ஞாயிறு, 9 ஜூலை, 2017

எடப்பாடி வீட்டில் மாபா பாண்டி விடிய விடிய பேச்சு வார்த்தை ...


முதல்வர் இல்லத்தில் மாஃபா: விடிய விடிய பேச்சு!மின்னம்பலம் :அதிமுக-வில் சமீப நாள்களாக அதிகரித்துவரும் பேட்டிகள் மக்கள் மத்தியிலும் அக்கட்சியினர் மத்தியிலும் குழப்பங்களை அதிகரித்துக் கொண்டே உள்ளன. ஆனால், ஒவ்வொருவரின் வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு பின்னணி இருக்கிறது என்கிறார்கள் அந்தந்த அணிகளின் ஆதரவாளர்கள்.
எடப்பாடி அணியோடு பேச்சுவார்த்தை நடத்தி அணிகளை இணைப்பதற்காக அமைக்கப்பட்ட தன் தரப்பின் குழுவைக் கடந்த மாதம் கலைத்துவிட்டார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். திருவேற்காட்டில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது, தமது அணி சார்பாக நியமிக்கப்பட்ட குழு கலைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.
இதனால், இரு அணிகளும் இணைவதில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 4ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘பேச்சுவார்த்தைக் குழுக்கள் கலைக்கப்பட்டாலும் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகிகள், முதல்வரைச் சந்தித்தனர். நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கட்சியை வழிநடத்த ஏழு பேர் கொண்ட குழுவும் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினார்.

குழுவைப் பன்னீர் கலைத்துவிட்டாரே என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, ‘குழு வேறு... இணைப்பு என்பது வேறு' என்று தெரிவித்தார். எடப்பாடி அணியின் முக்கிய நகர்வுகளை அவ்வப்போது அறிவிக்கும் அமைச்சர் ஜெயக்குமார், இந்த தகவலைத் தெரிவித்ததும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், ஓ.பன்னீர் அணியில் இருந்து இதை உடனடியாக மறுத்தார் கே.பி.முனுசாமி. அதே 4ஆம் தேதி அவர், ‘அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது அப்பட்டமான பொய். அவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எங்கள் தலைவர் பெயரை குறிப்பிட்டு அந்த அணியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கூறுவது தவறு. எங்கள் சார்பாக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டு விட்டது. அதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. தொண்டர்களையும், மக்களையும் திசை திருப்பி குழப்புவதற்காக ஜெயக்குமார் இதுபோல கூறுகிறார்.
நாங்கள் ஏற்கனவே சொன்னது போல எங்கள் இரண்டு கோரிக்கைகளை ஏற்றால்தான் பேச்சுவார்த்தை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும். சசிகலா குடும்ப கட்டுப்பாட்டில் இருந்து கட்சி விடுபட வேண்டும். இந்த இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடக்கும்’ என்றார்.
இதில் யார் சொல்வது சரி என்று இரு அணிகளிலும் விசாரித்தபோது புதிய தகவல் ஒன்று கிடைத்தது.
அதாவது கடந்த வாரத்தில் ஒருநாள் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, அதே இல்லத்தின் இன்னொரு அறையில் இப்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இருந்ததை அறிந்தார் ஜெயக்குமார். இதைப் பற்றி முதல்வர் எடப்பாடி, ஜெயக்குமாரிடம் ஏதும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனாலும் முதல்வர் இல்லத்தில் மாஃபா இருப்பதை உறுதி செய்துகொண்ட ஜெயக்குமார், தனது கவனத்துக்கு வராமலே ஒருபக்கம் அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடப்பதை உணர்ந்தார்.
அன்று இரவு ஜெயக்குமார் புறப்பட்டுச் சென்றவுடன்… மாஃபா பாண்டியராஜனும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விடிய விடிய பேசியிருக்கின்றனர். அதிகாலை நேரத்தில் மாஃபாவை போலீஸ் வாகனத்தில் வீட்டுக்கு செல்லுமாறு முதல்வர் அறிவுறுத்த அதன்படியே அவரும் தன் காரைப் பயன்படுத்தாமல் போலீஸ் வாகனத்தில் ஏறி வீட்டுக்குச் சென்றார்.
இதையும் அறிந்துகொண்ட பிறகுதான் அமைச்சர் ஜெயக்குமார்… தனக்கே தெரியாமல் முதல்வர் தனி ரூட்டில் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி ஆதங்கப்பட்டு… செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘இணைப்பு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. குழு கலைக்கப்பட்டாலும் இணைப்பு பேச்சு நடைபெறுவது வேறு விதமானது’ என்று முதல்வர் - மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு பற்றி குறிப்பிடாமல் சூசகமாக தகவலை லீக் செய்துவிட்டார்.
இப்படி ஒவ்வொருவர் பேட்டிக்குப் பின்னாலும் ஒவ்வொரு பின்னணியும் காரணமும் இருக்கிறது என்பதே அதிமுக-வின் இப்போதைய நிலைமை.
மாஃபா பாண்டியராஜன் முதல்வருடன் நடத்திய நள்ளிரவு பேச்சுவார்த்தை அவருக்காக மட்டுமா அல்லது ஓ.பி.எஸ். அணிக்காகவா என்று விரைவில் தெரிந்துவிடும்.
இதேநேரம், டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி கொடுத்த மாஃபா பாண்டியராஜன், ‘அண்ணன் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டால் பிரச்னை ஓய்ந்துவிடும். அது நடக்கும் என்று நம்புகிறேன். அதற்குள் நான் அணி மாறுகிறேன், பி.ஜே.பி-க்குப் போகிறேன் என்றெல்லாம் வரும் தகவல்கள் உண்மையானவை அல்ல…’ என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக-வில் நடக்கும் அதிகாரபூர்வமற்ற ஒவ்வொரு நகர்வுகளும்… அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றை எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை: