1929ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் திருப்புடையமருதூர் கிராமத்தில் பிறந்த ரத்தினவேல் பாண்டியன், அம்பாசமுத்திரத்தில் தனது பள்ளிப் படிப்பை பயின்றார். பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்ற ரத்தினவேல் பாண்டியன், 1954 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்படிப்பை முடித்தார்.
கே. நாராயணசாமி முதலியார் என்ற புகழ் பெற்ற வழக்கறிஞரிடம் ஜூனியராக தனது வழக்கறிஞர் பணியைத் துவக்கினார் ரத்தினவேல் பாண்டியன். சென்னை உயர் நீதிமன்றத்தில் 17 ஆண்டுகள் வழக்கறிஞராக திறம்பட பணியாற்றினார். 1971 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார் ரத்தினவேல் பாண்டியன்.
1974ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியான ரத்தினவேல் பாண்டியன் 1988 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 1994ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார் ரத்தினவேல் பாண்டியன்.
மண்டல் கமிஷன் வழக்கில் இட ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்தும் உறுதியான கருத்துகளோடு தீர்ப்பெழுதியவர் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன். ஓய்வு பெற்ற பின், 2007ல் தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது மகன் சுப்பையா சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இப்போது பணியாற்றுகிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் ரத்தினவேல் பாண்டியனின் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக