செவ்வாய், 4 செப்டம்பர், 2018

ஜனநாயகத்தின் மீதான ஒடுக்குமுறை

உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை ஒன்று உண்டு. தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்பும் கட்டுப்பாடும் கொண்ட நவீன ஜனநாயக நாடு, வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நாடும் கொண்டிராத ஒரு உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்டதாக இருக்கும் என்பதுதான் அது. ஜனநாயகம் என்பது, ஒரு தனிநபர் குடிமகனாக அங்கீகரிக்கப்படுவது. ஆனால் ஒரு ஜனநாயக அரசு அச்சுறுத்தலாகவும், கொலை செய்யக்கூடியதாகவும் பயத்தை உண்டாக்குவதாகவும், நடுங்க வைப்பதாகவும் இருக்குமாயின், ஒரு சாதாரண குடிமகனை விட மிக பலவீனமான அநாதரவான நபர் வேறும் யாரும் இருக்க முடியாது.
நம்முடைய காலத்தில் நம்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய இன்னொரு அமைப்பான சந்தை முழுவதுமாக நெறிமுறையற்று இருக்கிறது. அது மனித குலத்தின் வலியை உச்சபட்சமாக அலட்சியம் செய்கிறது. அது வளங்களுக்காகவும், உழைப்புக்காகவும் லாபத்துக்காகவும் சுரண்டப்படும் தனிமனிதர்கள் மீது இரக்கமும் காட்டுவதில்லை, ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை.

இப்படிப்பட்ட தனிமனிதர்களுக்கும் எங்கும் நீக்கமற ஆதிக்கம் செலுத்தும் சர்வ வல்லைமை படைத்த அரசுக்கும் இடையே இருக்கும் ஒரே தவிர்க்க முடியாத பிணைப்பு குடிமை சமூகம் மட்டும்தான். இந்த மாய பிணப்பில்தான் தனிமனிதர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து கூட்டாக ஒருங்கிணைந்த வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒருங்கிணைந்த குடிமை வாழ்க்கைதான், அரசின் கொடுங்கோல் சக்தியை மனுக்கள், போராட்டங்கள், தர்ணாக்கள் மற்றும் சட்ட போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் எதிர்கொள்ளும் திறனை தனிமனிதர்களுக்கு வழங்குகிறது. அரசியல் கட்சிகள் பொறுப்பற்று போகும் நிலையில் இந்தத் துடிப்பான குடிமை சமூகம் மூலம்தான் குடிமக்களே களத்தில் இறங்குவதற்கான ஆற்றலையும் உரிமையையும் பெறுகிறார்கள்.
இந்தக் குடிமை சமூகம் என்பது பன்மையானது. ஃபுட் பால் க்ளப்பில் தொடங்கி, வாசகர் வட்டம், திரைப்பட ரசிகர்கள் கூட்டம் எனப் பல்வேறு வகைகளில் செயல்படுகின்றன. ஒவ்வொரு ஜனநாயக குழுவும் முக்கியமானதுதான், ஆனால் குடிமக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் மனித குலத்தின் நலனுக்கு மிகவும் இன்றியமையாதவையாகும். 1975-77 எமர்ஜென்சி காலகட்டத்தில் பல இந்திய குடிமக்கள் எதேச்சதிகாரத்தினால் கண்மூடித்தனமாகக் கைது செய்யப்பட்டனர், மற்றவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. இதன் விளைவாக எமர்ஜென்சிக்குப் பிறகு, மக்கள் சுதந்திர இயக்கங்கள் இந்திய அரசியலில் அதிகரிக்க ஆரம்பித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்த இயக்கங்கள் நாளடைவில் வளர்ச்சியடைந்து மனித உரிமைகளுக்கான இயக்கமாக மிக இன்றியமையாத இடத்தைப் பிடித்தன. அதன் மூலம் இந்திய அரசியல் சாசனம் தனது குடிமக்களுக்கு வழங்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமைகளைப் பாதுகாக்க போராடி வந்தன.
உலகளவில் பெரும்பாலான அரசியல் புரட்சிகள் வாழ்வதற்கும், சுதந்திரத்துக்குமான உரிமைக்கான போராட்டங்களால்தான் நிகழ்ந்திருக்கின்றன. இந்த இரண்டு உரிமைகள் தான் மனிதர்களுக்குக் கிடைக்காமல் சிக்கலுக்குள்ளாகியுள்ள  மற்ற எல்லா உரிமைகளுக்கும் ஆதாரமாக இருக்கின்றன. இந்த உரிமைகள் என்பது சரியான காரணமில்லாமல் அரசு தரப்பினால் யாரும் துன்புறுத்தப்படவோ, கொல்லப்படவோ கூடாது என்பதும், கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படக்கூடாது என்பதும் தான். வாழ்வதற்கான உரிமை என்பது மிக அடிப்படையான உரிமை. ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் நாம் சிறைப்படுத்தப்பட்டால் நம்முடைய வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதுதான் நிஜம்.
இதுவரை பல்வேறு மனித உரிமை குழுக்கள் இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாவலர்களாக இருந்துவருகின்றன. இவர்கள்தான் எதேச்சதிகார சிறைப்பிடிப்புகளையும், சிறைக் கொலைகளையும், ஆபத்தான என்கவுண்டர்களையும், அரசையோ, ஆதிக்க குழுவினரையோ எதிர்த்து பேசுவபர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் இதுவரை முன்னிருந்து விசாரணை செய்து நீதி கிடைக்கவும் போராடிவருகிறார்கள். மேலும், மனித உரிமை அமைப்புகள், இனவாத வகுப்புவாத வன்முறை சம்பவங்களின் காரணிகளையும் விளைவுகளையும் கவனித்து பதிவு செய்துவருகின்றன. அவை அரசின் அதிகார துஷ்புரயோகத்தைப் பதிவு செய்த ஆவணக் காப்பகமாகவே திகழ்கின்றன. இவர்கள் தான் இந்தியாவில் மிகச்சிலர் மட்டுமே துணிந்து கேட்கத்தகுந்த கேள்விகளைக் கேட்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் இவர்கள் தான், ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் போன்ற சமூகத்தின் பலவீனமிக்க பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துவருகிறார்கள்.
மனித உரிமைகளுக்காகவும் தனிமனித சுதந்திரத்துக்காகவும் போராடுபவர்கள் பெரும்பாலும் வழக்கறிஞர்களாக, கல்விமான்களாக, பத்திரிகையாளர்களாக அல்லது பொது நல புத்தி உடைய இந்தியக் குடிமகன்களாக இருக்கிறார்கள். இவர்களின் கவலையெல்லாம் பின் தங்கிய, புறக்கணிக்கப்பட்ட, பலவீனமிக்க பிரிவினரையும் ஏழைகளையும் பற்றியாகத்தான் இருக்கிறது. இந்தக் குடிமை சமூக செயற்பாட்டாளர்கள் தான், நம் சமூகத்தின் தார்மீக மனசாட்சியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா குடிமை சமூக குழுக்களும் இப்படி இருப்பதில்லை, சிலர் பணத்துக்காக இந்தப் பணியை ஒரு தொழிலாகச் செய்துவருகிறார்கள். அதேபோல் சில ஊடகங்களும் தங்களுடைய கார்ப்பரேட் முதலாளிகளால் கோழைகளாக்கப்படுகின்றன. புகழுக்காகவும் ஆதாயத்துக்காகவும் ஊடகவியலாளர்கள் அடிபணிந்து போய்விடுகிறார்கள். இதைவிட வருந்ததக்க விஷயம், பெரும்பான்மை இந்தியர்கள் காவலர்களால் சக மனிதர்கள் துன்புறுத்தப்படுவதை, வளங்கள், வாழ்வாதாரத்துக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு தாக்கப்படுவதை, கார்ப்பரேட்டுகளால் சுரண்டப்படுவதை, ஊடகங்களால் மறக்கடிக்கப்படுவதை எல்லாம் பார்த்தும் எதுவும் பேசாமல் வாய்மூடிக் கிடக்கிறார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே இவர்களுக்காகத் தோள் கொடுக்கிறார்கள்.
இவர்களுடைய பங்கு ஜனநாயகத்துக்கு மிகவும் அவசியமாக உள்ளது. அதுவும் இப்போதைய காலகட்டத்தில் மிக இன்றியமையாதவர்கள் இவர்கள். காரணம், இப்போது ஆளும் அரசு தர்மத்தையும் அறத்தையும் நேரடியாகவே புறந்தள்ளி, இந்த நிலையையே யதார்த்தமாகச் சித்தரித்து கோடான கோடி இந்தியக் குடிமக்களையும் உச்சகட்டமாக அலட்சியம் செய்கிறது. குடிமை சமூகத்தின் தேவையை நிராகரிக்கும் தலைவர்கள்தான் நம்மை ஆள்கிறார்கள். இவர்களின் பின்புலமாக இருக்கும் ஆர்எஸ்எஸ்ஸின் கர சேவகர்களும், இந்து முன்னணி அமைப்புகளும்,  தனிமனிதனுக்கும் சந்தைக்கும் அரசுக்கும் இடையே ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார்கள். இதன் விளைவுகள் மிக மோசமானவை. பத்தாண்டுகளுக்கு முன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாம் உணவு, வேலைவாய்ப்பு, கல்வி, தகவல், மற்றும் நிலம் ஆகியவற்றுக்கான உரிமைகளைக் கேட்டுப் போராட வேண்டியிருந்தது. அப்போது குடிமை சமூக செயல்பாடுகளால் இந்தியா சமூக ஜனநாயக நாடாக மாறுவதாக எழுதினோம். ஆனால், இன்று மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் துன்புறுத்தலுக்கு எதிராகவும் வாழ்க்கைக்கும் சுதந்திரத்துக்கும் உரிமை கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றையும் தாண்டி இவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கும் இரக்கமற்ற அரசுக்கும், அதன் கைகூலியாகச் செயல்படும் காவல்துறைக்கும் வன்முறை கலவரங்களில் நிபுணத்துவம் பெற்ற வலது சாரி இயக்கங்களின் உறுப்பினர்களுக்கும் சவால் விடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
1970களில் அயர்லாந்து வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான ஜான் கரன், முடிவுறாத அரசியல் விழிப்புணர்வுக்காகப் போராடும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் கிடைக்கும் தண்டனைதான் நாம் பெறும் சுதந்திரத்துக்கான விலை என்று குறிப்பிட்டார். அரசும், வலது சாரி அமைப்புகளும்  மனித உரிமை செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வருகின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காகப் போராடியவர்களாக அறியப்பட்ட வழக்கறிஞர்கள், கவிஞர்கள், கல்விமான்கள், செயற்பாட்டாளர்களாகிய சுதா பரத்வாஜ், வரவர ராவ், வெர்னன் கொன்சால்வ்ஸ், அருண் ஃபெரைரா, கவுதம் நவ்லகா, ஆனந்த் தெல்தும்தே, ஸ்டான் சுவாமி ஆகியோர் மகாராஷ்டிர காவல்துறையால் வலைக்கப்பட்டார்கள். இவர்களது வீடுகள் சோதனையிடப்பட்டன, சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராளிகள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்குச் சொல்லப்படும் காரணங்கள் எதுவும் உண்மையானதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதோ அல்ல. டிசம்பர் 2017ல் புனேவில் நடந்த எல்கர் பரிஷத் கூட்டத்தில் இவர்கள் பேசியது தான், ஜனவரி 1, 2018ல் பிமா-கொரேகானில் கூடியிருந்த தலித்துகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடக் காரணமாக இருந்தது என்று காவல்துறை சொல்லும் காரணம் அபத்தமானது. முன்னதாக சம்பாஜி பிடே தலைமையிலான ஷிவ் பிரதிஷ்தான், மிலிந்த் எக்போதே தலைமையிலான இந்து எக்தா மன்ச் என்ற இரண்டு இந்து அமைப்புகள்தான் அமைதியாக நடந்த கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது என்பது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மிலிந்த் எக்போதே கைதும் செய்யப்பட்டார். விரைவிலேயே மகாராஷ்ட்ர அரசும், காவல்துறையும் அவரை விடுவித்தது.  ஆனால், இப்போது முற்றிலும் புதிய ஏஜெண்டுகளுடன் நகர்ப்புற-மாவோயிசம் என்று புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து போராளிகளை இலக்கு வைக்கிறது. இந்த வார்த்தை இதற்கு முன் வரலாற்றிலும் இல்லை, புவியியலிலும் இல்லை. இது சுத்த வேடிக்கையாக இருக்கிறது.
இந்த அரசு சமீபத்தில் குடிமை சமூகத்தின் மீது நிகழ்த்தியுள்ள இந்தத் தாக்குதலின் மூலம், அதற்குச் சொந்தமான அமைப்புகள் குடிமைச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாகவே தெரிகிறது. ஆனால், இந்த முயற்சி மீண்டும் கட்சிக்கே திரும்பவும் வாய்ப்புள்ளது. இத்தாலியைச் சேர்ந்த மிகப்பிரபல கோட்பாட்டாளர் அந்தோனியோ கிராம்சி 1920ல் முசோலினி அரசால் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஏன் ரஷ்யாவின் நிலப்பிரபுத்துவ ஜார்களுக்கு எதிராக ஏற்பட்ட புரட்சி, மேற்கத்திய முதலாளித்துவ உலகத்தில் ஏற்படவில்லை?  அவர் சொன்ன பதில், அரசு எப்போது நேரடியாக எந்த குற்றவுணர்வும் இன்றி தனது கொடுங்கோல் சக்தியை மக்கள் மீது பிரயோகிக்கிறதோ, ரஷ்யாவில் நடந்ததுபோல, அப்போதுதான் புரட்சிகள் வெடிக்கும். ஆனால், குடிமை சமூகக் குழுக்கள் உள்ள நாடுகளில் புரட்சிகள் வெடிக்காது. ஏனெனில், அங்கு நடத்தப்படும் ஆதிக்கமும், ஒடுக்குமுறையும் அவர்களுக்குப் பழகிப்போனதாகிவிடும். குடிமக்கள் கிளர்ச்சியடைய வேண்டிய அவசியமே இருக்காது. இந்த ஆழமான ஞான வார்த்தைகளிலிருந்து நம்முடைய ஆட்சியாளர்கள் பாடம் படிப்பார்களா?
நீரா சந்தோகி
நன்றி
தி இந்து
https://www.thehindu.com/opinion/lead/the-crackdown-on-civil-society/article24813624.ece

கருத்துகள் இல்லை: