சனி, 9 ஏப்ரல், 2016

தேமுதிகவின் இரு அணிகளும் 10-ம் தேதி போர் முழக்கம்....ஒழுங்கு நடவடிக்கைகளில் இருபகுதியும் வேகம்.....

விகடன்.காம் :தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 10-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார், அதிருப்தியாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் திமுகவுடன், தேமுதிக கூட்டணி சேரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணிக்கு அழைத்தனர். இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சு நடந்து வருவதாக தகவல் பரவியது. இந்த சூழ்நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பு திமுகவினரையும், அக்கட்சியினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பல மாவட்டச் செயலாளர்கள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை பின்வாங்கினர். 


இந்த நிலையில், ஏற்கனவே கூட்டணிக்கு வருமாறு நேரில் சென்று அழைத்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு விஜயகாந்த் திடீரென அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் , தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைக்கப்பட்டதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டணி அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த தேமுதிகவினர், தாங்கள் ஏற்கனவே கட்டியிருந்த பணத்தை தலைமையிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இதனிடையே, விஜயகாந்தின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட எம்எல்ஏ சந்திரகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பார்த்திபன், சேகர், மூன்று மாவட்டச் செயலாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து, சந்திரகுமார் உள்பட போர்க்கொடி தூக்கிய அனைவரையும் கட்சியில் இருந்து விஜயகாந்த் நீக்கியதோடு, அன்றே நீக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கு புதியவர்களை நியமித்தார்.

இதையடுத்து, கட்சியில் இருந்து எங்களை நீங்கியது செல்லாது என்று சந்திரகுமார் உள்ளிட்ட அதிருப்தியாளர்கள் அதிரடியாக அறிவித்தனர். "ஒழுங்கு நடவடிக்கை குழுவில் மொத்தம் 24 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 5 பேர் எங்களிடம்தான் இருக்கிறார்கள். இதனால் எங்களின் விளக்கத்தை கேட்காமல் நீக்கியது செல்லாது" என்று சந்திரகுமார் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் 10ம் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என்றும், கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் விஜயகாந்த் அறிவித்தார்.

இந்த நிலையில், அதே நாளில் அதாவது, ஏப்ரல் 10ம் தேதி சென்னை தியாகராயர்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிருப்தியாளர்கள் கூட்டத்துக்கு சந்திரகுமார் ஏற்பாடு செய்துள்ளார். "கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இசைந்த கருத்துள்ளவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சந்திரகுமார் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், கட்சியின் சின்னத்தை கைப்பற்றும் முயற்சியிலும் அவர் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மூன்றில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்தாலே கட்சியின் சின்னத்தை கைப்பற்றி விடலாம். அந்த வகையில் சந்திரகுமார் காய் நகர்த்தி வருவதாகவும், அதே நேரத்தில், இதனை முறியடிக்கும் முயற்சியில் விஜயகாந்த் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக சட்ட நிபுணர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ ஒருவரிடம் கேட்டபோது, ''ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ள அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு, ஏற்கனவே கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், அதிருப்தியாளர்கள் ஆகியோருக்கு அழைப்பு கொடுத்துள்ளோம். அந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

கட்சியையும், கட்சி சின்னத்தையும் கைப்பற்ற போவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டபோது, ''யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது'' என்றார்.

ஒரே நாளில் விஜயகாந்த் நடத்தும் செயற்குழு கூட்டம் மற்றும் அதிருப்தியாளர்கள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தால் ஏப்ரல் 10-ம் தேதி கலகலக்க போவது உறுதி!

-மு.சகாயராஜ்

கருத்துகள் இல்லை: