திங்கள், 4 ஏப்ரல், 2016

கூட்டணி பேச்சுவார்த்தைகளில் நடந்த இழுபறிகள் ஓரளவு சுமுகம்

தி.மு.க. கூட்டணியில் முதலில் இடம்பிடித்த தோரணையில் இருந்த காங்கிரஸ் தலைமை, எதிர்பார்க்கும் சீட்டுகளைப் பெற படாதபாடுபட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் நடத்திய ஆலோசனையில், தனித்துப் போட்டி பற்றி பேசப்பட்டுள்ளது.>நம்மிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள், ""தி.மு.க. கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் இணைவதற்கு  முடி  வெடுத்த சோனியா, குலாம்நபி மூலம் கனிமொழியிடம் தெரிவித்து, கலைஞரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். சீட் எண்ணிக்கையை தி.மு.கதான் முடிவு செய்யும் என்பது தெரிவிக்கப்பட்டே காங்கிரசுடனான கூட்டணிக்கு மறுபடியும் அச்சாரம் போடப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க வந்தால் காங்கிரஸுக்கு 25 சீட்!  வரவில்லையெனில் 30 சீட் என்பதுதான் கனிமொழி மூலமாக சோனியாவுக்கு சொல்லப்பட்ட கலைஞரின் கணக்கு. இதற்கு சோனியா தந்த சிக்னலால்தான் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து கலைஞரை சந்தித்தார்.


இந்த சந்திப்புக்கு முன்பு, தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், "சீட் எண்ணிக்கையை மேலிடம் பார்த்துக்கொள்ளும். உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெறலாம்' என்றார். தமிழகத் தலைவர்களும் உடன்படவே, கலைஞருடனான குலாம்நபியின் முதல் சந்திப்பு, சுமுகமாக முடிந்தது. தி.மு.க கூட்டணிக்கு விஜயகாந்த் வராத நிலையில், தொகுதிகள் பற்றி பேசுவதற்காக குலாம்நபி மீண்டும் வந்தபோதுதான் இழுபறி ஆரம்பமானது. (இதுகுறித்து கடந்த இதழ் ராங்-காலில் விரிவாக எழுதியிருந்தோம்)

t;தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த 8 பேர் கொண்ட குழுவை அமைத்த ராகுல்காந்தி, குலாம்நபியிடம் ஆலோசித் தார். அதில், "விஜயகாந்த் வராத நிலையில் 25 சீட்டுக்கு ஒப்புக்கொள்வது சரியாக இருக்காது. கூடுதல் சீட்டுகளை கேட்டு வாங்குங்கள்' என்றார். பழைய கணக்கான 63-ல் தொடங்கி, 60, 50 என இறங்கி வர காங்கிரஸ் திட்டமிட்டது. குலாம் நபி ஆசாத்துடனான இரண்டாவது சந்திப்பின்போது, காங்கிரஸ் தரப்பில் இதை வலியுறுத்த, தி.மு.க.வோ 25-ல் நின்றது. மேலிட விருப்பத்தை ஆசாத் சொல்ல, "ஒன்றுபட்ட காங்கிரசாக இருந்தா பரிசீலிக்கலாம். இப்போ காங்கிரஸ்தான் உடைஞ்சி போய்டுச்சே என்று துரைமுருகன் சொல்ல, "கட்சி பிளவுபட்டிருக்கலாம். ஆனா, காங்கிரசின் செல்வாக்கு பிளவுபடலை'ன்னு குலாம்நபி சொல்லியிருக்கிறார். எண்ணிக்கை விவரம் முடிவடையாததால், டெல்லிக்குத் திரும்பி ஆலோசித்தார் ஆசாத்.

 "வாசன்தான் காங்கிரஸ்னு தி.மு.க. நினைக்குதா?' என டென்சனான ராகுல், "25 சீட்டுக்கு கூட்டணி வைக்கறதுக்கு பதில் தனித்தே காங்கிரஸ் போட்டியிடலாம்' என கோபம் காட்டியிருக்கிறார்'' என்று நடந்ததை விவரித்தனர் காங்கிரஸ் தலைவர்கள்.

தி.மு.க. தரப்பினரோ, ""காங்கிரசை சேர்ப்பதில் ஸ்டாலின் தயக்கம் காட்டினார். 25 சீட் என்பதால் தான் சரி என்றார். துரை முருகன், ஜெகத்ரட்சகன், பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் நமக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்றே ஸ்டாலினிடம் சொல்லி வருகிறார்கள். அதேசமயம், தென்மாவட்டங்களில் உள்ள ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். போன்றவர்கள் மட்டும்தான், காங்கிரஸ் வேணும்னு சொல்கிறார் கள். கலைஞரைப் பொறுத்தவரை, எல்லா தொகுதியிலும் குறைந்தபட்சம் 5000 வாக்குகள் காங்கிரசுக்கு இருக்கிறதுங்கிறதினால 30 வரை ஒதுக்க தயாராக இருக்கிறார். இதனை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம் என்கிறார்கள் மிக அழுத்தமாக.

ஈ.வி.கே.எஸ்ஸோ, 30 சீட்டுக்கு ஒப்புக்கொள்ள லாம். 30 சீட்டும் வின்னிங் சீட் தான் என்பதாக ராகுலுக்கு அழுத்தம் கொடுக்க முகுல்வாஸ்னிக் மூலம் காய்களை நகர்த்தினார். மேலிடத் தலைவர்கள் தயங்கிய சூழலில், ப.சிதம்பரத்திடம் சோனியாகாந்தியும் ராகுல்காந்தியும் தனித்தனி யாகப் பேசியுள்ளனர். தி.மு.க. முன்வைப்பதை தவறுன்னு சொல்லிட முடியாது. ஆனா, 2011 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க.வுக்கு 30,  விடுதலை சிறுத்தைகளுக்கு 10 என 40 தொகுதிகளை ஒதுக்கினார் கலைஞர்.  அந்த கட்சிகள் இப்போது கூட்டணியில் இல்லாததால் அதில் 20 சீட்டுகளை நம் கணக்கில் சேர்த்து 45 சீட்டுகளை (25 + 20) கேட்கலாம்.  கடைசியில் 40 இடங்கள் எனில் ஒப்புக்கொள்ளலாம்.

இதனையும் விட குறைவாக இருந்தால், காங்கிரஸ் இமேஜ் தேசியளவில் பாதிக்கப்படும். தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலிமையற்றதாகவும் தெரியும்'' என தெரிவித்திருக் கிறார் சிதம்பரம்.
இதனடிப்படையில், புதன்கிழமையன்று குலாம் நபி, முகுல்வாஸ்னிக், இளங்கோவனிடம் ஆலோசித்த ராகுல், ""40 இடங்களை வாங்குங்கள். இல்லையேல் தனித்துப் போட்டியிடலாம்'' என தெரிவித்துவிட்டார். இதனை தி.மு.க. தரப்புக்கும்  சொல்லப்பட்டது. ஆனால், தி.மு.க. தரப்பில் இதனை புதன்கிழமை இரவு வரை ஏற்கவில்லை. இதனைத்தொடர்ந்து, சோனியாவின் முடிவுக்காக காத்திருக்கிறார் ராகுல்காந்தி. சோனியாவின் முடிவு எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்பதுதான் புதன் நள்ளிரவு நிலவரம்.

தனித்துப் போட்டி என்ற ராகுலின் அழுத்தத் தை ஏற்க முடியாததால் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்தார் இளங்கோவன்.
இப்படிப்பட்ட சூழலில், அ.தி. மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடியாமல் தவித்து வரும் ஜி.கே.வாச னின் த.மா.கா.வினர், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள  சிக்கலை ரசிக்கவே செய்கிறார்கள்.  வாசனுக்கு நெருக்கமான  தரப்பில் நாம் விசாரித்தபோது, ""அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கே த.மா.கா.வினர் அதிகம் விரும்புகிறார்கள். 

ஆனால் நாங்களும் கூட்டணி சிக்கலை எதிர்கொள்ளவேண்டியதிருக்கிறது. 2001-ல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் காங்கிரசும் இருந்தது. த.மா.கா.வுக்கு 32 சீட்டும் காங்கிரசுக்கு 15 சீட்டும் ஒதுக்கிய ஜெயலலிதா, "காங்கிரஸ் தலைவர்களை நான் சந்திக்க மாட்டேன். நீங்களே சீட்டுகளை கொடுத்திடுங்க'ன்னு மூப்பனாரிடம் சொல்லிவிட்டார். அந்த மதிப்பு வாசன் மீதும் உள்ளது. எனவே முன்புபோல 32 சீட்டுகளை கேட்கிறார் வாசன்.  ஆனா, சிங்கிள் டிஜிட்டில் ஒரு நெம்பரை சொன்னார்கள். அதனை த.மா.கா. தலைவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடிய வில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதானிருக்கிறது.

சமீபகாலமாக, வாசனே நேரடியாக ஜெயலலிதா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில், சீட்டுகளின் எண்ணிக்கை 15-ஐ தாண்டி நகர்ந்து வருகிறது. வாசனின் இலக்கு 24 சீட்டுகள். மற்றபடி, தி.மு.க.வை வாசன் நாடுகிறார் என்பதெல்லாம் பொய். இப்போது வரை தி.மு.க. தரப்பிலிருந்து யாருமே வாசனை தொடர்பு கொள்ளவில்லை. அதை வாசனும் விரும்பவில்லை. தி.மு.க கூட்டணி பற்றி த.மா.கா.வில் ஒரு சிலர் வாய்திறந்தாலும் அவர் ரசிப்பதில்லை.
காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் சேர்வதில்லைங்கிறதில் வாசன் உட்பட எல்லா தலைவர்களுமே உறுதியாக இருக்கிறார்கள். காங்கிரசை வழிக்கு கொண்டு வர, வாசன் பெயரை தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறது தி.மு.க.'' என்று விவரிக்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணியுடன் த.மா.கா பேச்சு என்பதையும்கூட டாக்ட்டிஸாகவே கருது கிறார்கள். த.மா.கா. நிர்வாகிகள் வட்டாரங்களில் பேசியபோது, ""இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, எதிர்பார்க்கும் சீட்டுகளை பெறலாமே என ஒரு நிபந்தனை ஜெயலலிதா தரப்பில் வைக்கப்பட்டது.

அதை வாசன் ஏற்கவில்லை. தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனச் சொன்ன தோடு, த.மா.கா.வுக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதையும் அறிவித்தார்.

தி.மு.க.வில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி போல எங்களுக்கு எதுவும் இல்லை. எத்தனை சீட்டுகளை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்குகிறது என்பதை அ.தி.மு.க. தலைமை பார்க்க விரும்புவதால்தான் எங்களுக்கு ஏற்படும் கால தாமதம். அ.தி.மு.க.வின் நேர்காணல் முடிந்ததும் அநேகமாக, திங்கள் கிழமை கூட்டணி அறிவிப்பு வரலாம். வாசனின் இலக்கிற்கு மாறாக எண்ணிக்கை குறைவு ஏற்பட்டால் அதை ஏற்கும் மனநிலையையும் தொண்டர்களிடம் உருவாக்கியே வைத்திருக்கிறார் வாசன் என்கின்றனர் மிகவும் நம்பிக்கையுடன்.-இரா.இளையசெல்வன் nakkheeran,in

கருத்துகள் இல்லை: