தீக்கதிர் :தூத்துக்குடி மாவட்டம் புன்னைகாயல் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்து சார்பில் தண்டாரோ போடப்பட்டுள்ளது . இது அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புன்னை காயல் கிராமத்தில் நுழையும் பகுதியில் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் அந்த தடுப்பை தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 12 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளிப்படையாக தண்டோரா போடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுடன் ஊர்மக்கள் உணவு , நீர் புழங்கக் கூடாது என்று தண்டோராவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதைக்கண்காணிப்பதற்கு தனியாக ஒரு படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சாதி மறுப்பு தம்பதியினர் காவல் நிலையம், மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் அளித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே கிராமத்தில் வேறு சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டு வரும் ஆண்கள் அதே கிராமத்தில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் புன்னைகாயல் கிராமத்தில் இருக்கும் பெண்கள் மாற்று சாதி பெண்களை திருமணம் செய்தால் அவர்கள் அனைவரும் ஊரை விட்டு வேளியேறுவதோடு, கடலுக்கும் மீன் பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்ட போது, இது அவர்களின் அறியாமையில் செய்திருக்கின்றனர். இனிமேல் இது போல் செய்ய மாட்டார்கள். புகாரை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பியிருக்கிறோம். அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். ஆனால் இதுவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் :
உடனடியாக சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் ஊர் திரும்ப காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர் திரும்பும் தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை சமத்துவமாக நடத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். தீண்டாமை நோக்கத்தோடு சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்து தலைவர் தலைமையிலான குவினர் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக