ஞாயிறு, 9 மார்ச், 2014

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஆண்டுக்கு 150–200 டன் தங்கம் கொண்டு வரப்படுகிறது


இந்தியாவில், 2010–11–ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2013–14–ல், மதிப்பு அடிப்படையில் தங்கம் கடத்தல் 14 மடங்கு அதிகரித்து ரூ.250 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்படி வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்த தங்கத்தின் அளவு 1 முதல் 1.50 டன் வரை இருக்கும் என அரசுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உலக தங்க கவுன்சில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஆண்டுக்கு 150 முதல் 200 டன் வரை தங்கம் வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இறக்குமதி வரி
2012 மார்ச் முதல் 2013 ஆகஸ்டு வரையிலான காலத்தில் மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மக்களின் தங்க மோகத்தால் வர்த்தக பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிப்பற்றாக்குறை என அனைத்து இடர்பாடுகளும் அதிகரிப்பதால் இந்த காலகட்டத்தில் மொத்தம் நான்கு முறை தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. மேலும் பாரத ரிசர்வ் வங்கி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 80 சதவீதத்தை உள்நாட்டில் பயன்படுத்தி, 20 சதவீதத்தை கண்டிப்பாக ஆபரணங்களாக்கி மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது.
தங்க மோகம் குறையவில்லை
இதுபோன்ற கட்டுப்பாடுகளால் தங்கம் இறக்குமதி கணிசமாக குறைந்தது. அதற்காக நம் நாட்டில் தங்க மோகம் குறைந்து விட்டதாக நினைத்து விடக்கூடாது. 2013 மே மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு 162 டன் இறக்குமதியாகி இருந்தது. 2012–ஆம் ஆண்டில் மொத்த தங்கம் இறக்குமதி 800 டன்னாக இருந்தது. 2013 நவம்பர் வரையிலான 11 மாதங்களில் 655 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் உலக தங்க கவுன்சில் மதிப்பீடுகளின்படி 2013–ல் தங்கம் இறக்குமதி 18 சதவீதம் உயர்ந்து 975 டன்னை எட்டியுள்ளது. சீனாவில் 32 சதவீதம் உயர்ந்து 1,066 டன்னாக அதிகரித்துள்ளது.
கொள்ளை லாபம்
அண்மைக் காலத்தில் மாதம் ஒன்றுக்கு 20 முதல் 30 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதித்ததால் சட்டப்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவுதான் குறைந்துள்ளது. கடத்தல் தங்கம் தாராளமாக வந்து கொண்டுதான் இருக்கிறது. உள்நாட்டில் விற்பனையாகவில்லை என்றால் இவ்வளவு தங்கம் வர வாய்ப்பேயில்லை. கொள்ளை லாபம் கிடைப்பதும் மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது.
நம் நாட்டில் தற்போது 10 கிராம் தங்கம் விலை ரூ.31,010–ஆக உள்ளது. இது துபாயில் கிடைக்கும் விலையைக் காட்டிலும் ரூ.4,000 அதிகம். ஆக, சட்டப்படி ஒரு கிலோ தங்கத்தை இந்தியாவிற்குள் கொண்டு வந்து விற்றால் கூட, வரியெல்லாம் செலுத்திய பிறகும் 5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். எனவே, கடத்தல் தங்கத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. கடத்தல் அதிகரித்து வருவதற்கு காரணம் இதுதான்.
கடந்த 2010–11–ஆம் ஆண்டில் தங்கம் கடத்தல் தொடர்பாக 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த ஆண்டில் ரூ.17.22 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 2011–12–ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை 504–ஆக உயர்ந்து, பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.42.38 கோடியாக இருந்தது. 2012–13–ல் ரூ.107.51 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் சிக்கியது. அப்போது 885 வழக்குகள் பதிவாயின. நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் வரை 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.250 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களுக்கு மும்பை ஓர் அருமையான நுழைவாயிலாக உள்ளது. காரணம், வளைகுடா நாடுகளிலிருந்து ஏராளமான விமானங்கள் அங்கு வந்து செல்கின்றன. மும்பை சர்வதேச விமான நிலையம் நாள்தோறும் 14,000 வெளிநாட்டு பயணிகளை கையாள்கிறது. நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்–ஜனவரி மாத காலத்தில் மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் 204 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம் 54 கிலோதான்.
அயல்நாடுவாழ் இந்தியர்
அயல்நாடுவாழ் இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் தொடர்ந்து ஆறு மாதங்கள் தங்கியிருந்தவர் என்றால் வரியின்றி ஒரு கிலோ தங்கம் கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கண்டிப்பாக கடத்தல்காரர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எனினும் அண்மைக் காலத்தில் இத்தகைய நபர்களால் நாட்டுக்குள் வரும் தங்கத்தின் அளவு அதிகரித்துள்ளது. மும்பையில் 2012 நவம்பர்–டிசம்பர் மாதங்களில் இந்த வகையில் 5 கிலோ தங்கம் மட்டுமே வந்தது. ஆனால் 2013–ஆம் ஆண்டின் இதே மாதங்களில் அங்கு இந்த வழியில் வந்த தங்கம் 1,700 கிலோவாக உயர்ந்துள்ளது.
கடத்தல் முயற்சி
தங்கம் கடத்துவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் சர்வதேச விமான நிலையங்களில்தான் நடைபெறுகின்றன. பயணிகளை பயன்படுத்தியோ அல்லது சரக்குகள் மற்றும் கூரியர் அஞ்சல் வடிவிலோ கட்டிகள் அல்லது ஆபரணங்கள் வடிவில் கடத்தப்படுவதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன dailythanthi.com

கருத்துகள் இல்லை: