சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி
மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருக்கும் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்
தனிக் கட்சி தொடங்குவது குறித்து தமது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை
நடத்தினார்.
ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக உரிமைப் பிரச்சனைகளில் மத்திய அரசை
விமர்சித்து வருபவர் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன். ஆனால் காங்கிரஸ்
மேலிடம் தம்மை புறக்கணிப்பதாலேயே இந்த அஸ்திரங்களை ஜி.கே.வாசன் நீண்டகாலமாக
வீசி வருகிறார் என்றே கூறப்பட்டு வருகிறது. ராஜ்யசபா எம்.பி. பதவியை வேறு மாநிலத்தில் இருந்து தருமாறு
ஜி.கே.வாசன் கேட்க, ராகுல் காந்தியோ லோக்சபா தேர்தலில் நின்று ஜெயித்து
வாருங்கள் சொல்லியிருக்கிறார். இதில் கடும் காட்டமான ஜி.கே.வாசன் அன்று
முதல் காங்கிரஸ் தலைமையை மிகக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.
தனிக்கட்சிக்கு திராணியில்லை..
ஆனால் தமது அப்பா ஜி.கே. மூப்பனாரைப் போல தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்
கட்சியை மீண்டும் தொடங்க திராணியில்லாமல் பயந்து கொண்டே காங்கிரஸுக்குள்
கலகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.பின்னர் கடைசியாக நடைபெற்ற ராஜ்யசபா
தேர்தலில் எப்படியாவது போட்டியிடுவது என்று கடைசி நேரத்தில் பெரும்
போராட்டமே நடத்தினார் ஜி.கே.வாசன். ஆனால் எந்த கட்சியும் வாசனை ஆதரிக்க
முன்வரவில்லை.
அரசியலில் சன்னியாசம்?
அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்துடன் வாசனின் எம்.பி. பதவிக் காலம்
முடிவடைகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் திமுகவும் தேமுதிகவும் காங்கிரஸை
சீண்டாத நிலையில் வேறுவழியின்றி லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று
அரசியலில் சன்னியாசம் வாங்கப் போகும் ரேஞ்சில் கூறிவிட்டார் ஜி.கே.வாசன்.
தனிக்கட்சி பற்றி ஆலோசனை?
இதில் அதிர்ந்து போன ஆதரவாளர்கள் நேற்று ஜி.கே.வாசன் வீட்டில் கூடினர்.
அப்போது காங்கிரஸை உடைத்து தனிக் கட்சி தொடங்குவது குறித்து
ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி தனிக் கட்சி தொடங்கினால்
அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி அமைக்க முடியும்.. அந்த கூட்டணியில் இருந்து
ஏற்கெனவே இடதுசாரிகள் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் என்ன மரியாதை
கிடைக்கும்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு தூது
அத்துடன் ஜி.கே.வாசன் தாம் இப்படி ஒரு யோசனையில் இருப்பதாக அதிமுக
தரப்புக்கு தகவலும் அனுப்பியிருக்கிறார். முதலில் கட்சியை உடைத்து தனிக்
கட்சி தொடங்குவதாக அறிவியுங்கள்..அப்புறம் பார்க்கலாம் என்று பட்டும்படாமல்
அதிமுக சொல்லிவிட்டது. அதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் முன்னரே
தனிக்கட்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் பயந்துவிட்டு
இப்போது தொடங்குவதால் ஒரு பயனும் இல்லை என்று கூறிவிட்டனர்.
ஆலோசனை தீவிரம்
இதனால் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் தமக்கு வேண்டிய அரசியல்
ஆலோசர்களிடம் ஆலோசனை கேட்கும் படலத்துக்கு தாவியிருக்கிறாராம் ஜி.கே.வாசன்.
இப்ப குமுறி என்ன பிரயோசனம்?
இது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் பார்வையாளர்கள், தனிக் கட்சி
தொடங்குவதற்கு ஜி.கே.வாசனுக்கு சாதகமான சூழல் ஓராண்டுக்கு முன்பே
கிடைத்தது. அதை பயன்படுத்தியிருந்தால் குறைந்தபட்சம் திமுக அணியில் 5
தொகுதிகளையாவது பெற்றிருக்கலாம். எல்லாவற்றையும் கோட்டைவிட்டுவிட்டு
கடைசிநேரத்தில் குய்யோ..முறையோ என வாசன் குமுறுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை
என்கின்றனர்.tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக