ஞாயிறு, 9 மார்ச், 2014

எல்லா புகழும் தா பாண்டியனுக்கே ?.தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கடைசி அத்தியாயம் !

கூட்டணியிலிருந்து, அ.தி.மு.க., கழற்றி விட்ட பின், "இணைந்து செயல்படுவோம்' என, அறிவித்த, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தன்மானம் தடுப்பதால், எதிரெதிர் திசையில் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. "அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்ட, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்' என, கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.தயக்கம் : அந்த அழைப்பை ஏற்று, தமிழகத்தில், தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்துள்ளது. அதேநேரத்தில், தன்மானப் பிரச்னையில், தி.மு.க., அணியில் சேர, மார்க்சிஸ்ட் கட்சியினர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை எடுக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "லோக்சபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, இன்னும் அவகாசம் உள்ளது. அதனால், நாங்கள் அவசரப்படவில்லை. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம். வரும், 11 அல்லது, 12ம் தேதி எங்களது முடிவை அறிவிப்போம். கூட்டணியா, இல்லையா என்பதை தெளிவுபடுத்துவோம்' என்றார்.

தவறான முடிவு : அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவினர், தி.மு.க., உடன் கூட்டணி சேர வேண்டும் என, வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டை மேற்கு வங்கம். அங்கு கட்சிக்கு பிரதான எதிரியாக இருக்கும், மம்தா பானர்ஜியுடன், ஜெயலலிதா கைகோர்த்துள்ளார். அதனால், ஜெயலலிதாவுக்கு எதிராக, கட்டாயம் அணி சேர வேண்டும். இதில், மாநில மூத்த நிர்வாகிகள் தவறான முடிவை எடுத்தால், அதை ஏற்க முடியாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்த விவகாரத்தால், மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளே மோதல்கள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், "தனித்துப் போட்டியிடும் முடிவை, மார்க்சிஸ்ட்கள் எடுத்தால், அதை ஏற்க முடியாது' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர்.


நாளை வெளியிடப்படுகிறது :

தி.மு.க., அணியில், விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மக்கள் மனித நேய கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதி என, உடன்பாடு முடிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கியது போக, தற்போது தி.மு.க.,விடம், 36 தொகுதிகள் உள்ளன. இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., அணிக்கு வந்தால், அவர்களுக்கு நான்கு தொகுதிகள் முதல், ஆறு தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம். அது நடக்காதபட்சத்தில், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, நாளை வெளியிட, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று அறிவாலயத்தில் பேட்டி அளித்த, கருணாநிதி கூறியதாவது:
அவர்கள் பேச்சு நடத்த முன்வந்தால், எத்தனை தொகுதிகள், அவர்களுக்கு தரப்படும் என்பதற்கெல்லாம், பதில் சொல்ல முடியாது. பா.ஜ., அணிக்கு தே.மு.தி.க., சென்றது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்கனவே ஒரு தொகுதி தரப்பட்டது. போதவில்லை என, வலியுறுத்தியதால், மேலும், ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணிக்கு, இடதுசாரி கட்சிகள் வந்தால் வரவேற்போம் என, சொல்லியிருக்கிறேனே தவிர, வருவார்கள் என, நான் சொல்லவில்லை.இவ்வாறு, கருணாநிதி கூறினார் தினமலர்.com னு 

கருத்துகள் இல்லை: