செவ்வாய், 11 மார்ச், 2014

100 வீதம் ஸ்டாலின் முடிவின்படியே வேட்பாளர்கள் ! தி.மு.க.,வில் பணம் படைத்தவர்களுக்கு 'ஜாக்பாட்

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய ஐந்து தொகுதிகள் போக, மீதமுள்ள, 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, தி.மு.க., தலைவர், கருணாநிதி நேற்று வெளியிட்டார். இந்த வேட்பாளர்கள் பட்டியலில், பணம் படைத்தவர்களுக்கே இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேட்பாளர்கள் பட்டியலில், 100க்கு, 100 சதவீதம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 'கை' ஓங்கியுள்ளதால், இரண்டாம் கட்டத் தலைவர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர் 35 தொகுதிகளுக்கு...:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றின், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் என, இரண்டு தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு, மயிலாடுதுறையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, வேலூர் தொகுதியும், புதிய தமிழகத்திற்கு, தென்காசி தொகுதியும் ஒதுக்கப்பட்டன.இந்த ஐந்து தொகுதிகள் போக, மீதமுள்ள, 35 தொகுதிகளுக்கான, வேட்பாளர்கள் பட்டியலை, தி.மு.க., தலைவர், கருணாநிதி நேற்று வெளியிட்டார்.  திருஷ்டி சுத்தி போடணும். எல்லோரும் கோடி கோடியா சேத்து வச்சிருக்காங்க. 
கடந்த லோக்சபா தேர்தலில், 22 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த, 18 எம்.பி.,க்களில், 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், காந்திச் செல்வன், தாமரைச் செல்வன், அ.ராசா, ஏ.கே.எஸ்.விஜயன் என, எட்டு பேருக்கு மட்டுமே, வரும் தேர்தலில் போட்டியிட, 'சீட்' தரப்பட்டுள்ளது.தி.மு.க.,வில் ஏற்கனவே எம்.பி.,க்களாக இருந்த, மு.க.அழகிரி, நெப்போலியன், ரித்திஷ், பழனி மாணிக்கம், சுகவனம், வேணுகோபால், ஜெயதுரை, ஹெலன் டேவிட்சன், ஆதிசங்கர் ஆகிய, 10 பேருக்கு 'சீட்' மறுக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பாலு, கடந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், ஜெகத்ரட்சகன் அரக்கோணம் தொகுதியிலும் போட்டியிட்டனர். இவர்கள் தவிர மற்ற, ஆறு பேருக்கும் அந்தந்த தொகுதியே வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட, டி.ஆர்.பாலு, வரும் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், முந்தைய தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட, ஜெகத்ரட்சகன், இம்முறை, ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடுகிறார்.மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்ற, எட்டு பேரில், அதிகபட்சமாக டி.ஆர்.பாலு, 1996, 98, 99, 2004 மற்றும் 2009 என, ஐந்து முறை தொடர்ந்து எம்.பி., ஆக இருக்கிறார். இதற்கு

அடுத்தபடியாக, ராஜா, நான்கு முறையும், ஜெகத்ரட்சகன், மூன்று முறையும் எம்.பி.,களாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், இரண்டு பெண்களுக்கு மட்டுமே (சேலம் - உமா ராணி, ஈரோடு - பவித்ரவள்ளி) வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க., வில், நான்கு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.வேட்பாளர் பட்டியல், முழுக்க, முழுக்க, 100 சதவீதம், ஸ்டாலின் முடிவின்படியே தயாரிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தொகுதி வேட்பாளர், தேவதாஸ் சுந்தரம், தூத்துக்குடி ஜெகன், விருதுநகர் ரத்தினவேல் போன்ற பணபலம் படைத்தவர்களுக்கும், 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.சிவகங்கை தொகுதியில், மாவட்ட செயலர், பெரிய கருப்பன் பரிந்துரை செய்தவரும், கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவருமான, ஏ.எல்.ஆறுமுகத்திற்கு சீட் வழங்காமல், ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்ட மணல் கான்ட்ராக்டர் ஒருவரின் பரிந்துரைப்படி, துரைராஜுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆதரவுடன், கள்ளக் குறிச்சியில் போட்டியிட சீட் கேட்ட, அவரின் ஆதரவாளர், செல்வநாயகத்திற்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 

அதேபோல், திண்டுக்கல்லில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர், ஐ.பெரியசாமியின் மகன் செந்தில், வேலூருக்கு சீட் கேட்ட துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், சேலத்தில் போட்டியிட விரும்பிய, மறைந்த முன்னாள் அமைச்சர், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு போன்றோருக்கும், 'சீட்' கிடைக்கவில்லை.தென் மாவட்டங்களில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி என, நான்கு தொகுதிகளில், நாடார் சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தென் மாவட்டங்களில், அதிக அளவில் வசிக்கும் நாயுடு சமுதாயத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது, அந்த சமூகத்தினர் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.,வில், வன்னியர் சமூகத்தை சேர்ந்த, எட்டு பேருக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தி.மு.க.,விலும், அந்த சமூகத்தினருக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் என, கனிமொழி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டும், அது நிராகரிக்கப்பட்டு, ஜெகத்ரட்சகன், தாமரைச்செல்வன், சிவானந்தம், நந்தகோபாலகிருஷ்ணன் என, நால்வருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ம.தி.மு.க.,விலிருந்து விலகி, மீண்டும் தாய் கட்சியில் இணைந்த, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திருச்சி செல்வராஜ் போன்றவர்களில், யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்திற்கு மட்டும் சீட் கிடைத்துள்ளது.அ.தி.மு.க.,விலிருந்து, தி.மு.க., விற்கு வந்த, ரகுபதி, கம்பம் செல்வேந்திரன் போன்றோருக்கும் சீட் தரப்படவில்லை.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: