திங்கள், 10 மார்ச், 2014

சுயமரியாதையை இழந்த கம்யுனிஸ்டுகள் தங்கள் கட்சிகளை கலைக்க வேண்டும் ?


மொழிவாரி மாநிலம் பிரிவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் மதராஸ் ராஜதானியில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவானது கம்யூனிஸ்ட் இயக்கம்.   1964ம் ஆண்டு இடது வலது என்ற பிரிவினைக்கு பின்னாலும் கூட வலுவான இயக்கமாகவே இருந்து வந்தனர் இடதுசாரிகள்.
எந்த மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், முதலில் வீதிக்கு வருவது செங்கொடி இயக்கமே.   பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு, அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்று எப்போதும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளே.
உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய இயக்கங்களை கண்ட கம்யூனிஸ்டுகள் இன்று அதே தாராளமயமாக்கலால் நீர்த்துப் போய், தங்கள் விழுமியங்கள் அனைத்தையும் இழந்த நிற்கிறார்கள்.    பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாராளுமன்ற ஜனநாயகம் மூலம் நிறுவுவது என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு மாறி மாறி கூட்டணி வைத்து சோரம் போனதன் விளைவே, இன்று இவர்களை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கிறது.
மதவாத சக்திகளைத் தடுப்பது என்ற ஒற்றைக் முழக்கத்தை வைத்துக் கொண்டு, கூச்சமே இல்லாமல் ஒவ்வொரு தேர்தலுக்கும் திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்கிறார்கள் கம்யூனிஸ்டுகள்.
  நேற்று பிறந்த ஆம் ஆத்மி கட்சிக்கு கூட்டணி இன்றி தேர்தலை சந்திக்கும் துணிச்சல் கூட, 100 ஆண்டு வரலாற்றைக் கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு இல்லாமல் போனது வேதனையிலும் வேதனை.
அதிமுகவோடு கூட்டணி வைத்து விட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக, இடதுசாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்துகொண்ட சமரசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதி அரசை சட்டப்பேரவையில் கடுமையாக விளாசி எடுத்தனர் கம்யூனிஸ்டுகள்.  குறிப்பாக சிபிஎம் எம்.எல்.ஏ பாலபாரதி எழுந்தாலே காதுகளை கூர்மையாக்கிக் கொள்வார் கருணாநிதி.   எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் அரசை விமர்சித்து, கேள்வி கேட்டு குடைந்து எடுத்த கம்யூனிஸ்டுகள், கடந்த மூன்று ஆண்டுகளாக மவுனச் சாமியார்களாக மறு அவதாரம் எடுத்தனர்.   மக்களின் நிலத்தை அபகரித்த ஜெயலலிதாவுக்கு எதிராக, சிறுதாவூர் விவகாரத்தைக் கையில் எடுத்து, விசாரணை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்தவர்கள், அந்த அறிக்கை குறித்து மூன்று ஆண்டுகளாக வாயே திறக்கவில்லை.   110 விதியின் கீழ் மட்டுமே அறிக்கை படித்து சட்டப்பேரவையில் எந்த விவாதமும் இல்லாமல் அவையை நடத்தும் ஜெயலலிதாவை ஒரு முறை கூட கண்டிக்காமல் மவுனம் காத்து வந்தனர்.  அவையில் இருந்து வெளிநடப்பு செய்தால் கூட அம்மா மனம் நோகுமே என்று அமைதியாக அம்மா துதிபாடல்களை காது குளிரக் கேட்டு மகிழ்ந்தனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக,  ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியும் அதை சட்டையே செய்யாத ஜெயலலிதா, பிரகாஷ் காரத்தையும், ஏ.பி.பரதனையும் சந்திக்க நேரம் அளித்ததோடு, அவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதிர்ச்சியடையாமல் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டு சிறுமை பட்டு நின்றனர்.  டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினராகி டெல்லிக்குப் போய், கார்ப்பரேட் நிறுவனங்களையெல்லாம் ஒரே நாளில் ஒழித்துக் கட்டப்போவது போல, அந்த எம்.பி பதவிக்காக அம்மாவின் காலடியில் செங்கொடியை சமர்ப்பித்தனர். இத்தனை அவமானங்களையும் பொறுத்துக் கொண்டதெல்லாம் எதற்காக ? மக்களவைத் தேர்தலில் எப்போதும் போடும் பிச்சையை இந்த முறையும் ஜெயலலிதா போடுவார் என்ற நம்பிக்கையிலேயே.  ஆனால், நம்பவைத்து கழுத்தறுப்பதில், ஜெயலலிதாவுக்கு நிகரே கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை கம்யூனிஸ்டுகள் விஷயத்தில் நிரூபித்துள்ளார் ஜெயலலிதா.    தன்னை பிரதம வேட்பாளராக அறிவிக்க மறுத்த கம்யூனிஸ்டுகளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணமே, 40 தொகுதிகளுக்கும் முதலில் வேட்பாளரை அறிவித்தது. அறிவித்ததும் கம்யூனிஸ்டுகள் வேறு அணிக்குப் போய் விடாமல் தடுக்கவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  பேச்சுவார்த்தை முடிந்ததும், வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்ற அறிவிப்பு.   இதையும் நம்பிய கம்யூனிஸ்டுகள் வாராது வரும் மாமணிக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.savukku.net/
பேச்சுவார்தை என்று கூறி விட்டு, மகிழ்ச்சியோடு பிரிவோம் என்று தெரிவித்த பிறகுதான், தாங்கள் முதுகில் குத்தப்பட்டுள்ளோம் என்பதையே உணர்ந்தனர்.   இத்தனை அவமானங்களையும் மென்று விழுங்கிவிட்டு, கூச்சமே இல்லாமல் தற்போது திமுக அணிக்கு போகலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: