வியாழன், 6 செப்டம்பர், 2018

ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை

கதிரவன் nakkheeran.in : ஆண்மை பரிசோதனைக்கு
nஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று முறை ஆஜராகாததால் கர்நாடக ராம்நகர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கர்நாடகத்தில் நித்தியானந்தா நடத்தி வரும் பிடதி ஆசிரமத்தில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் நித்தியானந்தா என்று ஆர்த்திராவ், லெனின், பரத்வாஜ் ஆகிய மூவரும் 2010ல் சென்னை காவல்துறையிடம் புகார் அளித்தனர்.  அந்தப்புகார் கர்நாடக மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டது.


சென்னை போலீசிடம் கடந்த 2010ல் தந்த புகார் கர்நாடக போலீசுக்கு அனுப்பப்பட்டதையடுத்து, கர்நாடகா சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து 2010 நவம்பரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2015ல் மறு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதில் நித்தியானந்தா உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியிருந்தனர்.


இந்த  வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த பெங்களூர் போலீசார் முடிவு செய்த போது, மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க மறுத்தார் நித்தியானந்தா. மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. பின்னர் 2017ல் ஒரு பொய்யான மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்து, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நித்தியானந்தா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


பாலியல் பலாத்கார வழக்கை எதிர்த்து ராம்நகர் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை கடந்த பிப்ரவரியில் ராம்நகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு கடந்த மே 16ம் தேதி  தள்ளுபடி செய்யப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  நித்தியானந்தா மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும் ஆணையிட்டனர்.


உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ராம்நகர் நீதிமன்றத்தில்  ஜூன் 5ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கப்பட்டது.   விசாரணையை அடுத்து, போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நித்தியானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை நடத்தலாம் என்று ராம்நகர் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஆனாலும் நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகவில்லை.  ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தொடர்பான வழக்கு கடந்த மாதம்  விசாரணைக்கு வந்த போது நித்தியானந்தா ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவையும் செப்டம்பர் 1ம் தேதி அன்று  தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.  மேலும், ராம்நகர் நீதிமன்றத்தில் 7-ந் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டது.

இதனால் நித்தியானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் இன்று 6-ந் தேதி ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டு,  நாளை 7ம் தேதி அவர்  ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை இருந்தது.  இந்நிலையில், ஆன்மை பரிசோதனைக்கு ஆஜராக மறுத்ததால் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: