காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் (70),
டெல்லி தலைமையால் தவிர்க்க முடியாதவராகவும், தமிழக காங்கிரஸால் ஏற்க
முடியாதவராகவும் திகழ்வதாக கூறப்படுகிறது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியில்
இருந்து 1984-ல் முதல்முறையாக எம்.பி. ஆனார். 1985 - 89, 1991-96
காலகட்டங்களில் மத்தியில் பல்வேறு துறைகளில் இணை அமைச்சராக இருந்தார்.
1996-ல் தேவகவுடா அமைச்சரவையில் முதல்முறையாக கேபினட் அமைச்சரானார். 2
ஆண்டுகள் அவர் நிதியமைச்சராக பதவி வகித்தார். பிறகு 2004 முதல் 2014 வரை
நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதன்மூலம், தேசிய
அரசியலில் சிதம்பரத்தின் நிலை மிகவும் வலுவானது.
அதேசமயம், தமிழகத்தில் சிதம்பரம் தனது ஆதரவாளர்களை தவிர பிறரை
கண்டுகொள்ளாமல் விடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதாக புகார் எழத்
துவங்கியது. தமிழக காங்கிரஸில் ‘சிதம்பரம் கோஷ்டி’ என ஒரு அணி உருவாகி அது
இன்றுவரை தொடர்வதற்கு இதுவே காரணமாகவும் கூறப்படுகிறது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து 2 முறை ஆட்சிக்குப் பின் 2014-ல்
தேர்தலை எதிர்கொண்டது. அப்போது தோற்று விடுவோம் எனக் கருதி காங்கிரஸ்
தலைவர்கள் பலர் போட்டியிடாமல் ஒதுங்கினர். இவர்களில் ப.சிதம்பரமும் ஒருவராக
இடம் பெற்றிருந்தார். பிறகு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில்
ஒருவராக சிதம்பரம் நியமிக்கப்பட்டாலும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில்
அவருக்கு எவ்வித முக்கியப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை. இதுபோன்ற நிலையால்
சிதம்பரத்திற்கு தேசிய அளவில் உள்ள முக்கியத்துவம் தமிழக காங்கிரஸில்
இல்லை என ஒரு பேச்சு நிலவுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் தேசிய
பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினருமான கார்வேந்தன் கூறும்போது,
''டெல்லியில் சிதம்பரம் ஹீரோவாக இருந்தாலும் தமிழகத்தில் யாரோ என்ற
நிலையில் தான் இருக்கிறார். தமிழக காங்கிரஸார் விரும்பாத சக்தியாக
சிதம்பரத்தை கருதினாலும் அவரை டெல்லி தலைமை தவிர்க்க முடியாத சக்தியாகவே
எண்ணுகிறது.
நிதி, உள்துறை ஆகிய இரு முக்கிய துறைகளுக்கு அவர் கேபினட் அமைச்சராக
இருந்துள்ளார். இந்தத் துறைகள் மீது எதிர்க்கட்சிகள் அவ்வப்போது எழுப்பும்
புகார்களுக்கு சிதம்பரம் தான் பதில் சொல்லியாக வேண்டும். காங்கிரஸ்
தலைவர்களுக்கு தலைவலியாக விளங்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் சட்ட
ஆலோசகராகவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை கொண்ட ராஜீவ் காந்தி
அறக்கட்டளையின் இயக்குநர்களில் ஒருவராகவும் சிதம்பரம் இருக்கிறார். இதனால்
அவரை டெல்லியில் ஆதரிக்க வேண்டிய நிலை தலைமைக்கு ஏற்பட்டிருக்கலாம்.
எனினும் இதன் லாபம் அவருக்கு தமிழக தேர்தலில் கிடைக்க வாய்ப்புள்ளது''
என்றார்.
தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு
மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
உறுதிபட கூறினார். ஆனால் இவ்வாறு நிபந்தனை விதிக்க அவருக்கு காங்கிரஸ்
தலைமை அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, விருப்ப மனு
அளிக்காத சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சிதம்பரத்தின் தேசிய செல்வாக்கு மட்டுமே
காரணம் என்று கூற முடியாது என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இது குறித்து மக்களவை முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி ‘தி இந்து’விடம்
தொலைபேசியில் கூறும்போது, ''தெளிவான, திறமையான பேச்சுகளால் தமிழக மக்கள்
மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் சிதம்பரம். கடந்த 2006-ல் தமிழக
தேர்தலின்போது, திமுகவால் அறிவிக்கப்பட்ட இலவசங்களை மக்கள் நம்பவில்லை.
இந்த இலவசங்கள் சாத்தியமே என பிரச்சாரக் கூட்டங்களில் சிதம்பரம் எடுத்துக்
கூறியதும், திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க உதவியது. தமிழக தேர்தல்
நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து சோனியா, ராகுல் ஆகிய இரு தலைவர்களும்
சிதம்பரத்தை இதுவரை 3 முறை நேரில் அழைத்து பேசி உள்ளனர். சிதம்பரத்தின்
ஆதரவாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யாததற்கு, அந்த நேரத்தில் தமிழக
காங்கிரஸ் மீது சிதம்பரத்துக்கு இருந்த ஒரு மனக்குறைதான் காரணம் என்பதை
தலைமை அறிந்துகொண்டது. இதை சரிசெய்யும் முயற்சியும் தற்போது முடுக்கி
விடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அவர் ஹீரோதான். இதற்கு திமுகவுடனான தொகுதி
பங்கீட்டு குழுவில் 5 பேர் சமீபத்தில் அவரை சந்தித்ததை கூட கூறலாம்''
என்றார். //tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக