செவ்வாய், 4 செப்டம்பர், 2018

கர்நாடக மாநகர சபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி .. பாஜக தேறவில்லை

பா.ஜ.,தேறவில்லை,குமாரசாமி,நெருக்கடி,B.J.P,BJP,Bharatiya Janata Party தினமலர் :பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் கோட்டை விட்ட பா.ஜ., முனிசிபல் தேர்தலிலும் தேறவில்லை. இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றுள்ளது.
இதனால் கூட்டணி ஆட்சி நடத்தும் முதல்வர் குமாரசாமி பதவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்தது.ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 80 தொகுதிகளிலும், முன்னாள் முதல்வரான குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் வென்றன. தேர்தலுக்குப் பின் குமாரசாமியின் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தந்தது. ஆனால் தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்கும்படி பா.ஜ.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


பல்வேறு சட்ட பிரச்னைகளுக்கு இடையில் பா.ஜ.,வின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். போதிய ஆதரவு இல்லாததால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் அடுத்த நாளே பதவி விலகினார்.தற்போது, ம.ஜ.த., மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தாலும் கர்நாடகாவில் தினமும் ஒரு அரசியல் குழப்பம் நடந்து வருகிறது.

காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வென்றதால் முதல்வர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா
வலியுறுத்தி வருகிறார். மற்றொரு பக்கம் தன் ஆட்சியைக் கவிழ்க்க சிலர் சதி செய்வதாக முதல்வர் குமாரசாமியும் கூறி வருகிறார். இந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே கர்நாடகாவில், 'முனிசிபல்' எனப்படும் நகராட்சி தேர்தல் ஆக., 31ல் நடந்தது.

இதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., தனித்து போட்டியிட்டன. தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து நிர்வாகம் செய்யவும் திட்டமிட்டன. அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவும், தற்போதுள்ள ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை நிரூபிக்கும் களமாகவும் இந்த தேர்தல் கருதப்பட்டது.

மொத்தமுள்ள 2,662 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் நேற்று இரவு நிலவரப்படி காங்கிரஸ், 982 இடங்களில் வென்றுள்ளது. பா.ஜ., 929 இடங்களிலும், ம.ஜ.த., 375 இடங்களிலும் வென்றன. மற்ற இடங்களில் சுயேச்சை மற்றும் பிற கட்சிகள் வென்றன. காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., இணைந்து 1,357 இடங்களைப் பிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அலை இருந்த போதும் சட்டசபை தேர்தலில் அதைப் பயன் படுத்த பா.ஜ., தவறியது.
தற்போது அரசியல் குழப்பம் நிலவும் நிலையில் முனிசிபல் தேர்தலிலும் பா.ஜ., தேறவில்லை. ''வழக்கமாக நகர்ப் பகுதிகளில் பா.ஜ., தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே காட்டுகிறது,'' என முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

''இந்தத் தேர்தல் முடிவுகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம்,'' என பா.ஜ., மாநிலத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா கூறியுள்ளார். ஆனால், 'மிகப் பெரிய வாய்ப்பை பா.ஜ., தவறவிட்டது; இது, அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட சறுக்கலே' என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த, 2013ம் ஆண்டில் 4,976 இடங்களுக்கு நடந்த முனிசிபல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1,960 இடங்களில் வென்றது. பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலா 905 இடங்களில் வென்றன. சட்டசபை தேர்தலைப் போல தற்போது முனிசிபல் தேர்தலிலும் காங்கிரஸ் தயவுடனே, நகராட்சிகளை நிர்வகிக்க வேண்டிய நிலையில் ம.ஜ.த., உள்ளது.
ஏற்கனவே முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர்கள் குறி வைத்துள்ளனர். தற்போதைய தேர்தல் முடிவுகளால் காங்கிரஸ் கட்சியின் கை மேலும் ஓங்கியுள்ளது. அதனால் எந்த நேரத்திலும் தன் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற நெருக்கடியுடனே முதல்வர் குமாரசாமி ஆட்சி நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிட் வீசி தாக்குதல்; காங்., வேட்பாளர் காயம்:
மர்ம நபர் ஆசிட் வீசியதில் தும்கூரு நகராட்சியில் வார்டு எண் 16ல் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இனாயதுல்லா கான் உள்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த வார்டுக்கான தேர்தல் முடிவு நேற்று காலை அறிவிக்கப்பட்டது. இனாயதுல்லா கான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்சியினருடன் அவர் சாலைகளில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒருவர்கையில் எடுத்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை இனாயதுல்லா கான் மீது வீசியுள்ளார். இதில் கான் மற்றும் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. 'வீரியம் குறைந்த ஆசிட் வீசப்பட்டுள்ளது. அதனால் பெரும் அசம்பா விதம் தடுக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீசி தப்பியோடிய நபரை தேடி வருகிறோம்' என போலீசார் தெரிவித்தனர்.

காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
-குமாரசாமி, முதல்வர்

இந்தத் தேர்தல் முடிவுகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்.
-எடியூரப்பா, பா.ஜ., மாநிலத் தலைவர்

கருத்துகள் இல்லை: