வியாழன், 13 மார்ச், 2014

பாலியல் பொறுக்கிகள் இருக்கவேண்டிய இடம் தமிழ்த்துறை அல்ல! ஜெயசாந்தியை கட்டாயப்படுத்தியிருக்கிறார் !

சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் ஜோஸ்பின் ஜெயசாந்தி. 2008-ம் ஆண்டு அவர் பணி புரிந்து வந்த தமிழ்த்துறையில், தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் எஸ்.ஏ. ராஜராஜன். இவர் துறை தலைவர் எனும் முறையில் அதிகாரத் திமிரில், ஜெயசாந்திக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். துறைத் தலைவரான தன்னுடன் வெளியூர்களில் நடக்கும் கல்வித்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அழைப்பதும், தங்குவதற்கு ஹோட்டலில் அறை எடுப்பதாக கூறுவதும் அவரது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ராஜராஜனுடைய நோக்கத்தை புரிந்து கொண்ட ஜெயசாந்தி அவரது அழைப்புகளை உறுதியாக மறுத்து வந்திருக்கிறார்.

இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார் ராஜராஜன். விடுமுறை ஒப்புதல் கேட்டு போகும்போது சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு முகத்தில் லெட்டரை தூக்கி எறிந்து, ஆபாசமான வார்த்தைகளில் திட்டியிருக்கிறார். இந்த தொல்லைகளை பொறுக்க முடியாமல் பதவி விலகல் கடிதம் கொடுத்த ஜெயசாந்தியை அப்போதைய கல்லூரி முதல்வர் சமாதானப்படுத்தி பணியில் தொடர வைத்திருக்கிறார். ஆனால் ஜெயசாந்திக்கு அநீதி இழைத்த ராஜராஜன் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ராஜராஜனோ, ஜெயசாந்தியின் பதவி உறுதி செய்யப்படுவதை அற்ப காரணங்கள் சொல்லி தள்ளிப் போடுவது, அவரை தன் கீழ் ஆய்வு மாணவராக சேரும்படி வலியுறுத்துவது, வெளியூர் பயணங்களில் தன்னுடன் வரும்படி வற்புறுத்துவது என்று பாலியல் வக்கிர நோக்கத்துடன் தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார். ஜெயசாந்தியின் இருக்கையை தனது அறைக்கு மாற்றி அங்கு வந்து உட்காரும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். மற்றவர்களின் எதிரிலேயே, ஜெயசாந்தியை பாலியல் ரீதியாக திட்டுவதையும், ஆபாசமாக பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
தமிழ் துறையின் உதவி பேராசிரியராக இருந்த பிரின்ஸ் என்பவரும் ராஜராஜனுடன் சேர்ந்து இருவருமாக ஜெயசாந்தியை அச்சுறுத்தியிருக்கின்றனர்.
தொடர்ந்து வரும் இந்த கொடுமைகளை தாங்க முடியாத ஜெயசாந்தி 13.12.2012 அன்று கல்லூரியின் பாலியல் வன்முறைக்கு எதிரான குழுவில் புகார் கொடுத்தார். புகாரை விசாரிப்பதில் கல்லூரி நிர்வாகம் அக்கறை காட்டாத நிலையில், ஜெயசாந்தி பல முறை நினைவுபடுத்திய பிறகு ஐந்து பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
புகாரை விசாரித்த குழு தனது விசாரணை அறிக்கையை 23.4.2013 அன்று கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் ராஜராஜனுக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுத்த கல்லூரி நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு மேற்சொன்ன ஆவண நகலை ஒப்படைக்கவில்லை. மேலும் தொடர்ந்து ஆவண நகல் ஒப்படைக்க பேராசிரியர் ஜெயசாந்தி நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் கல்லூரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சமாதானமாக போகச் சொல்லி வலியுறுத்தியது.
ஆனால் பாலியல் வன்முறை செய்த ராஜராஜனோ தொடர்ந்து கீழ்தரமான வகையில் வசை பாடுவது, பிரின்ஸ் உடன் இணைந்து புகாரை திரும்பப்பெறுமாறு கொலை மிரட்டல் விடுவது, பாலியல் புகார் விசாரணையில் சாட்சி சொன்னவர்களை அச்சுறுத்துவது என்று தனது கொடுமைகளை தொடர்ந்திருக்கிறார்.
அதனால் 31.12.2013 அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து கிரிமினல் புகார் வழங்கப்பட்டது. 2 மாதம் புகார் பதிவு செய்யப்படாததால் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நீதிமன்றத்தை அணுகி (Crl.O.P.No.4427|14) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பெறப்பட்டது. (6.3.2014)
மேலும் பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் (W.P.34958|13) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தொடர்ந்த 2 வழக்குகள் மூலம் வெளிவந்த ஊடக செய்திகள் கல்லூரி நிர்வாகத்தை நெருக்கடியில் தள்ளவே, நியாயமான முடிவை எடுக்காமல் அயோக்கியர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்து கடந்த 28.2.2013 அன்று பேரா.ஜெயசாந்தியை கல்லூரியை விட்டு நீக்கியது.
வேலையிடங்களில் பாலியல் தொல்லைத் தடை சட்டம் 2013-ன்படி பாலியல் புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் விசாகா வழக்கில் உச்சநீதிமன்ற வழிகாட்டல்களும் கல்லூரி நிர்வாகத்தால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
மேற்கூறிய சட்டத்தின்படி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிரிமினல் புகார் வழங்க உதவ வேண்டும், அனுசரணையாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக கிரிமினல் பேர்வழிகளான பேராசிரியர் ராஜராஜன் மற்றும் பிரின்ஸ்-ன் கைக்கூலிகளாக லயோலா கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.
லயோலா நிர்வாகமே!
  • பாலியல் வன்முறை செய்த பேராசிரியர் ராஜராஜன் மற்றும் கொலை மிரட்டல் கொடுத்த பேராசிரியர் பிரின்ஸை உடனே பணிநீக்கம் செய
  • பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியர் ஜோஸ்பின் ஜெயசாந்தியை பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்பட்ட பணி நீக்கத்தை உடனே ரத்து செய்.
தமிழக அரசே! காவல்துறையே!
  • கிரிமினல் பேராசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்! கைது செய்து சிறையில் அடை
என்ற கோரிக்கையை முன்வைத்து பாலியல் வன்முறையாளன் இராஜராஜனையும், ‘மாமா’ பயல் பிரின்ஸையும் பாதுகாக்கும் லயோலா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மார்ச் 10, 2014 அன்று மாலை 4 மணிக்கு  லயோலா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
____________________
பின் குறிப்பு: சென்னையின் மேட்டுக்குடியினர் அதிகம் படிக்கும் லயோலா கல்லூரியில்தான் அதிகார வர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரது வாரிசுகளும் படிக்கின்றனர். ஒப்புக்கு இரண்டு ஏழை மாணவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு அதை ஒரு பெரிய சேவை போல காட்டி விட்டு ஆளும் வர்க்க இளவரசர்களை உருவாக்கி வருகிறது இந்தக் கல்லூரி. ஏசு சபை நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் இந்தக் கல்லூரியின் ஒழுக்கம் எப்பேற்ப்பட்டது என்பதை இந்த சம்பவம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. ஒருபுறம் மைய, மாநில அரசுகளின் அமைச்சர்கள், அப்துல் கலாம் போன்றவர்கள் அடிக்கடி வந்து பேசும் கல்லூரியாக லயோலா திகழ்கிறது. மறுபுறம் தன்னார்வக் குழுக்கள், தலித் அமைப்புகள், தமிழினவாதிகள் அனைவருக்கும் இடமோ இல்லை பேசவோ வாய்ப்பு கொடுத்து கொஞ்சம் முற்போக்கு சாயலையும் காட்டிக் கொள்கிறார்கள். ஆனாலும் இப்பேற்ப்பட்ட ஒளிவட்டத்துடன் இருக்கும் இந்தக் கல்லூரியும் அதன் நிர்வாகமும் எப்படி ஒரு பெண்ணை அயோக்கியத்தனமாக நடத்தியிருக்கிறார்கள் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். லயோலா கல்லூரியின் கூட்டங்களில் கலந்து கொண்டோரும், பேசுபவர்களும் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியருக்கு குரல் கொடுப்பார்களா, இல்லை லயோலாவை பகைக்க முடியாது என அமைதி காப்பார்களா?
- வினவு.com 

கருத்துகள் இல்லை: