வியாழன், 13 மார்ச், 2014

பிரதமர் அழகிரி சந்திப்பு ! தி.மு.க. தலைவர்களிடம் கடும் அதிர்ச்சி ! தென் மாவட்டங்களில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு ?


தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள மு.க.அழகிரி தி.மு.க.வை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த திங்கட்கிழமை தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட போது, ‘‘பணம் வாங்கிக் கொண்டு சீட் கொடுத்து இருக்கிறார்கள்’’ என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தாலும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக மு.க.அழகிரி செயல்பட மாட்டார் என்று கூறப்பட்டது. இதனால் மு.க.அழகிரியின் செயல்பாடுகளை தி.மு.க. மூத்த தலைவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மு.க. அழகிரி ஐதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று காலை மு.க.அழகிரி சந்தித்து பேசினார். பிறகு வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய மந்திரி சபையில் சேர்ந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தேன். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு பொன்முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் கோரிக்கை விடுத்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியதற்கு பிரதமர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.
இது தொடர்பாக எனது அடுத்த கட்ட முடிவு பற்றி ஆலோசனை செய்து வருகிறேன். தொண்டர்களிடம் கலந்து பேசிய பிறகு 2 மாதங்களில் எனது முடிவை தெரிவிப்பேன்.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன்சிங்கை மு.க.அழகிரி சந்தித்து பேசியது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அவர் மாறக்கூடும் என்று உறுதி செய்யப்படாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மு.க. அழகிரி பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதமருடன் அவர் பேசியதாக தெரிகிறது.
மு.க.அழகிரியின் இந்த திடீர் நடவடிக்கை தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வுக்கு எதிராக அவர் களம் இறங்குவதால் தென் மாவட்டங்களில் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட கூடும் என்று நினைக்கிறார்கள்.
இந்த நிலையில் மதுரை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி விரைவில் அழகிரியை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு கொள்ள இருப்பதாக கூறினார். ஆனால் அவரை அழகிரி சந்திப்பாரா? என்று தெரியவில்லை.
நாளை மதுரை திரும்பும் அழகிரி தன் ஆதரவாளர்களை சந்தித்து பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் பிறகே மு.க.அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவான நிலையை எடுப்பார்களா? என்பது உறுதியாகத் தெரிய வரும்.maalaimalar.com/


கருத்துகள் இல்லை: