பேன்ட் அணிந்து வரலாம் என்று எந்த விதிவிலக்கும் கிடையாது.  காவல் துறை அதிகாரி நீதிமன்றத்துக்கு வருகையில் முழு சீருடையில் வர வேண்டும்.  உளவுப் பிரிவோ, குற்றப்பிரிவிலோ இருந்தால், கோட் அணிந்து வர வேண்டும் என்பதே மரபு.  இந்த அடிப்படை மரபைக் கூட பின்பற்றாது நீதிமன்றத்துக்கு சேஷசாயி வந்திருந்தார் என்றால் அவர் நீதிமன்றத்துக்கு எந்த அளவு மரியாதை தருகிறார் என்பது விளங்குகிறது.
Seshasai-IPS2
இந்த மாதிரி கோர்ட்டுக்கு ஸ்டைலா வந்துருக்கலாம்ல…. என்ன சேஷசாய் சார்…. 
நீதிபதி, “பாருங்கள் ஏ.ஜி… இந்த நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி கவலை கொள்கிறது. இந்த நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் இரண்டு தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றனர்.  அந்த உத்தரவுகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பதே கேள்வி.  அந்த உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா ?  ஏன் எடுக்கவில்லை.   ஆணையர் வருகிறாரா இல்லையா”  என்றார்.
இன்று சென்னையில் இஸ்லாமியர்களின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது.  அவர்களுக்கு எதிர்த்தரப்பினரும் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.  அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.  அதனால் அவரால் வர இயலாது என்றார் வண்டு.
நீங்கள் அரசு தலைமை வழக்கறிஞர்.   நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.  அவர் எப்போது வருவார் என்று சொல்லுங்கள்.
மை லார்ட்… மாநகர காவல் ஆணையாளர்….. என்று இழுத்தார் வண்டு.
நீதிபதி “பாருங்கள் ஏ.ஜி… இன்று செய்தித்தாளைப் பார்த்தீர்களா.. ?  ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் தலைமை நீதிபதியின் முன் ஆஜராகி மன்னிப்புக் கோரியுள்ளனர்.   இதுதான் நீதிமன்றத்துக்கு கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை.  இந்த மரியாதை கூட உங்களிடம் இல்லையா.. ?  இந்த நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து உள்ளது.  அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை.  அது குறித்து யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே..  இதை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை ?  ஏன் யாரையுமே தற்காலிக பணி நீக்கம் செய்யவில்லை ?  காவல்துறையில் இது வரை யாரையுமே தற்காலிக பணி நீக்கம் செய்ததில்லையா ? தவறிழைத்த அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்வதில் உங்களுக்கு என்ன   சிரமம் ?
இது ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பு.  ராணுவத்தின் கட்டளை போல அதை நிறைவேற்ற வேண்டாமா ?  இதில் இரண்டாவது கருத்துக்கு ஏதாவது இடம் இருக்கிறதா ? “
“மை லார்ட்… தவறிழைத்த அத்தனை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கிறோம்.“ என்றார் வண்டு.
நீதிபதி “நீங்கள் அரசுக்காக ஆஜராகிறீர்களா…  காவல்துறைக்காக ஆஜராகிறீர்களா ? “
“அரசுக்காக ஆஜராகிறேன்“
“நான் அரசு குறித்து எந்த குறையும் கூறவில்லையே…. காவல்துறையின் செயல்பாடுகள் குறித்துதானே கவலை தெரிவித்துள்ளேன்…. ?    நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் அரசு தலைமை வழக்கறிஞர்.  ஆனால், காவல்துறையின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குப் புரிகிறதா ? நீதிமன்றத்துக்கு அவர்கள் அளிக்கும் மதிப்பு என்ன என்பது புரிகிறதா ?  நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால் அதை நிறைவேற்ற வேண்டியது காவல்துறையின் கடமை இல்லையா ?  நீதிமன்றத்தின் முன் ஆஜராவதில் காவல்துறை ஆணையருக்கு என்ன சிரமம் உள்ளது ?  இது அவரது கடமையின் ஒரு பகுதி கிடையாதா ?  இது எனது உத்தரவு கிடையாது.   இதே நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  இரண்டு நீதிமன்ற நடுவர்கள் (Magistrates) உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  அவர்கள் உத்தரவை மதிக்காததால்தானே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசுத் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில் இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா ? “
“இருக்கிறது மை லார்ட்…“
“அப்படியானால் கமிஷனரை ஆஜராகச் சொல்லுங்கள்“
“தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்.  ஒருவரைக் கூட விடாமல் நடவடிக்கை எடுக்கிறோம்.“
“நடவடிக்கை எடுங்கள்.  உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள். விவாதிப்போம்.  விவாதித்து இறுதி முடிவுக்கு வருவோம்.  நீதிமன்றம் ஒருவரைத் தூக்கில் போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் என்றில்லை.   உங்கள் வாதங்களை பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் உத்தரவுகள் முதலில் கீழ்படியப்பட வேண்டும்“ என்றார்.
“லை லார்ட்….  ஆணையர் …..“
“நாம் வியாழக்கிழமை சந்திப்போம்….  அன்று மீண்டும் விவாதிப்போம்“ என்றார் நீதிபதி.
“மை லார்ட்… பொங்கல் விடுமுறை வருகிறது….“
“நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் விடுமுறை நாட்களில் கூட வர வேண்டும்.  விடுமுறை நாட்களில் அவருக்கு வேலை இல்லையா என்ன… மேலும் வியாழக்கிழமை தானே வரச்சொல்லியிருக்கிறேன்.  அன்று வாருங்கள் பேசிக்கொள்ளலாம். அன்று கமிஷனரை வரச் சொல்லுங்கள்“
“மை லார்ட்….  அன்று அவர் சட்டம் ஒழுங்கு பணிகளை கவனிக்க வேண்டும். “
“ஓ… வியாழக்கிழமை அவருக்கு வேலை இருக்கும் என்பதை நீங்கள் இன்றே கணிக்கிறீர்களா… ? “
“இல்லை லை லார்ட்….   போராட்டங்கள் நடைபெற உள்ளன…“
“சென்னை போன்ற நகரங்களில் தினந்தோறும் ஸ்ட்ரைக், போராட்டங்கள் நடக்கும்…. வியாழக்கிழமை சந்திக்கலாம்.. “
“மை லார்ட்…  மை லார்ட்….“ (அம்மா…. தாயே……..  வீட்ல யாரும் இல்லையாம்மா…………..)
நீதிபதி “அரசுத் தலைமை வழக்கறிஞர் ரொம்ப பிசியான நபர்.  அவருக்கு ஏராளமான வேலைகள் இருக்கும்… நாம் அவர் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அடுத்த வழக்கை கூப்பிடுங்கள்“ என்றார் நீதிபதி.
வேறு வழியில்லாமல் வண்டு முருகன் தன் படைப் பரிவாரங்களோடு கிளம்பினார்.  இதுதான் வெள்ளிக்கிழமை நீதிமன்ற நிகழ்வுகள்.
நீதிபதி ஆறுமுகசாமியின் உத்தரவு 9ம் தேதி வெளியானதுமே, சென்னை மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவினர் (Intelligence Services) பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒரு புதிய கருத்தை விதைத்தனர்.  அது என்னவென்றால் சென்னையில் வியாழன், வெள்ளி மற்றும் சனி அன்று நடந்த ஆபரேஷன் ஹம்லா அன்று நீதிபதி ஆறுமுகசாமியின் பாதுகாப்பு அதிகாரியை, காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்து விட்டு அனுப்பி விட்டனர்.  என்னுடைய பாதுகாப்பு அதிகாரியை எப்படி சோதனை செய்யலாம் என்று கடுமையாக கோபமடைந்த நீதிபதி இப்படிச் செய்து விட்டார் என்று செய்தியை பரப்பினார்கள்.
நடந்தவை என்னவென்று முழுமையாக விசாரிக்கப்பட்டது.  ஆபரேஷன் ஹம்லா என்பது தீவிரவாதிகள் சென்னையில் நுழைந்தால் காவல்துறை அதிகாரிகள் கண்டு பிடிக்கிறார்களா என்று அவர்களை சோதனை செய்ய காவல்துறையாலேயே நடத்தப்படும் ஒரு ஒத்திகை.   மும்பையில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, கடல் வழியே போலித் தீவிரவாதிகளை வரவைத்து, அவர்களை காவல்துறையினர் கண்டு பிடிக்கிறார்களா என்று தொடர்ந்து வருடந்தோறும் ஒத்திகை நடத்தப்படுகிறது. அப்படி கடந்த வாரம் ஒத்திகை நடந்தபோது நீதிபதி ஆறுமுகசாமியின் பாதுகாப்பு அதிகாரி சுப்பராயலு மற்றும் நீதிபதியின் அலுவலக உதவியாளர் ஆகிய இருவரும், சென்னை அபிராமி மாலுக்கு ஒரு வேலையாக சென்றிருக்கின்றனர்.   பாதுகாப்பு அதிகாரி என்ற முறையில், அந்த உதவி ஆய்வாளரிடம் அரசு வழங்கிய துப்பாக்கி இருக்கிறது.
இவரை அபிராமி மாலில் வைத்து, ஆபரேஷன் ஹம்லாவில் ஈடுபட்ட அதிகாரிகள் பிடித்து விடுகிறார்கள்.    துப்பாக்கி பறிமுதல் செய்யப்படுகிறது.  அவர் நான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி என்று கூறுகிறார்.   எதுவா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லு என்கிறார்கள்.  நான் எனது இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறேன் அதில் ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்கிறார்.  அதெல்லாம் நடக்காது.. மரியாதையா ஆட்டோவில் ஏறு என்று சபாரி அணிந்திருந்த அந்த பாதுகாப்பு அதிகாரியை, இரண்டு பக்கமும் இரு காவலர்கள் கையைப் பிடித்துக் கொள்ள ஆட்டோவில் ஏற்றி செக்ரட்டேரியட் காலனி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அங்கே சென்றதும், அவர் யாரிடமும் பேச அனுமதிக்கப்படவில்லை.  அவரோடு வந்திருந்த அலுவலக உதவியாளர் நீதிபதியின் பி.ஏவுக்கு தகவல் சொல்லி அதன்  அடிப்படையில் அவர் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு  பேசுகிறார்.  அவர் சுப்பராயலு, நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரிதான் என்று உறுதி செய்தும், அவரை விடுவிக்க மறுக்கிறார்கள்.  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், அவர் காவல்நிலையத்தில் இருந்த பென்ச்சில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்.  இது வரை தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.  இதன் பிறகு, சுப்பராயலு எந்தச் சூழலில் விடுவிக்கப்பட்டார் என்பதற்கு தெளிவான தகவல்கள் இல்லை.
இதற்குப் பிறகு, கடந்த திங்களோ, செவ்வாயோ என்ன நடந்தது என்பதை விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி ஜார்ஜை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் எகத்தாளமாக பேசியதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.  ஆனால் இதை உறுதி செய்ய முடியவில்லை.
நீதிபதி ஆறுமுகசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் சுப்பராயலுவை சவுக்குக்கு 12 வருடங்களாக தெரியும்.  அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபியாக இருந்த கணபதி என்ற அதிகாரியின் ஓட்டுனர்.  பத்து பைசா லஞ்சம் வாங்காத ஒரு அதிசயமான போலீஸ் காரர் அவர்.  வழக்கமாக டிஜிபியின் ஓட்டுனராக இருப்பவர்கள் ஓவராக அலட்டிக் கொள்வார்கள். ஆனால் சுப்பராயலு மிகவும் எளிமையான மனிதர்.    அதிர்ந்து பேசக் கூட மாட்டார்.  லஞ்சம் வாங்காமல் உழைத்து வாழ்வை ஓட்ட வேண்டும் என்று நினைக்கும் விதிவிலக்கான மனிதர்.  அதனால்தான் அவர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.  சம்பாதிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தாரேயானால், போக்குவரத்துப் பிரிவில் இருந்து ஹெல்மெட் போடாத தலைகளைத் தேடிக் கொண்டிருந்திருப்பார்.
காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால்,
சுப்பராயலுவை காவல் நிலையத்தில் இரண்டு மணி நேரம் வைத்திருந்ததை மனதில் வைத்துதான் நீதிபதி ஆறுமுகசாமி இப்படி கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
சுப்பராயலு, ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர்.  பாதுகாப்புப் பிரிவில் (Secruity Branch CID)யில் பணியாற்றுகிறார்.  அவருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி, அரசு வழங்கியது.  சுப்பராயலு உண்மையிலேயே காவல்துறையில் பணியாற்றுகிறாரா, நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியா என்பதை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி செய்து, ஐந்து நிமிடத்தில் கண்டு பிடிக்க முடியும்.  செக்யூரிட்டி பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்திருந்தால் இரண்டு நிமிடத்தில் சுப்பராயலு யார் என்பதை உறுதி செய்திருப்பார்கள்.   இதைச் செய்யாமல், சபாரி உடையில் இருந்த ஒரு உதவி ஆய்வாளரை பொதுமக்கள் முன்னிலையில், இரண்டு காவலர்கள் இரு பக்கமும் அவர் கையைப் பிடித்துக் கொள்ள, ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்கையில் சுப்பராயலு எப்படிக் கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள்.   என்ன குற்றம் செய்தார் சுப்பராயலு இப்படி ஒரு அவமானத்தைச் சந்திக்க ?  சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் மற்ற அதிகாரிகளைப் போல மாமூல் வாங்கி வாழ்க்கையை ஓட்டுபவர் அல்ல சுப்பராயலு.  கடந்த 12 ஆண்டுகளாக நேர்மையாக பணியாற்றியவர்.    மனம் புழுங்கி காவல் நிலையத்தில் அமர்த்தும் அளவுக்கு என்ன குற்றம் செய்து விட்டார் சுப்பராயலு…. ?  ஒரு நாள் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராவதை இத்தனை அவமானமாக கருதும் ஜார்ஜுக்கு, பொதுமக்கள் பார்க்கையில் ஆட்டோவில் போலீஸ்காரர்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றால் எப்படி இருக்கும் என்பது தெரியுமா ?  இந்த ஒரே காரணத்துக்காக ஜார்ஜை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் மனுநீதிச் சோழன் சிலை அருகே, பட்டாபட்டி அண்டர்வேரோடு ஒரு நாள் முழுக்க வெயிலில் நிற்க வைக்கலாம்.   சக மனிதனின் கஷ்டத் உணராத அதிகாரிகளை கடுமையான வழியில்தான் உணர வைக்க வேண்டும்.
தங்களோடு பணியாற்றும் ஒரு சக உதவி ஆய்வாளரை இப்படி அவமானப்படுத்தி அலைக்கழிக்கும் காவல்துறையினர், உங்களையும் என்னையும் எப்படி நடத்துவார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.  ஒரு காவல்துறை உதவி ஆய்வாளருக்கே இந்த நிலை என்றால் ஒரு பாமர மனிதனை இந்தக் காவல்துறை எப்படி நடத்தும் என்பதை சற்று யோசியுங்கள் தோழர்களே…..
ஆனால், நீதிபதி ஆறுமுகசாமி இந்த சம்பவத்தை மனதில் வைத்துத்தான் காவல்துறை ஆணையரை நீதிமன்றத்துக்கு வரும்படி உத்தரவிட்டிருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வதற்கில்லை.  நீதிபதி உத்தரவிட்டிருக்கும் வழக்கு 2005ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.  12 லட்ச ரூபாய் முன் பணம் பெற்றுக் கொண்டு ஒரு நபர், 7 ஆண்டுகளாக நிலத்தை பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்.   அந்த வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை இரண்டு உயர்நீதிமன்ற உத்தரவுகளையும், இரண்டு நீதித்துறை நடுவர் மன்ற உத்தரவுகளையும் மதிக்காமல், தங்கள் இஷ்டத்துக்கு நாங்கள் வைத்ததே சட்டம் என்று இறுமாப்பாக இருந்தால் அந்தக் காவல்துறையின் தலைவரை நீதிமன்றத்துக்கு வரச் சொல்லாமல், விருது கொடுத்து கவுரவிக்கவா முடியும் ? சின்மயி புகார் கொடுத்தால் இரண்டு நாளில் கைது.  சாதாரண நபர் புகார் கொடுத்தால் ஏழு வருடங்களாக கட்டப் பஞ்சாயத்தா ?
ஜார்ஜை நீதிமன்றத்துக்கு வரவழைத்து உத்தரவிட்டு, நீதித்துறையின் மாண்பை நீதியரசர் ஆறுமுகசாமி நிலைநாட்டியுள்ளார்.  நீதித்துறையின் அதிகாரம் என்ன என்பதை காவல்துறையினருக்கு உணர்த்தியுள்ளார் நீதியரசர் ஆறுமுகசாமி.  அவர் பிறப்பித்த உத்தரவு சட்டப்படி சரியானது மட்டுமல்ல, எல்லா நியதிகளின்படியும் நியாயமானது.  19 பிப்ரவரி 2009 அன்று நீதிமன்றத்துக்குள் புகுந்து, வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பொதுமக்களையும், காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறை அதிகாரிகளை நீதியரசர் ஆறுமுகசாமியைப் போல, நீதிமன்றத்துக்கு வரவழைத்து சட்டையை கழற்றியிருந்தால், நீதிமன்றம் என்றால் என்ன, அதன்  அதிகார வீச்சு என்ன என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு விளங்கியிருக்கும்.  அப்படி அன்று நீதிபதிகள் செய்யத்தவறி, கோழைகள் போல வாய் மூடி மவுனிகளாக இருந்ததன் விளைவே, நீதிமன்றத்தின் உத்தரவுகள் குப்பைக் கூடைக்குப் போகும் இன்றைய நிலை.
நீதியரசர் என்ற விகுதிக்கு ஏற்றார்ப் போல நடந்து கொண்டிருக்கும் நீதிபதி ஆறுமுகசாமிக்கு சவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.  நீதிபதி ஆறுமுசாமியைப் போல, தமிழகத்தில் உள்ள மற்ற அத்தனை நீதிபதிகளும், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும்.  அதுதான் ஜனநாயகத்துக்கு நன்மை பயக்கும்.
JAYALALITHAA__812862f
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, காலம் கடந்து பிறந்த செல்லப்பிள்ளையைப் போல காவல்துறையை உச்சி முகர்ந்து கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  காவல்துறைக்கு கொடுக்கப்படும் அளவுக்கு மீறிய அதிகாரம் அவருக்கு எதிராக திரும்பும் என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.  அப்படி அவர் உணரத் தவறுவாரேயானால் அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க என்று சொல்லும் ஜெயலலிதாவுக்கு 2014ல் நாற்பதிலும் நாமம் என்பதை தமிழக மக்கள் பதிலாகச் சொல்லுவார்கள்.

கருத்துகள் இல்லை: