வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்கள் மக்களிடம் உண்டியல் ஏந்தலாமா? உங்க கட்டிடத்துக்கு ஏன்யா நான் தரணும்?

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு ஏப்ரல் 17 -ஆம் தேதி நட்சத்திர கிரிக்கெட்நடத்தப்படுகிறது.டிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்களின் சங்க கட்டிடத்தை கட்டவும் பொதுமக்களிடம்தான் உண்டியல் ஏற்க வேண்டுமா என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடிகர் சங்க கடனைஅடைக்க, விஜயகாந்த் சங்க தலைவராக இருந்தபோது வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
அதில்கலந்து கொள்ள மறுத்த அஜித், வேண்டுமானால் பணம் தருகிறேன் என்றார். அதனை ஏற்க மறுத்த விஜயகாந்த், ரஜினி, கமலிடம் இல்லாத பணமா? உன் பணம் தேவையில்லை என்று அஜித் கொடுக்க முன்வந்த 10 லட்சத்தை ஏற்க மறுத்ததுடன் அவரை ஏக வசனத்தில் விமர்சிக்கவும் செய்தார்.
நடிகர் சங்கம் நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறது என்றவுடன், சில ஊடகங்கள் இந்த பழைய சம்பவத்தை எடுத்துப் போட்டு, அஜித் இப்போது அதனை சொன்னதுபோல் செய்தி வெளியிட்டன. நடிகர்கள் பொதுமக்களிடம்  உண்டியல் ஏந்தக் கூடாது என்ற தங்களின் எண்ணத்துக்கு வலுசேர்க்க அஜித்தை துணைக்கழைத்துக் கொண்டனர்.இந்நிலையில், நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ஒரு காட்டமான அறிக்கை நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அஜித்தை மறைமுகமாக கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித்தும், சிம்பும் நட்சத்திர கிரிக்கெட்டை புறக்க தீர்மானித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சங்கத்தின் இந்த அறிக்கை கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.சர்ச்சைக்குரிய அவ்வறிக்கை -ஓரிரு பால் வியாபாரம் செய்பவர் பால் விற்பனை செய்து அதன் மூலம் அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். ஒரு தொலை தொடர்பு தகவல் சேவை மையம் POST PAID, PREPAID, NET PACK, CALLER TUNE வசதிகளை அறிமுகம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். அதே போலத் தான் நடிகர்கள் நடிகைகள் நலிந்த நாடக நடிகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களின் வாழ்வு  மேம்பட நட்சத்திர கிரிக்கெட் ஏற்பாடு செய்து அதன் மூலம் நலிந்த நாடக நடிகர்களின் வருமானத்திற்கு வழி செய்ய ஒற்றுமையுடன் செயல்படுகிறார்கள். நடிகர் சங்கக் கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ஒன்று. இதை நட்சத்திர கிரிகெட்டில் பங்குபெறும், ஆதரிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் தனது சொந்த செலவிலே கட்ட முடியும். ஆனால் நலிந்த நடிகர்களின் பங்கு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே ஒரு பொது நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அதன் மூலம் நடிகர்கள் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க உள்ளனர். ஒருசில நடிகர்கள் தங்களது பண வசதியை காட்டவும், பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமலும், தனது ரசிகர்களைக் கொண்டு தனது திரைக் குடும்பத்தையே விட்டுக் கொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள். கலைத்துறை சார்ந்த எந்தவொரு விழாவையும் முதலில் புறக்கணிப்பவர்களும் இவர்களே. 
நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப்படுகிறது, நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர்களை தூண்டிவிட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? நடிகர் நடிகைகள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்கள் தங்கள் நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமானத்தை விட்டுவிட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர். தனது ரசிகர்களுக்குக்கூட முக்கியத்துவம் தராத ஒருசில நடிகர்களுக்கு, நாடக நடிகர்களின் முக்கியத்துவம் தெரிய வாய்ப்பில்லை. 
 
சில நடிகர்கள், நடிகர் சங்க கட்டிடம் நடிகர்களின் சொந்த செலவில் கட்டப்பட வேண்டும் மக்களை சுரண்டக் கூடாது என்கிறார்களே. அவர்கள் நடித்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகுதானே திரையரங்கத்துக்கு உள்ளே விடுகிறார்கள். அந்நேரம், அந்த நடிகர்கள், என் ரசிகர்களிடம், மக்களிடம் காசு வாங்காதீர்கள் என்று அறிக்கைவிட வேண்டியதுதானே? அல்லது தாங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்டப்பட கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியதுதானே? இந்திய கிரிக்கெட் அணி விளையாட்டை காண நுழைவு கட்டணம் பெற்றுத்தான் செல்ல வேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப்படுகிறது என்று குற்றம்சாற்றுவார்களா?
தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறிய முடியும்? சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. அவர்கள் தங்கள் திரைக்குடும்ப தேவைகளை சரி செய்ய அனைத்து நடிகர்களும் ஒன்றுகூடி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவுக்காக அல்ல என்பதை அறிய வேண்டும். விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரேயொரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் அவர்கள் அவர்களின் திரை குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று  யோசித்துப் பார்க்க வேண்டும். 
- இந்த அறிக்கை முழுவதிலும் அஜித்தை குறி வைத்தே வார்த்தைகள் கொட்டப்பட்டிருக்கின்றன. நடிகர் சங்கத்தின் இந்த அறிக்கையில் விவேகம், நிதானம், நாகரிகம் என எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. அவசரமும், ஆத்திரமும் மட்டுமே அறிக்கை முழுவதும் விரவிக் கிடக்கிறது.
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் செய்திருக்கும் முதல் மோசமான நடவடிக்கை என்று இந்த அறிக்கையை சொல்லலாம்
 

கருத்துகள் இல்லை: