tamilthehindu : இந்திய மீன் ஏற்றுமதிக் கொள்கைகளுக்கும் – தமிழக மீனவர்களின்
வாழ்வாதாரத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இலங்கை அரசின் கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் அறிக்கை வருமாறு: இலங்கை கடற்படையின் அட்டூழியத்தாலும், மத்திய அரசின் பாராமுகத்தாலும் ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்னைகளினால் துவண்டு போயிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு கடுமையான தண்டனைப் பிரிவுகள் கொண்ட ஒரு சட்டத்தை அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வாழ்வாதாரத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலான இலங்கை அரசின் கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் அறிக்கை வருமாறு: இலங்கை கடற்படையின் அட்டூழியத்தாலும், மத்திய அரசின் பாராமுகத்தாலும் ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்னைகளினால் துவண்டு போயிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு கடுமையான தண்டனைப் பிரிவுகள் கொண்ட ஒரு சட்டத்தை அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 5.7.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைபட்டினம்,
ஜெகதாபட்டினம் மற்றும் இன்றைய தினம் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து
மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் உட்பட இதுவரை 53 மீனவர்கள் இலங்கை
கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கையின் சிறைகளில் வாடிக்
கொண்டிருக்கிறார்கள். 146க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு,
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு இன்னல்களை கொடுத்து
வரும் இலங்கை அரசின் சட்டத்தை எதிர்த்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல்
காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம்
தேதியன்று தீக்குளிப்புப் போராட்டம் நடத்தப் போவதாகவும்
அறிவித்துள்ளார்கள்.
இப்படி பல்வேறு இன்னல்களை கொடுத்து வரும் இலங்கை அரசு, தமிழக மீனவர்கள்
பாரம்பரிய மீன் பிடித் தொழிலை அறவே ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் இப்போது
கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டம் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவின்
மீன் ஏற்றுமதிக் கொள்கைகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில்
அமைந்திருக்கிறது.
இருநாட்டு மீனவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, அது
இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் முன்னிலையிலான பேச்சுவார்த்தையாக
முன்னேறி, இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்குத்
தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற வேளையில், இந்தப்
பேச்சுவார்த்தைகளின் நோக்கத்தைச் சிதறடிக்கும் விதத்தில் இப்படி
மீனவர்களுக்கு எதிரான கருப்புச் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்திருப்பது
மிகவும் கவலையளிக்கிறது.
“இந்தியா எங்கள் நட்பு நாடு”, என்று கூறிக்கொண்டே இந்திய மீனவர்களின்
வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் 50 ஆயிரம் அபராதம், இருவருடம் சிறை
தண்டனை, படகுகள் பறிமுதல் என்று மிகக் கடுமையான கொடுங்கோல் தண்டனைகளைக்
கொண்டு வந்திருப்பது நட்பு நாட்டிற்கு இலக்கணம்தானா? என்பதை இலங்கை அரசு
ஆழ்ந்து யோசிக்கும் அளவிற்கான ஒரு அழுத்தத்தை தூதரக ரீதியாகவோ, பிரதமர்
மட்டத்திலோ மத்திய அரசு அந்நாட்டு அரசுக்குக் கொடுக்க வேண்டியது காலத்தின்
கட்டாயமாகிறது. அந்த அழுத்தம் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அதிமுக
அரசும் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய கடமை ஏற்பட்டிருக்கிறது.கடிதம்
அனுப்புவதால் மட்டும் காரியம் நடந்து விடாது.
இது ஒருபுறமிருக்க, ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவிப்பதற்கு
2000-த்திற்கும் மேற்பட்ட மீன் பிடிப் படகுகளை (Bottom Trawlers) மாற்றி
ஆழ் கடல் மீன்பிடிப்பிற்கான புதிய படகுகளை வாங்க வேண்டியதிருக்கிறது.
அந்தப் படகுகளை வாங்குவதற்கான நிதியாதாரம் மீனவர்களிடம் இல்லை. ஆகவே
மீனவர்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு 1520 கோடி ரூபாய்
வரையிலான நிதியை “ஆழ்கடல் மீன்பிடிப்பில்” ஈடுபடுவதற்காக மத்திய
அரசிடமிருந்து 3.6.2014 அன்றே கோரப்பட்டதை இந்தநேரத்தில் நினைவுபடுத்த
விரும்புகிறேன். ஆனால் மூன்று ஆண்டுகளாகியும் அந்த நிதியை மத்திய அரசு
வழங்கவில்லை. மாநில அரசும் அதற்கு அழுத்தம் கொடுத்தும் பெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதத்தில்தான் அந்த நிதியில் 200 கோடி ரூபாயை
மத்திய அரசு வழங்க முன் வந்திருக்கிறது. அதனையொட்டி முதல் கட்டமாக 500
டிராவ்லர்களை மாற்றிவிட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தேவைப்படும் புதிய
படகுகளை வாங்குவதற்காக 23.5.2017-ல் மீன்வளத்துறையின் அரசு செயலாளர் திரு.
ககன்தீப் சிங் பேடி அவர்கள் ஆணை வெளியிட்டுள்ளதாக அறிகிறேன். ஆழ்கடல்
மீன்பிடிப்புக்கான வசதிகளை ஏற்படுத்தும் மத்திய - மாநில அரசுகளின் முயற்சி
இப்படி ஆமை வேகத்தில் நகர்ந்தால், இரண்டாயிரம் டிராவ்லர்களையும்
மாற்றுவதற்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு மேலாகும் என்றநிலை
ஏற்பட்டிருக்கிறது.
அதுவரை தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரியமான மீன் பிடிப் பகுதிகளில்தான்
மீன் பிடிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் மீனவர்களே
ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு முன்வந்து, அதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,
”எங்களுக்கு மூன்று வருடங்கள் கால வரையறை கொடுங்கள்”, என்று கேட்டபிறகு,
அதையும் ஏற்றுக் கொள்ளாமல் வாழ்வாதாரத்திற்கும், தங்களுக்குள்ள மீன்பிடி
உரிமைப்படியும் பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளுக்குச் செல்லும் இந்திய
மீனவர்கள் மீது இலங்கை அரசு இப்படியொரு கொடூரமான சட்டத்தை பிரயோகிக்க
நினைப்பது மனிதாபிமானமற்ற செயலாக அமைந்திருக்கிறது.
ஆகவே, இலங்கை அரசின் கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப்
பெற வலியுறுத்தும் அதேநேரத்தில், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில்
மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் ஆழ்கடல்
மீன்பிடிப்பிற்கு தேவைப்படும் உபகரணங்கள் வாங்க நிதியுதவி, மீனவர்களுக்கான
பயிற்சிகள், மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற குளிரூட்டு நிலையங்கள்
போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுக்க மத்திய - மாநில அரசுகள் போர்க்கால
அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் படகுகளை வாங்குவதற்கு மீனவர்கள் பத்து சதவீத நிதியை அளிக்க வேண்டும்
என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு படகு 80 லட்சம் ரூபாய் ஆகும் என்பதால்,
அதில் பத்து சதவீத பணமான 8 லட்சம் ரூபாயை ஒவ்வொரு மீனவரும் கொடுப்பது
சாத்தியமில்லை. அந்த அளவிற்கு தமிழக மீனவர்கள் பொருளாதார முன்னேற்றம்
கண்டவர்களாக இல்லை. ஆகவே அந்தப் பத்து சதவீத நிதியையும் மாநில அரசே
மான்யமாக அளித்து, இந்த 2000 டிராவ்லர்களை நம்பியிருக்கும் மீனவர்கள்
ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும்வரை அந்தக் குடும்பங்களுக்கு ’வாழ்வாதார
நிதியாக’ மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வீதம், குறைந்தபட்சம் ஒரு
வருடத்திற்காவது வழங்க வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக்
கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக