1781862_601634763238986_1959423679_n
பல நூற்றாண்டுகளாக பெண்களை இழிவாக நடத்திய தேவதாசி முறையை எதிர்த்து போராடி அதை ஒழித்துக் கட்டியவர் டாக்டர் முத்துலட்சுமி.
அப்போது தேவதாசி முறையை ஆதரித்தும் டாக்டர் முத்துலட்சுமி அம்மையா் கொண்டு வந்த மசோதாவை எதிர்த்தும் காங்கிரஸ்காரரான சத்தியமூர்த்தி அய்யர்,
”மனித குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் இருக்கிறது. இப்படிக் கூறுவதால் என்னை தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. தாசிகளை ஒழித்தால் பரத நாட்டியக் கலை அழிந்துவிடும்.“ என்றார்.
அப்படியானால், இனி அந்த புனிதமான வேலையை உங்கள் சமூகப் பெண்களை வைத்துக் செய்துகொள்ளுங்கள் என்று பணிவோடு பதிலடி கொடுத்தார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
ஆனால், இன்றைக்கு தினமணி, தினகரன் உட்பட பல பார்ப்பன பத்திரிகைகள், இந்த செய்திகளையும் பெரியாரின் அரசியலில் அவரின் பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்து அவரின் தந்தை நாராயண சுவாமி ‘அய்யர்’ என்று அவரை ஒரு பார்ப்பனராக சித்திரிக்கிறார்கள்.
பெரியார் வழியாக அவர் அரசியல் அறிவு பெற்றதினால்தான் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டம், தேவதாசி எதிர்ப்பு மாசோதா, தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் முதலியவற்றை சிறப்பாக செய்தார்.
பார்ப்பனர்களோ, டாக்டர் முத்துலட்சுமியின் தந்தை ‘நாராயண சுவாமி அய்யர்’ என்று அழுத்திச் சொல்கிறார்கள்.
ஆனால், டாக்டர் முத்துலட்சுமி திருமணத்திற்கு முன்பும் பின்பும் தன் பெயருக்கு பின் ‘அய்யர்’ என்று போட்டுக்கொள்ளவில்லை. அதை இழிவாக கருதிய அவர்தான், தன் கணவருக்கு பின்னால் இருந்த ‘ரெட்டி’ என்கிற பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டா்.
ஜாதி படிநிலையில் ‘அய்யர்’ என்பதே உயர்ந்தது. ‘ரெட்டி’ ஒரு சூத்திர ஜாதி.
ஆனால், அய்யரை விட ரெட்டியை அவர் உயர்வாக அல்லது மரியாதையாக கருதியதற்கான காரணம் புரிய வேண்டுமானால் அவரின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ‘நாராயண சுவாமி அய்யர்’ தந்தையா? குற்றவாளியா? என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
இசைவேளாளர் சமூகத்தை, தேவதாசி சமூகமாக நடத்திய பார்ப்பன கும்பல், இசைவேளாளர் சமூகத்திலிருந்து வந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரை பார்ப்பனராக சித்தரிக்கிறது,
இந்த நாட்டுக்காக ‘பாடுபட்ட’ பார்ப்பன சமூக முற்போக்காளர்கள் வரிசையில் கணக்கு வைத்துக் கொண்டு பார்ப்பனியத்தின் சதியை மறைக்க முயற்சிக்கிறது.
அவர் தன்னை பார்ப்பனராக உணர்ந்திருந்தால், சத்தியமூர்த்தி அய்யரை பார்த்து, ‘உங்கள் சமூகப் பெண்களை வைத்துக் செய்துகொள்ளுங்கள் ’ என்று என் பேச வேண்டும்?
அது மட்டுமல்ல அவர் பார்ப்பனராக இருந்திருந்தால், பெண் விடுதலைக் குறித்தும் பெண் கல்வி குறித்தும் தீவிராக எழுதிய பாரதி, 1912 ஆண்டே இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி குறித்து பாராட்டி பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்.
ஆனால், உலகத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்த நம் மஹாகவியோ, உள்ளுர் பெண்ணின் அகில இந்திய சாதனை குறித்து, ஒரே ஒரு வார்த்தைகூட எழுதவில்லை.
*
மார்ச் 8 அன்று face book ல் எழுதியது.