Lakshmi Priya ONEINDIA TAMIL தூத்துக்குடி: தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் கைதாகி, தூத்துக்குடி கோர்ட்டால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து வரவேற்று வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.
சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் நேற்று சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பயணம் செய்தார். அதே விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பயணம் செய்தார். அப்போது பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று சோபியா கோஷம் போட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அவருக்கும், தமிழிசைக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. விமானம் தரையிறங்கிய பிறகும் சண்டை நீடித்தது. பின்னர் தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர்.
இந்த நிலையில் சோபியா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை குற்றவியல் நீதிபதி தமிழ்ச்செல்வி இன்று விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் தங்களது மகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறும் சோபியாவின் பெற்றோர்களை நீதிபதி கேட்டுக் கொண்டார். நேற்று கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் சோபியா. இந்த நிலையில் இன்று ஜாமீன் தொடர்பான நடைமுறைகளை முடித்த நிலையில் இன்று மாலை சோபியா மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு விட்டனர்.
சோபியாவை அவரது வக்கீல்கள், குடும்பத்தினர் பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது கூடியிருந்த மக்கள் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
பாஸ்போர்ட்டை முடக்க முயற்சியா? : இதற்கிடையே சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சிகள் நடப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக