இது வெறும் பூச்சாண்டி வேலை என்று, தி.மு.க.,வில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அழகிரியை வைத்து, காங்கிரஸ் தீட்டியுள்ள 'ஏ பிளான்' (தினமலர், தேர்தல் களம், மார்ச் 13) நடவடிக்கைகள் தான் இவை என, அழகிரிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அழகிரியின் நிலையை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலையோடு சேர்த்துப் பார்த்தால் இந்த திட்டம் புலப்படும்.அழகிரியின் நிலை: தற்போதைய நிலையில், தி.மு.க.,வில் அழகிரிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில், ஸ்டாலின் உறுதியாக உள்ளார். ஸ்டாலினின் முழு கட்டுப்பாட்டில் கட்சி உள்ளதால், அழகிரிக்கு வேறு நுழைவாயில்களும் இல்லை. அதனால், ஸ்டாலினை வீழ்த்தினால் மட்டுமே, தி.மு.க.,வில் தனது முக்கியத்துவத்தை நிலைநாட்ட முடியும் என்ற, நிலைக்கு அழகிரி தள்ளப்பட்டு உள்ளார். போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
இதை செய்வதற்கான சிறந்த வாய்ப்பு லோக் சபா தேர்தல் என்பதை, அழகிரி கணித்து உள்ளார். ஏனெனில், கூட்டணி விஷயத்திலும், வேட்பாளர் தேர்விலும் ஸ்டாலின் தான் முடிவெடுத்து உள்ளார். அதாவது, இந்த முறை, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., தேர்தலை சந்திக்கிறது. அதனால், லோக் சபா தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைந்தால், அது ஸ்டாலினின் தோல்விக்கு சமம். அதனால் தான், தற்போதே, 'தி.மு.க., ஓரிரு இடங்களில் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை' என்று, அழகிரி பேட்டியளித்து வருகிறார். இதே கருத்தை அவர் பிரதமரிடமும், ராஜ்நாத் சிங் இடமும் கூறியதாக தெரிகிறது.
அரசியல் நிலை: ஒரு பக்கம், ஸ்டாலின் மீது, அழகிரி கோபமாக இருக்க; மறு பக்கம், கூட்டணியை முறித்ததற்காக, காங்கிரசும், ஸ்டாலின் மீது கடும் கோபத்தோடு இருக்கிறது. தி.மு.க., உடனான கூட்டணி முறிந்ததற்கு, அழகிரியிடம், பிரதமர் வருத்தம் தெரிவித்தாலும், தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற, குறிக்கோளோடு காங்கிரஸ் செயல்படுகிறது.
அதே நேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் லோக் சபா தேர்தலில் போட்டியிடாமல் ஓட்டம் பிடிப்பதாலும், காங்கிரசுக்கு தமிழகத்தில் பெரிய ஓட்டு வங்கி இல்லை என்பதாலும், அழகிரி மூலமாகவே, தி.மு.க.,வை வீழ்த்தும் திட்டத்தை காங்கிரசால் செயல்படுத்த முடியும். இந்த நிலையில், பா.ஜ.,மற்றும் அதனோடு அணி சேர்ந்து உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நேரடியாக களம் காணும் இடங்களில், அவை அ.தி.மு.க., ஓட்டை பிரிக்கும், அதனால், அந்த தொகுதிகளில் தி.மு.க.,விற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. இந்த ஒன்பது தொகுதிகளிலும் கூட தி.மு.க., வெற்றி பெற்று விடக் கூடாது என்பதில், அழகிரி உறுதியாக இருக்கிறார்.
மொத்த கணக்கு: அந்த ஒன்பது தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு அழகிரியின் ஆதரவு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தான், அழகிரி, ராஜ்நாத் சிங் இடம் பேசியதாக தெரிகிறது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, மோடியும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவும் என, கூறப்படுகிறது. அழகிரியின் ஆதரவோடு, இந்த, ஒன்பது தொகுதிகளிலும், தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், மற்ற தொகுதிகளில் தி.மு.க.,வை அ.தி.மு.க., பார்த்துக் கொள்ளும். சில இடங்களில் தே.மு.தி.க., - பா.ம.க., கவனித்துக் கொள்ளும் என்பது, காங்கிரஸ் கணக்கு. ஆக, பா.ஜ., ஜெயிக்க காங்கிரஸ் உதவும்!
ரஜினி எதற்கு? இந்த திட்டத்திற்கு, ரஜினியையும் பயன்படுத்தும் நோக்கோடு தான், அழகிரி, நேற்று, ரஜினியை சந்தித்து உள்ளார். மோடி மீது பற்றுள்ளவர் ரஜினி. நேரடியாக மோடிக்காக அவர் ஓட்டுக் கேட்காவிட்டாலும், மறைமுகமாக மோடிக்கு ஆதரவாக, அவர் ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, அழகிரி விரும்புகிறார். 'கோச்சடையான்' படம் மிகப் பெரிய அளவில் தயாராகி உள்ளது. அதன் சிறப்பு காட்சியை, மோடிக்காகபோட்டு காட்டலாம்; அதில் பங்கேற்கும் மோடியை புகழ்ந்து, இரண்டு வார்த்தைகள் ரஜினி பேசினாலே போதும், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அது போய் சேர்ந்து விடும் என்பது, அழகிரியின் எதிர்பார்ப்பு. இதில் எதெல்லாம் நிறைவேறுகிறதோ இல்லையோ, அழகிரியின் ஆட்டத்தால், தி.மு.க., வட்டாரம் மெல்ல ஆட்டம் காணத் துவங்கி உள்ளது. எதற்காக இவர் ஒவ்வொருவரையும் போய் சந்திக்கிறார் என்ற, கேள்விக்கு விடை தேடி, தி.மு.க., தலைமையின் விசாரணை நாலாபுறமும் துளைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், இதெல்லாம் ஸ்டாலினை பயமுறுத்தவும், தி.மு.க.,வில் குழப்பம் ஏற்படுத்தவும் அழகிரி போடும் நாடகம் என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அழகிரி நடத்துவது அதிரடி ஆட்டமா? அல்லது, வெறும் மிரட்டல் நாடகமா என்பதற்கு, 17ம் தேதி விடை தெரிந்து விடும். அன்றைய தினம், மதுரையில் ஆதரவாளர்களை திரட்டி, தி.மு.க.,வில் உள்கட்சிப் போருக்கான அறிவிப்பை, அழகிரி வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக