சனி, 8 செப்டம்பர், 2018

பதட்டத்தில் குட்கா ஜார்ஜ் சொல்வது உண்மையா?' - விவரிக்கும் ஐபிஎஸ்அதிகாரிகள்

குட்கா விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜார்ஜ் vikatan : எஸ்.மகேஷ் : செங்குன்றத்தில் செயல்பட்ட குட்கா குடோனில், அப்போதைய கமிஷனரின் உத்தரவின்பேரில் சோதனை நடத்தியபோது, கிரைண்டர் மட்டும்தான் இருந்தது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குட்கா விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள சிபிஐ, தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில்,  முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்தார். அதில், குட்கா ஊழல் நடந்த சமயத்தில் நான், கமிஷனராகக்கூட இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில், குட்கா ஊழல் நடந்தது உண்மை என்று தெரிவித்த அவர், சில போலீஸ் அதிகாரிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஜார்ஜ் தெரிவித்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம்.
 குட்கா வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், அது பற்றிப் பேச வேண்டாம் என்று சில அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சிலர், தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கூறியபடி சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.
 ``அப்போது, நான் துணை கமிஷனராகப் பணியாற்றினேன். கமிஷனராக ஜார்ஜ் இருந்தார். குட்கா விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள்மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால், நான் உள்பட சிலரை சம்பவ இடத்துக்குச் செல்ல உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில், செங்குன்றம் குட்கா குடோனுக்குச் சென்றோம். குடோனில் எதுவும் இல்லை. வெறும் கிரைண்டர் மட்டும்தான் இருந்தது. அந்தத் தகவலை உயரதிகாரிகளிடம் ரிப்போர்ட்டாகக் கொடுத்தோம். அதன்பிறகு, குட்கா பிரச்னை அமைதியாகிவிட்டது" என்றார் துணை கமிஷனர் ஒருவர்.
 அடுத்து பேசிய உயரதிகாரி ஒருவர், ``இது என்னுடைய நேர்மைக்குக் கிடைத்த பரிசு. குற்றம் சுமத்தலாம். ஆனால் அதை குற்றம் சுமத்தியவர்கள் நிரூபிக்க வேண்டும். மாதவராவ் டைரியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில்தான் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. எங்கள் வீடுகளில் நடத்தவில்லை" என்றார் சற்று கோபத்துடன்
 இன்னொரு போலீஸ் உயரதிகாரி, `` சென்னை மாநகர காவல்துறையைப் பொறுத்தவரை கமிஷனரின் கட்டுப்பாட்டில்தான் நாங்கள் செயல்படுகிறோம். எந்தத் தகவல் என்றாலும் அதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் தெரிவிப்பதே எங்களுடைய கடமை. இந்தச் சூழ்நிலையில், போலீஸ் அதிகாரிகள் மீதே குற்றம் சாட்டப்பட்ட குட்கா ஊழலில் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் இருக்க முடியுமா? ஆனால், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், எங்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது" என்றார்.
 தொடர்ந்து பேசிய போலீஸ் உயரதிகாரிகள், ``குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ எங்களிடம் விசாரித்தால், உண்மையைச் சொல்ல தயாராக இருக்கிறோம். ஏனெனில், குட்கா ஊழலில் எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு. குட்கா வழக்கில் சில உண்மைகளை இப்போது எங்களால் சொல்ல முடியாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எல்லாம் தெரியும்" என்றனர்.
பதற்றத்தில் ஜார்ஜ்
நேற்று நடந்த பிரஸ் மீட்டில், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சில முக்கியத் தகவல்களைக் குறிப்பிட்டார். அதில், குட்கா ஊழல் நடந்தது உண்மையே என்று தெரிவித்த அவர், தன்னை டி.ஜி.பி- ஆகவிடாமல் சதி நடந்ததாகவும் கூறினார். தொடர்ந்து, போலீஸ் துணை கமிஷனர் விமலா கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் கடிதம் எழுதியாகவும் தெரிவித்தார். இவ்வாறு பேட்டியின்போது பரபரப்பான தகவல்களைக் கூறிய ஜார்ஜ், சிறிது பதற்றத்துடன் காணப்பட்டார்.மேலும், அவர் அளித்த தகவல்களை சிபிஐ உன்னிப்பாகக் கவனித்துள்ளது. எனவே, ஜார்ஜின் பிரஸ்மீட் புதுதிருப்பத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் விவரம் தெரிந்த காவல் அதிகாரிகள்
 போலீஸ் முன்னாள் கமிஷனர் ஜார்ஜின் பேட்டியால், ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். விரைவில் இந்த பிரச்னை காவல் துறையில் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: