திங்கள், 3 செப்டம்பர், 2018

போலீசிடமே செல்போனை பறித்து சென்ற ரவுடிகள்... மந்தைவெளியில் மோட்டார் சைக்கிளில் ..

tamil.thehindu.com/ மந்தைவெளியில் காவலர்
சீருடையில் இருந்தவரிடமே போலீஸ் என்ற பயமில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் செல்போனை பறித்து தப்பித்துச் சென்றனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் போலீஸாரின் கடும் நடவடிக்கையால் சில நாட்களாக அடங்கி கிடந்த வழிப்பறி நபர்கள் மீண்டும் கைவரிசையை காட்ட துவங்கிவிட்டார்கள். கடந்த வாரம் சென்னை அமைந்தக்கரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சென்னை அமைந்தக்கரையை சேர்ந்த , ராமலிங்கேஸ்வரி என்ற பெண்ணை கீழே இடித்து தள்ளி 6 சவரன் தங்க நகை, 2 ஐ போன், மற்றும் ரூ.16,000 பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ராமலிங்கிஸ்வரிக்கு வாயில் 16 தையல்கள் போடப்பட்டன.

இதேபோன்று சென்னை கொளத்தூரில் கணவருடன் நடந்து சென்ற ரேவதி என்ற பெண்ணை தாக்கி 20 சவரன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்றனர், ரேவதியிடம் தங்கச் சங்கிலி பறித்த அதே கும்பல் அப்துல் ஹமீது என்பவரிடமும் வழிப்பறி நடத்தினர். மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ரேவதி, அப்துல் ஹமீது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போன்று மந்தைவெளியில் வசிக்கும் ஆயுதப்படை காவலரிடம் செல்போனை துணிகரமாக பறித்துச் சென்ற நிகழ்வு நேற்று நடந்துள்ளது. மந்தைவெளி சாலையார் தெருவில் வசிப்பவர் மணிமாறன் (25). சென்னை ஆயுதப்படையில் காவலராக உள்ளார். இவர் நேற்றுக் காலை சீருடையில் பணிக்கு சென்றுக்கொண்டிருந்தார்.
மந்தைவெளி வி.கே.ஐயர் சாலை எச்டிஎப்சி வங்கி அருகில் நடந்து செல்லும்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றது. போலீஸ் உடையில் இருப்பவர் என்று தெரிந்தும் தைரியமாக செல்ப்போனை அந்த கும்பல் பறித்தது. திடீரென செல்போன் பறிக்கப்பட்டதைக் கண்டு அவர் துரத்தினார். ஆனால் அவர்களின் மோட்டார் சைக்கிள் பறந்துவிட்டது.
ஆட்டை கடித்து, மாட்டைக்கடித்து மனிதனைக்கடித்த கதையாக ஒரு ஓரமாக வயதானவர்களிடம் செயினை பறித்தவர்கள், அதிகாலையில் செயினைப்பறித்தவர்கள், துணிவுப்பெற்று தாக்கி பறிப்பது, போலீஸ் என தெரிந்து சீருடையில் இருப்பவரிடமே செல்போனை பறிப்பது சென்னையில் சாதாரணமாகிவிட்டது.
இருபது நாட்களுக்கு முன் வாக்கிங் சென்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடமே செல்போனை பறித்துச் சென்ற சம்பவமும் நடந்தது. செல்போன் பறிப்பாளர்கள் செயின்பறிப்பாளர்கள் துணிவுப்பெற்றதையே இது காட்டுகிறது.

கருத்துகள் இல்லை: