ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

ஜெயக்குமார் :ஜெயலலிதா சிலை திருத்தப்படும்... இளங்கோவன் : சிலைக்கு அருகில் போர்டு வைக்கவும்!

சிலைக்கு அருகில் போர்டு வைக்கவும்!அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை மறுசீரமைப்பு செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
இது ஜெயலலிதாவின் சிலைதான் என்று சிலைக்கு அருகே போர்டு வைக்கவும் என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு முன்னாள் எம்.பி எஸ்.கே.பரமசிவனின் நூற்றாண்டு விழா இன்று (பிப்ரவரி 25) விவசாய சங்கங்களின் சார்பில் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஜெயலலிதாவின் சிலையைத் திறந்துள்ளனர். ஜெயலலிதா சிலை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு விதமாக கூறப்பட்டு வருகிறது.

எனவே அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு அருகே இதுதான் ஜெயலலிதா சிலை என்று போர்டு வைத்தால் நன்றாக இருக்கும்" என்று விமர்சனம் செய்தார்.
மோடியின் தமிழக வருகை குறித்துப் பேசிய இளங்கோவன், "தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும் எதுவுமே பேசவில்லை. மோடி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களை அறிவித்திருப்பார். ஆனால், அவர் தான் ஊர் சுற்றும் நாடோடியாக இருக்கிறாரே, அவரிடமிருந்து நல்ல திட்டங்களை எதிர்பார்க்க முடியாது என்று விமர்சித்துள்ள அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
"கமல் அரசியல் கட்சி ஆரம்பித்து தெளிவாக பேசி இருக்கிறார். ஆனால், மேடையில் கேஜ்ரிவாலை பேசவிட்டது தவறு. காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்கத்தைப் பற்றி கேஜ்ரிவால் தவறாகப் பேசியிருக்கிறார் என்று குற்றம் சாட்டிய இளங்கோவன், மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில், ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் எவ்வளவு கமி‌ஷன் அடித்தார்கள்? என்பது இனி தான் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது. ஆனால் சிலை ஜெயலலிதா போல அல்லாமல் வேறொருவரின் முகத்தை ஒத்திருப்பதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: