ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சனிபகவான் கோவில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு : நீதிமன்ற உத்தரவை தூக்கி எறிந்த கும்பல்



 நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்கள் கோயிலில் நுழைவதை தடுத்த போலீஸார்!
அகமத்நகர்: நீதிமன்றம் உத்தரவிட்டும், மகாராஷ்ட்ரா மாநிலம் ஷிங்னாபூரில் உள்ள புகழ்பெற்ற சனி பகவான் ஆலயத்துக்குள் நுழைய முயன்ற பெண்களை உள்ளூர் கிராம மக்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
ஷிங்னாபூர் சனி பகவான் ஆலயத்திற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. வெட்டவெளியில் 5 அடி உயரத்தில்  நிறுவப்பட்டுள்ள சிலையின் அருகில் பெண்கள் சென்று வழிபடக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், கோயில்களில் நுழைந்து சாமி தரிசனம் செய்வது பெண்களின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது.


கோவில்களில் சாமி தரிசனம் செய்வதில் பாலின பாகுபாடு பார்க்கப்படாது என்று அரசு உறுதி அளித்து உள்ளது. அதை பாதுகாக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்த தீர்ப்பினால் உற்சாகமடைந்த திருப்தி தேசாய் தலைமையிலான பூமாதா ரன்ராகினி பிரிகேட் அமைப்பைச் சேர்ந்த பெண்கள், இன்று சனி பகவான் கோயிலுக்குள் சென்றனர். ஆனால், அவர்களை சனிபகவான் சிலை நிறுவப்பட்டுள்ள புனித மேடைக்கு அருகில் செல்ல விடாமல் கோயில் அதிகாரிகள், போலீசார் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்கும் வரை திரும்பி போகமாட்டோம் என்று கூறிய அவர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தங்கள் முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று கூறிய திருப்தி தேசாய், தேவைப்பட்டால் முதலமைச்சர் மற்றும் உள்துறை மந்திரிக்கு எதிராக புகார் பதிவு செய்வதாகவும் கூறினார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவு நகல் தங்களுக்கு இன்னும் வரவில்லை என கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.  விகடன்.com

கருத்துகள் இல்லை: