திங்கள், 26 பிப்ரவரி, 2018

கேரளா பத்மநாபசாமி கோவில் தங்கம் ... ஆதிவாசி கொத்தடிமைகளின் உழைப்பை உறிஞ்சி அரச குடும்பம் அடித்த கொள்ளை!


நந்தன் ஸ்ரீதரன் மனிதனாகப் பிறந்ததற்காக அவமானமாக. காட்டுமிராண்டிகள்
இல்லாத தேசங்கள் இல்லை.. அது கடவுளின் தேசமாக இருந்தாலும் சரி.
நிறைய பிரிவினரோடு பழகி இருக்கிறேன். நட்பு கொண்டிருக்கிறேன்.. என்ன என்று தெரியவில்லை.. பழங்குடியின நண்பர்கள் என்று யாருடனும் நான் பழகியதே இல்லை..
காட்டுமிராண்டி என்ற பதத்தைக் கேள்விப்பட்டதும் எனக்கு எப்போதும் வனங்களில் வாழும் பழங்குடியினர் நினைவுக்கு வந்தது எனது தவறல்ல.. நான் படித்த புத்தகங்கள் ஏற்படுத்திய பிம்பம் அது.
பின்னர் ஒரு முறை கண்ணகி கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு காட்டுத்தீ பற்றியது.. கோவிலுக்கு சென்ற பக்தர்களில் ஒருவர் விட்டெறிந்த சிகரெட் அல்லது பீடியின் விளைவால் பற்றிய தீ அது.. அதை அணைக்க வனத்துறையினரை விட படாத பாடு பட்டவர்கள் பளியர்கள்.. பற்றி எரியும் தீ.. சின்னப்பிள்ளை ஒண்ணுக்குப் போனது போல ஓடும் சிறு ஓடை.. அந்த தண்ணீரை வைத்து அந்தப் பெரிய தீயை அணைக்க வேண்டும்.. சாக்குகளை அந்த தண்ணீரில் நனைத்து நனைத்து தீயெரியும் புற்களின் மீது போட்டு மிதித்து மிதித்து தீயை அணைத்துக் கொண்டிருந்தார்கள் பளியர்கள். அதீத புகையின் காரணமாக தீயின் மேல் நின்று சாக்கை மிதிக்கும்போதே ஒரு பளிய இளைஞன் மயங்கி ஈரத் துண்டைப் போல சரிந்து விழுவான்.
அவனை அள்ளி வந்து புகையற்ற ஏரியாவில் போட்டுவிட்டு எந்த முதலுதவியும் செய்யாமல் மற்றவர்கள் ஓடிச் சென்று தீயை அணைப்பார்கள். அதைப் பார்த்த நான் விக்கித்து நின்றேன்.. அப்போதுதான் இந்த காட்டுமிராண்டிகள் வனத்தாயின் பிள்ளைகள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
வனமனிதர்கள் அரசிடம் எதுவும் கேட்டதில்லை.. எங்களுக்கு மின்சாரம் வேண்டும் என கேட்டதில்லை.. எங்களுக்கு சாலை வேண்டும்.. எங்களுக்கு மருத்துவ வசதி வேண்டும்.. பள்ளி வேண்டும்.. ரேஷன் கடை வேண்டும்.. எதையும் கேட்டதில்லை.. இந்த கோரிக்கைகளை எல்லாம் அவர்கள் சார்பில் போராடும் வனம் தாண்டிய மனிதர்கள்தான் முன் வைத்தார்கள்.
அவர்கள் கேட்டதெல்லாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வந்த இந்த வனத்தில் எங்களை வாழவிடு என்பதுதான்..
இந்தியாவின் எந்த அரசின் காதுகளிலும் இந்த குரல் விழுந்ததே இல்லை.. இது வெள்ளை அரசில் இருந்தே துவங்குகிறது.. வனமனிதர்களின் உரிமையை வெள்ளையர் பறித்த கதையை தோழர் இரா முருகவேள் தனது இடுகையில் சுருக்கமாகவும் தைக்கும்படியும் சொல்லி இருக்கிறார்.
அரசு காடுகளை தங்கள் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வந்து பழங்குடியினரை மிருகங்கள் போல வேட்டையாடி விரட்டிய கதையை சுருக்கமாக சொல்லி இருக்கிறார்.. படித்து விதிர்த்துப் போனேன்..
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சொந்த நிலத்தில் பாடுபட்ட மக்கள் கேம்ப் கூலிகளாக ஆக்கப்பட்ட வரலாறு மனித இனத்தில் மீப்பெரிய அவமானம்..
உழைக்க உடலுண்டு.. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்களது மூதாதையர்கள் கொடுத்த நிலமுண்டு.. அத்தனையையும் பறித்துக் கொண்டு ஒரு மக்கள் அரசே அவர்களை வேட்டையாடி பசியிலும் பட்டினியிலும் தவிக்க விட்ட கொடூரம் இந்த இந்திய நாட்டில்தான் நடந்திருக்கிறது.. கேட்டால் பள்ளிக்கூடத்தில் இருந்தே இந்தியர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள்.
மதுவின் கண்களில் தெரிந்த பசியும் அறியாமையும் அங்கிருந்த ஒருவரின் மனதைக் கூட அசைக்கவில்லையா எனத் தெரியவில்லை.. அடித்தாலும் உணவு தருவார்களோ என்று நினைத்திருப்பானோ என்று மனது விம்முகிறது.
முருகவேள் தனது இடுகையை இப்படி முடிக்கிறார்..
//எங்கள் வீட் டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காடு தொடங்கிவிடுகிறது. மனநிலைபாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லமுடியாத ஆனால் நடப்பு சூழலைப் புரிந்து கொள்ள முடியாத பல பழங்குடி ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். யானையை தடி கொண்டு அடித்தவர், சிறுத்தை உலாவும் ஓடையருகே மாடுகளை விட்டுவிட்டு புல்லில் படுத்துத் துங்கியவர் என்று . . .. தங்கள் உலகுக்கும் இந்த பேராசைக்காரகள் உலகுக்கும் இடையே ஒரு மாய உலகில் வாழ்பவர்கள் இவர்கள்.
ஒரு மது அல்ல. வீரப்ப வேட்டையில் கொல்லப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கோவை மன்னார்க்காடு சிறைகளில் கஞ்சாக்கடத்தல்காரர்கள் என்று அடைக்கப்பட்டு டிபி வந்து உயிர் விட்டவர்கள், மில்களீல் வதைபடுபவர்கள் . . . ..
உத்பலேந்து சக்ரவர்த்தியின் வங்காள மொழிப்படம் போஸ்ட்மார்ட்டம். பசி தாங்க முடியாமல் காட்டில் தற்கொலை செய்து கொண்ட ஒரு சந்தால் பழங்குடியின் உடலை போஸ்ட்மார்டம் செய்யாமல் கொடுக்க முடியாது என்று போலீஸ் சொல்லி விடுகிறது.
மக்கள் பொறுமையுடன் காத்திருகின்றனர்.
போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும் அவனது அம்மா கேட்கிறார். “அந்தக் குடல்களில் ஒரு பருக்கை சோற்றையாவது பார்த்தீர்களா?”//
யாரை செருப்பால் அடிப்பது..
என் வயிறு எரிகிறது..
மன்னித்துக்கொள் மது என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாத நாகரிக மனிதனாக நான் இருக்கிறேன்..
அந்த மௌனம் பூசிய வனத்தில் எத்தனை மரங்கள் மதுவுக்காக அழுதன என்று தெரியவில்லை..
கொன்றபின் அழுது என்ன பயன்..?
சட்டையும் பேண்டும் அணிந்திருக்கும் நாகரிக மனிதனாக இருப்பதற்காக நான் வெட்கப்பட்ட தருணம் இதுதான்.. இதுவேதான்..

கருத்துகள் இல்லை: