வெள்ளி, 7 செப்டம்பர், 2018

கோபாலபுரத்திற்கு பிரணாப் முகர்ஜி வருகை ...


கலைஞர் குடும்பத்தினருக்கு பிரணாப் ஆறுதல்!மின்னம்பலம் :கோபாலபுரம்
இல்லத்துக்கு நேற்று மாலை சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கலைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கடந்த மாதம் 7ஆம் தேதி காலமான நிலையில், அவரது உடலுக்குப் பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். கலைஞர் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஒரு மாதமாகப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நேற்று (செப்டம்பர் 6) மாலை கோபாலபுரத்திலுள்ள கலைஞரின் இல்லத்துக்குச் சென்றார். அவரை ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர். அங்கு கலைஞரின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய அவர், ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலும் கூறினார். சந்திப்பின்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் உடனிருந்தார்...


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப், “கலைஞர் இறுதி மரியாதைக்கு நிகழ்வுக்கு என்னால் வர முடியவில்லை. அதனால் தற்போது வந்துள்ளேன். இந்தியாவின் மூத்த தலைவரான கலைஞரின் மறைவுக்கு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன். கலைஞர் எனக்கு 48 ஆண்டுக்கால நண்பர். சிறந்த தலைவரான கலைஞரை இழந்துவிட்டோம்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரிலுள்ள சங்கரா பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வெள்ளி விழா கட்டடத்தை நேற்று (செப்டம்பர் 6) திறந்துவைத்த பிரணாப், பல்கலைக்கழக வளாகத்தில் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதிசங்கரர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நமது கலாச்சாரத்தை மூதாதையர் காப்பாற்றி வந்ததாகவும், அதை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். விழா முடிந்த பிறகு காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சென்ற பிரணாப், அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரின் மெழுகு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

கருத்துகள் இல்லை: