சனி, 3 மார்ச், 2018

BBC : அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்கள்... H1B விசா பிரச்சனை:

டிரம்ப்ஹெச்1பி விசா பிரச்சனை: என்ன காரணம்? விவரிக்கும் அமெரிக்க வாழ் தமிழர்கள்< பல ஆண்டுகளாக அமெரிக்காவில் உருவெடுத்துக் கொண்டிருந்து இப்போது டிரம்ப் தலைமையிலான அரசின் கீழ் தீவிரம் அடைந்திருக்கிறது இந்தியர்களுக்கான அமெரிக்க குடிவரவு மற்றும் குடியுரிமை பிரச்சனைகள்.
 முதற்கட்டமாக உயர் திறமையான வேலைகளுக்கு வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் H1B விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது கடைபிடிக்கும் விதிகளைக் கடுமைப்படுத்தி உள்ளது டிரம்ப் அரசு. மேலும், விசா அளிப்பதிலும் பல புதிய கெடுபிடிகளை அமல்படுத்த தொடங்கிவிட்டது.
இச்சூழலில், H1B விசா வைத்திருப்போரின் துணைவர்களுக்கு வழங்கப்படும் EAD எனும் வேலை செய்ய அனுமதிக்கும் ஆவணத்தை விநியோகம் செய்வதை அமெரிக்க அரசு நிறுத்த உள்ளதாக பரவி வரும் செய்திகள் அமெரிக்க வாழ் இந்திய குடும்பங்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் பல்லாயிரக்கணக்கான இந்திய குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

H4 EAD நிறுத்தம் வெறும் மேலோட்டமான அறிகுறிதான். இந்த பிரச்னையின் ஆணிவேர், ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் சில நாட்டவர்களுக்கு உள்ள பெரும் தாமதம்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
28 ஆண்டுகளுக்கு முந்தைய சட்டம்
ஜார்ஜ் டபுள்யு புஷ் நிர்வாகத்தால் இயற்றப்பட்ட “குடியேற்றச் சட்டம் 1990” ஆண்டுக்கு 1,40,000 கிரீன் கார்டுகள் மட்டுமே வழங்க முடியும் என்று அறிவித்தது. அதிலும், வெறும் 7% மட்டுமே, அதாவது சுமார் 9,800 தான் அதிகப்படியாக ஒரு நாட்டவருக்கு ஒதுக்கப்பட்டது. அன்று இருந்த சூழ்நிலைக்கு அது பொருந்தினாலும் இன்று ஐ.டி பணிக்காக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவில் மக்கள் வந்துள்ள நிலையில் 28 ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட அந்த சட்டம் இன்றைய சூழ்நிலைக்கு ஈடுகொடுப்பதாக இல்லை.

படத்தின் காப்புரிமை David Paul Morris
இந்தப் பிரச்சனைக்கு இடைக்கால தீர்வாக 6 ஆண்டுகள் H1B விசாவில் இருந்து முடிந்தபின், கிரீன் கார்டு வரும் வரை, வருடா வருடம் அதை புதுப்பித்து கொண்டே இருக்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது.
மீண்டும் 2015 இல் H4 விசாவில் இருக்கும் துணைவர்களை வேலை செய்ய அனுமதிக்கும் EAD அளிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் வாழும் ஒரு இந்தியர் இன்று கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தால் அவர் அதற்காக 80 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலைதான் உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவோர் H4 இல் இருக்கும் குழந்தைகளே.
சிறு பிள்ளையாக இருந்ததிலிருந்தே அமெரிக்காவில் அவர்கள் வாழ்ந்திருந்தாலும் 21 வயதில் அவர்கள் இனிமேல் ‘dependent கிடையாது என்பதால் அவர்கள் உடனடியாக அமெரிக்காவில் தங்கும் சட்ட ரீதியான தகுதியை இழக்கிறார்கள். இந்த பரிதாப நிலையில் சுமார் 150000 இந்தியக் குழந்தைகள் உள்ளனர்.
இந்தியர்களின் வேண்டுகோள்
இந்நிலைமையை மாற்ற ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள குறிப்பிட்ட விசா ஒதுக்கீட்டு வரம்பை நீக்க வேண்டும் என்பதே டிரம்ப் அரசுக்கு இந்தியர்களின் வேண்டுகோளாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
இதை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் ஆங்காங்கே இந்தியர்கள் பலர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அமெரிக்க வாழ் தமிழரான கணேசன், “சட்டவிரோத குடியேற்றத்தைப் பற்றி பேசும் யனைவரும் ஏன் சட்டத்திற்கு உட்பட்டு குடியேறி இருக்கும் எங்களைப் பற்றி பேச மறுகிறார்கள்?” என்கிறார்
மற்றொரு தமிழரான குகன், “1990 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை, மாறி வரும் இக்கால சூழலில் இன்னும் புதுப்பிக்காமல் இருப்பது எப்படி சரியாகும்?” என்கிறார்.
இப்பிரச்சனைக்கு தீர்வாக குடியரசுக் கட்சி செனட்டர்கள் ஒரின் ஹேட்ச் மற்றும் ஜெஃப் ஃப்ளேக் ஒரு புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளனர்.
அதன்படி வருடந்தோறும் வழங்கப்படும் H1B விசா எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், கிரீன் கார்டு வழங்குவதில் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள வரம்பு  (லிமிட்) நீக்கப்படும். இந்த சட்டத்துக்கு இரு கட்சியினரிடையிலும் ஆதரவு உள்ளதாக தெரிகிறது.
இது நிறைவேற்றப்படுமா, எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற கேள்விகளுக்கு காலம் தான் பதில் அளிக்கும் என்கிறார்கள் அது நிறைவேற வேண்டும் எனக் காத்திருப்பவர்கள்.
bbc

கருத்துகள் இல்லை: