சனி, 9 ஏப்ரல், 2016

மக்கள் நல கூட்டணியில் தமாக......வைகோவின் பதவி இனி வாசனுக்கு?

விகடன்,காம் :போயஸ் தோட்டத்தின் கதவுகளுக்குப் பிடி கொடுக்காத வாசன், இப்போது மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. 'ஓரிரு நாளில் இதுபற்றிய முறையான அறிவிப்பை வாசன் வெளியிடுவார்' என்கின்றனர் த.மா.காவினர். 'தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க பேசிக் கொண்டிருக்கிறது' என அதிர வைக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். இதற்கு வாசன் தரப்பில் எந்தப் பதிலும் இல்லை. 'வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கிறது. விரைவில் எங்கள் முடிவை அறிவிப்போம்' என யோசித்துக் கொண்டே இருக்கிறார் வாசன். இதுவரை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வாசன் அளவுக்கு யோசித்தவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்."என்ன முடிவில்தான் இருக்கிறார் வாசன்?" என்ற கேள்வியை த.மா.காவின் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டோம். பழைய விட்டலாச்சாரியின் விடாகண்டன் கொடாக்கண்டன் படம் ஞாபகத்துக்கு வரது  இதெல்லாம் என்ன உறவோ இன்ன பிரிவோ காசு பார்க்கும் மேடையில்
" இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என ஜெயலலிதா உறுதியாகத் தெரிவித்துவிட்டதால், அ.தி.மு.க கூட்டணியில் சேரும் எண்ணத்தை விட்டு வெளியே வந்துவிட்டோம்.  அடுத்தகட்ட ஆப்ஷன்களைப் பற்றித்தான் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். பா.ஜ.கவோடு எந்தக் காலத்திலும் கூட்டணி சேரும் முடிவை அவர் எடுக்க மாட்டார். மதச்சார்பற்ற தலைவர் என்ற பிம்பத்தை இழக்க அவர் என்றுமே விரும்ப மாட்டார். அவரது தந்தை மூப்பனாரும் இதே கொள்கையில் உறுதியாக இருந்தவர். பா.ம.கவோடு கூட்டணி அமைத்தாலும், அது வெற்றிக் கூட்டணியாக இருக்காது. தி.மு.க அணியில் வாசன் இணைவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. எங்கள் தலைவரும் காங்கிரஸ் அணியில் இருப்பதை விரும்பவில்லை. எங்கள் கண்முன் இருக்கும் ஒரே ஆப்ஷன், மக்கள் நலக் கூட்டணி மட்டும்தான். அந்தக் கூட்டணியின் தலைவர்கள் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. மத்திய கப்பல் துறை அமைச்சராக இருந்தபோதும், மிஸ்டர் கிளீன் இமேஜோடுதான் வாசன் இருந்தார். இதுவரையில் நேர்மையான தலைவராக இருக்கிறார். எனவே, எங்களை வரவேற்பதில் மக்கள் நலக் கூட்டணிக்கு எந்தத் தயக்கமும் இருக்கப் போவதில்லை" என்றவரிடம், "எவ்வளவு சீட்டுகள் வரையில் கேட்க இருக்கிறீர்கள்?" என்றோம்.

" காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களை தி.மு.க ஒதுக்கியிருக்கிறது. அதைவிட, நான்கு சீட்டுகள் கூடுதலாகக் கேட்க இருக்கிறோம். விஜயகாந்துக்கு 124 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், இருந்து சில இடங்களும் மக்கள் நலக் கூட்டணியின் இதர தலைவர்களிடம் இருந்து சில இடங்களையும் கேட்டுப் பெறுவோம். நாங்கள் செல்வதால் மக்கள் நலக் கூட்டணிக்குக் கூடுதல் பலம் கிடைக்கும். தவிர, சமீப நாட்களில் வைகோவின் பேச்சால், மக்கள் நலக் கூட்டணிக்குள் சலசலப்பு இருந்து வருகிறது. இதைத் தவிர்க்க, வாசனை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கவும் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பொறுப்புக்கு வாசன் வந்தால், எதிர்க்கட்சித் தலைவர்கள் எதுவும் பேச மாட்டார்கள். யாரையும் கடுமையாகப் பேசும் எண்ணமும் வாசனுக்கு இருந்ததில்லை. எனவே, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது" என அசர வைத்தார் அவர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர், " வாசன் எங்கள் அணிக்குள் வந்தாலும், மக்கள் நலக் கூட்டணியின் 110 இடங்களில் ஒரு இடம்கூட ஒதுக்குவதற்கு வாய்ப்பு இருக்காது. அவர் விஜயகாந்திடம் பேசித்தான் தொகுதிகளை வாங்கிக் கொள்ள வேண்டும். இதை முன்பே விஜயகாந்திடம் பேசிவிட்டோம். வாசனுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பதை தே.மு.தி.கதான் முடிவு செய்யும். எங்களுக்கு அந்தப் பொறுப்பு இல்லை" என்றார் தெளிவாக.

கூட்டணி குழப்பம் தீர்வதற்குள் தேர்தல் முடிந்துவிடாமல் இருந்தால் சரி...!

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: