ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி தயாரில்லை .. சென்னையில் வாயே திறக்கவில்லை!

காவிரி மேலாண்மை வாரியம்: கண்டுகொள்ளாத பிரதமர்!மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமர் தனது உரையில் எவ்வித பதிலும் கூறவில்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கும் விழா நேற்று (பிப்ரவரி 24) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாகப் பிரதமருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்தார். இதைப் பிரதமருக்குப் புரியும்படி ஆங்கிலத்திலும் கூறினார்.

திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, தனது பேச்சில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முதலமைச்சர் என்ற வகையில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைக்குப் பதிலாவது அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறைமுகமாகக் கூட காவிரி மேலாண்மை வாரியம் குறித்து வாய்திறக்கவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்டா பகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்குப் பிரதமரின் உரையில் எவ்வித பதிலும் இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் அனைத்துக் கட்சியினருடன் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அதிகாரிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறுகையில், “காவிரி விவகாரத்தில் கால அவகாசம் உள்ளதால் தக்க சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்” என்று கூறினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், “கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்துப் பிரதமர் பேசவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: