வெள்ளி, 14 மார்ச், 2014

பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் குழப்பம் ! டெபாசிட் தானம் செய்வதில் கடும் போட்டி ?

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்கு நாடு ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து புதிய கூட்டணி அமைத்துள்ளன.
கடந்த ஒரு மாதமாக இந்த கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் ஆரம்பத்தில் இருந்தே இழுபறி ஏற்பட்டது.
பா.ம.க. ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளில் 2 தொகுதிகளை விட்டு கொடுக்க முன்வந்தது. ஆனால் மீதமுள்ள 8 தொகுதிகளையும் மாற்ற கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
அதே நேரத்தில் தே.மு.தி.க. தரப்பில் பா.ம.க. தொகுதிகளில் சிலவற்றையும், பா.ஜனதா விரும்பிய தொகுதிகளில் சிலவற்றையும் கேட்டு வற்புறுத்தியதால் பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டது.
பல சுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாட்டை எட்டமுடியாமல் பா.ஜனதா தலைவர்கள் தவித்தனர்.
நேற்று மாலைக்குள் கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவிக்க திட்டமிட்டனர். இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்தது. உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நிலையில் 4 தொகுதிகளை பிரிப்பதில் ஏற்பட்ட சிக்கல் பெரும் சவாலாக எழுந்தது.
ஆரணி, அரக்கோணம் தொகுதிகளை கேட்டு தே.மு.தி.க. வலியுறுத்தியது. கிருஷ்ணகிரி தொகுதியை பா.ஜனதா எதிர்பார்த்தது. சேலம் தொகுதியை தே.மு.தி.கவும், பா.ஜனதாவும் கேட்டது.
ஆனால் ஆரணியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தியும், கிருஷ்ணகிரியில் மாநில தலைவர் ஜி.கே.மணியும் சேலத்தில் பா.ம.க. இளைஞர் அணி செயலளார் இரா.அருளும் களம் இறக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக பிரசாரம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு தொகுதி கூட விட்டு தர இயலாது என்று திட்ட வட்டமாக கூறிவிட்டனர்.
இதனால் கூட்டணியை உறுதிப்படுத்த முடியாமல் தவித்த பா.ஜனதா தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் ‘இதற்கு மேலும் பேசி பயன் இல்லை. இனி டெல்லி மேலிடம் முடிவு செய்து அறிவிக்கட்டும்’ என்று டெல்லி புறப்பட தயாரானார்.
இதனால் பா.ஜனதா கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய இரு கட்சிகளும் இடம் பெறுமா? ஏதாவது கட்சி வெளியேறுமா? என்ற கேள்வி எழுந்தது. இங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரங்கள் அனைத்தையும் டெல்லி மேலிடத்துக்கு விளக்கினார்கள்.
கூட்டணி கட்சிகளும் டெல்லி பா.ஜனதா தலைவர்களை தொடர்பு கொண்டனர். இதையடுத்து பா.ஜனதா தேசிய செயலாளர் முரளிதரராவ் இன்று சென்னை வருவார். அதற்குள் பிரச்சினைகளை பேசி முடிவு செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்கள்.
இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லி பயணத்தை ரத்து செய்து கட்சி தலைமை அலுவலகம் திரும்பினார். அதை தொடர்ந்து இரவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இன்று அதிகாலை 3 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது.
தே.மு.தி.க., பா.ம.க. சார்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை விபரங்களை உடனுக்குடன் தங்கள் மேலிட தலைவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்து தலைவர்களின் பதில்களையும் தெரிவித்தனர். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து பா.ஜனதா மேலிட பிரதிநிதி முரளி தரராவ் இன்று சென்னை வந்தார் காலை 10.30 மணி அளவில் பா.ஜனதா அலுவலகம் சென்று மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன் ராஜுலு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டணி கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு முடிவுக்கு வராததால் உடன்பாடு அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவது பற்றி பா.ஜனதா தலைவர்கள் கவலை தெரிவித்தனர். கூட்டணி உடையும் ஆபத்து இருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டணி கட்சிகள் தனித்தனியாக கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பிரசாரம் தொடங்க திட்டமிட்டு இருந்தார். மதியம் வரை அவர் பிரசாரத்தை தொடங்க வில்லை.
கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் தே.மு.தி.க.வுக்கு 2 தொகுதிகளை பா.ஜனதா விட்டு கொடுப்பதில் பிடிவாதமாக இருப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொகுதி உடன்பாடுக்கு வராவிட்டாலும் விஜயகாந்த் திட்டமிட்ட படி இன்று பிரசாரத்தை தொடங்குவார் என்று தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறினார்.
இதே போல் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தி.நகரில் உள்ள அன்பு மணி வீட்டுக்கு சென்று அவருடன் தனியாக ஆலோசனை நடத்தினார்.
மற்றொரு கட்சியான ஐ.ஜே.கேயும் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே கூட்டணி உடன்பாடு ஏற்படுமா? அல்லது முறியுமா என்ற பரபரப்பு நிலவுகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:–
தே.மு.தி.க.–14,
பா.ஜனதா– 8,
பா.ம.க.–8,
ம.தி.மு.க.–7,
ஐ.ஜே.கே.–1,
கொங்குநாடு–1.
இதில் ம.தி.மு.க.வுக்கு விருது நகர், தூத்துக்குடி, ஈரோடு, காஞ்சீபுரம், தேனி, தென்காசி, மத்திய சென்னை ஆகிய 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. maalaimalar.com 

கருத்துகள் இல்லை: