வியாழன், 1 மார்ச், 2018

உடல் உறுப்பு விற்பனையில் தமிழகம் மூன்றாவது இடம்

உடலுறுப்புகளை விற்றது குறித்து விசாரணை!மின்னம்பலம் : இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 3ஆவது முறையாக உடலுறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து உடலுறுப்புகள் தானம் நடந்துவரும் நிலையில், உடலுறுப்புகளைப் பணத்திற்காக விற்றதாக சேலம் மணிப்பால் மருத்துவமனையின் மீது புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரையடுத்து, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 1) அம்மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
உடலுறுப்புகளை விற்பது சட்டவிரோதமான செயல் என்பது தெரிந்தும், சேலம் மணிப்பால் மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞரின் உடலுறுப்புகளை அவருடைய உறவினர்களிடம் விலை பேசி எடுத்திருப்பது, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, சேலம் மணிப்பால் மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டனர். சேலத்தில் விபத்தில் மூளைச் சாவடைந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீரங்கனின் குடும்பத்தினரிடம் சிகிச்சைக் கட்டணமான 50 ஆயிரம் ரூபாயைச் செலுத்துங்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இல்லையென்றால் அவரது கண்கள், சிறுநீரகம் போன்ற உடலுறுப்புகளை தானமாகக் கொடுங்கள் என்று கூறி, மருத்துவமனை நிர்வாகம் 2 லட்சம் ரூபாய்க்குப் பேரம் பேசிப் பெற்றதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழு இன்று சென்னையிலிருந்து சேலம் வந்து, ஸ்ரீரங்கனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, மணிப்பால் மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை: