செவ்வாய், 5 ஏப்ரல், 2016

எது ஒரிஜினல் தேமுதிக? போட்டி தேமுதிகவினர் அறிவிப்பு...முரசு சின்னம் எமக்குத்தான்....

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் முரசு சின்னத்தை முடக்கும் முயற்சியின் முதல் கட்டமாக இப்போதே 6 மாவட்ட செயலாளர்கள், 3 எம்.எல்.ஏக்கள் நாங்கள்தான் "ஒரிஜனல் தேமுதிக" என சட்டசபை கொறடா சந்திரகுமார் தலைமையில் 'வாய்ஸ்' கொடுக்க தொடங்கியிருக்கின்றனர். இந்த கலகக் குரல் தேமுதிகவுக்கு பெரும் சேதாரத்தைத்தான் கொடுக்கும்; முரசு சின்னத்தை முடக்கி வைக்கும் என தெரிகிறது. சட்டசபை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என கடந்த 3 மாத காலமாக பெரும் பரபரப்பு நிலவியது. திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என அனைத்து தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது தேமுதிக. Trouble for DMDK's Murasu Symbol? 
பின்னர் திடீரென மார்ச் 10-ந் தேதியன்று தேமுதிக தனித்துதான் போட்டி என்று "தெள்ளத் தெளிவாக' அறிவித்தார் விஜயகாந்த். ஆனால் அப்போதே அவரது மனைவி விஜயகாந்த், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் பேசுவோம் எனவும் கூறினார். பின்னர் 13 நாட்கள் தேமுதிகவில் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லை; அதே நேரத்தில் தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு கட்சியில் அதிருப்தி இருக்கிறது எனக் கூறப்பட்டது. பின்னர் திடீரென 23-ந் தேதியன்று தேமுதிகவும் மக்கள் நலக் கூட்டணியும் கூட்டணி அமைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் அக்கட்சியில் மெதுமெதுவாக கலகக் குரல் வெடிக்கத் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நிர்வாகிகள் விஜயகாந்த் முடிவைக் கண்டித்து திமுகவில் ஐக்கியமாகினர். தொண்டர்களிடம் திமுகவுடன் கூட்டணி என்று சொல்லிவிட்டு திடீரென மக்கள் நலக் கூட்டணியோடு எப்படி கூட்டணி வைக்கலாம்? என்ற பெருநெருப்பு கனன்று கொண்டிருந்தது... இன்று சந்திரகுமார் தலைமையில் எரிமலையாக அது வெடித்திருக்கிறது. 
சந்திரகுமார் தலைமையில் 6 மாவட்ட செயலாலர்கள், 3 எம்.எல்.ஏக்கள் என கூண்டோடு விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். இவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது மிகவும் கவனமாக, தேமுதிக என்பது நாங்கள் செதுக்கிய சிற்பம்; இந்த கட்சியை விட்டு நாங்கள் விலகவே இல்லை; நாங்கள் விஜயகாந்துக்கு திமுகவுடன் கூட்டணி வைக்க கெடுதான் வைத்திருக்கிறோம் எனக் கூறியிருக்கின்றனர். 
 
அதாவது நாங்களே "ஒரிஜனல் தேமுதிக" என்ற 'எதிர்கால' அறிவிப்புக்கு இப்போதே அடித்தளம் போட்டு வைத்திருக்கின்றனர் சந்திரகுமார் அண்ட் கோ. ஒட்டுமொத்தமாக திமுகவில் போய் ஐக்கியமாவதை விட ஒரிஜனல் தேமுதிக நாங்களே எனக் கூறுவதுடன் எங்களுக்கே முரசு சின்னம் என பஞ்சாயத்து கிளப்பி ஒட்டுமொத்தமாக முரசு சின்னத்தை முடக்கும் முயற்சியாகவும் "இப்போதிருந்தே நாங்கள் தேமுதிகவில்தான் இருக்கிறோம்; விலகவே இல்லை" என கூறி வருகின்றனர் இந்த அணியினர். இப்படித்தான் அதிமுக ஜெ, ஜா என பிரிந்த போது இரட்டை இலை முடங்கியது; பின்னர் மீட்கப்பட்டது. திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ உதயசூரியன் சின்னத்தை உரிமை கோரி பின்னர் ஒருவழியாக திமுகவுக்கே அந்த சின்னம் கிடைத்தது. இப்போது தேமுதிகவுக்கும் அந்த ஒரு நிலை நெருங்கிவந்துவிட்டது என்றே சொல்லலாம். என்ன செய்யப் போகிறார் கேப்டன்?

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: