செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கமலுக்கு எழுந்த விஸ்வரூப முழக்கம் விஜயின் தலைவாவுக்கு ஏன் எழவில்லை ?

கமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...?

தலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை ??? என்று தொடர்ந்து நிறைய பேர்   முக நூலிலும்  டுவிட்டரிலும்   அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கின்றார்கள்...பொதுவா இதற்கு தமிழ் திரைஉலகம் பொங்கி இருக்க வேண்டும்... காரணம் பாதிக்கப்பட்டது அவர்களில் ஒருவர்....  நாளை  இது யாருக்கும் நேரலாம்  எந்த ஆட்சியிலும் நடக்கலாம்... அதனால் ஒட்டு மொத்த திரைஉலகமும் பொங்கி இருக்க வேண்டும்...நடிகர்  விஜய் நடிகர் சங்க உறுப்பினர் ...  நடிகர் சங்கம் பொங்கி இருக்க வேண்டும்.. ஆனால்  பொங்கவில்லை... காரணம்... இங்கே சந்தோஷம், பெருமை என்றால் மட்டுமே என்னால் ...என்னால் ...இது நடந்தது என்று மார்தட்டிக்கொள்வது ,இங்கே காலம் காலமாய் நடைபெற்று வருகின்றது... பிரச்சனை என்றால் ஒரு பயலும் கிட்டே வரமாட்டார்கள்...
இன்னோரு காரணம் இருக்கின்றது... விஜய் யாருடனும் அதிகம் பேசமாட்டார்.... எந்த பிரச்ச்சனையிலும் அவர் அதிகம் தலையிட்டது இல்லை... அதனால் அவருக்கு பிரச்சனை என்று வந்த போது தமிழ் திரைஉலகில் அவர் பக்கம் யாரும்  நிற்கவில்லை.... ஒரு ஜென்டில்மேன் அக்ரிமென்ட்  போல... அமைதி  காக்கின்றார்கள்.

சினிமாகாரர்களை பற்றி சுவையான கதை உண்டு...

நடிகன் வீட்டு ....நாயின் கால் உடைத்துக்கொண்டால் கூட நல  விசாரிப்புகள் தொடர்ந்து  வரும்...

நாய் இப்போது எப்படி இருக்கின்றது..?

டாக்டர் என்ன சொன்னார்?

நாயின் கால் எப்போது குணமாகும்? எப்போது நடக்கும் என்று? 

விசாரிப்புகள் வந்து கொண்டே இருக்கும்..

காரணம் பாருங்கள் நான் உங்கள் மேலும் நீங்கள் நேசிக்கும் நாய் மீதும் எத்தனை கரிசனமாக இருக்கின்றேன் என்று காட்டிக்கொள்ளுவார்கள். ஆனால் அதே நடிகன்  கொஞ்சம் நொடிந்து இறந்து போனால் , ஐம்பது ரூபாய் மலை   வாங்கி போட கூட இங்கே நாதி இல்லை என்பதுதான் எரிச்சலான நிதர்சன  உண்மை.

உதாரணத்துக்கு முதல் நாள்  கவிஞர் வாலிக்கு அஞ்சலி  செலுத்தி மறுநாள் அவர் உடல்  வீட்டில் இருக்கும் போதே,சினிமா ஷூட்டிங் நடத்தியவர்கள் நம்மவர்கள்... அதுதான் திரையுலகம்.

நீங்கள் பெரிய  புதைக்குழியில் மாட்டிக்கொண்டு  இறுக்கின்றீர்கள்....

உங்களை உடலை புதைக்குழி இழுத்துக்கொண்டே இருக்கின்றது... எல்லோரும் எப்படி சாகின்றான்  பார்ப்போம் என்று  செல்போன் கேமராவோடு  ரெடியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு மத்தியில்  ஒரு கயிற்றை தூக்கி உங்கள் பக்கம் போட்டு,யார்  உங்கள் உயிரை  காப்பாற்றுகின்றீர்களோ அவர்களை தானே இயல்பாய் உங்களுக்கு பிடிக்கும்..??? நீங்களே சொல்லுங்கள்..

கமல் படம் விஸ்வரூபம்  வெளியாவதில்  சிக்கல் எழுந்த  போது விஜய் ஏதாவது கமலுக்கு ஆதரவாக அறிக்கை விட்டாரா? அல்லது நெஞ்சில் குடியிருக்கும் ரசிக பெருமக்கள் சிலருடனாவது இது குறித்து   விவாதித்து இருப்ப்பாரா?  அல்லது கமல் டென்ஷனில் இந்த ஊரை விட்டு போறேன் என்று சொன்ன அடுத்த நிமிடம்.... பல நட்சத்திரங்கள் நேராக  ஆழ்வார்  பேட்டைக்கு போய் நாங்கள் இருக்கோம்... என்று அதரவாய் கை கொடுத்து  அதரவு கரம்   நீட்டினார்களே ....அது போல  விஜய் செய்து இருந்தால், இப்போது கேட்கலாம் ?

ஏன் கமல் வாய் மூடி மவுனியாக இருக்க வேண்டும்... கமலுக்கு வந்தால் ரத்தம்....... விஜய்க்கு வந்தால் தக்காளி  சட்டினியா? என்று கேட்டு டுவிட்டலாம்... அல்லது பேஸ்புக்கில் போட்டு தாக்கலாம்.

நிறைய ரசிகர்களை தன்னகத்தே பெற்று இருக்கும்  நடிகர் விஜய் ஒரு கண்டனம்... ஒரு ஆதரவு குரல் கமலுக்கு அவர் எழுப்பவேயில்லை. அதுமட்டுமல்ல.. எதிர்காலத்தில் அரசியிலில் கால் பதிக்க திட்டம் வைத்து இருப்பாரேயானால் இந்த விஷயத்தில்   அவர் கண்டிப்பாக நுழைந்து இருக்கவேண்டும்...

சரி விடுங்கள்...

கமல் இதுவரை  பொங்கிய விஷயத்துக்கு நாம்  எப்படி? சப்போர்ட்டாக இருந்து இருக்கின்றோம்...???

வருமானவரியை மிகச்சரியாக செலுத்துபவர்...ஜீரோ டாக்ஸ் அரியர் என்று நேர்மையாக சொல்லுபவர்.

நடிச்சோம் ...காசை வாங்கி போட்டோம், என்று இல்லாமல் தன் உடலைதானமாக வழங்கியவர் அதுமட்டுமல்ல எல்லோரும் உடல் தானம்  வழங்க வேண்டு என்று  வலியிறுத்துபவர்.

எயிட்ஸ் விளம்பரத்தில் முகம் காட்டிய பெரிய நடிகர்.. ரத்ததானம் அவரின் பிறந்தநாளின் போது செய்ய வலியூறுத்துபவர்.  முக்கியமாக தனது  ரசிகர் மன்றத்தினை நற்பணி மன்றமாக மாற்றி நலத்திட்டங்கள்  இன்று வரை செயல்படுத்த சொன்னவர்...

சரி கமலுக்கு கிடைத்த ஆதரவு ஏன் விஜய்க்கு கிடைக்கவில்லை என்று ஒரு கேள்வி  எழுகின்றது...

கமல் 50 வருடங்களாக திரை உலகில் இருக்கின்றார்... அவருக்கு என்று  ரசிகர்மன்ற  கொடி   என்பது இல்லை....அவருக்கு பிரச்சனை என்று வந்த உடன் அவர் நீதிமன்ற படி ஏறினார்... பத்திரிக்கையாளர்களை சந்தித்து தன் பிரச்சனை என்ன என்று வெளிப்படையாக பேசினார்...

உங்கள் ஆதரவு எனக்கு தேவை என்றார். மக்கள் ஆதரவு கொடுத்தார்கள்... முக்கியமாக தனது திரைப்படங்களில்  அரசியல்வாதி என்ற பொது அளவில் மட்டுமே  விமர்சித்து இருக்கின்றார்.... அதிகாரவர்கத்தை திரைப்படங்களில்  சீண்டியது இல்லை... முக்கியமாக கேமரா பார்த்து பேசியதில்லை...ஆனால் பாராட்டு விழாவில்  வேட்டி கட்டியவர் பிரதமர் என்றார்.. அதுக்கே அவர் அலைகழிக்கப்பட்டார்...

விஸ்வருபம் ரீலிஸ் ஆகாத போது பேஸ்புக்கிலும் மீடியாவிலும்  படம் பற்றிய விஷயத்தை  நொடிக்கு நொடி மக்கள் முன்னால் மீடியாக்கள் கொடுத்து கொண்டு இருந்தன.. 

காரணம் கமல் தொடர்ந்து  மீடியாக்களிடம் பேசினார்... இந்த படம் ஓடவில்லை என்றால் இப்போது நான்   இருக்கும் இந்த வீடு  ஐப்தியாகிவிடும் என்று ஒரு தயாரிப்பாளராய் பேசினார்...மக்கள் மத்தியில் இது பெரிய பேச்சாக இருந்தது... மக்கள் மத்தியில் பெரிதாய் சில விமர்சனங்கள் எழுவதை உளவு துறை   நோட் எடுத்து முதல்வர் ஜெ விடம் கொடுக்க...

அவர் பத்திரிக்கையாளரை  சந்தித்து விளக்கம் கொடுத்தார்.... என்பது நாம் அனைவரும் அறிவோம்...

ஆனால் ஏன் விஜய் திரைப்படம்  தலைவா வெளியாவது குறித்து  மக்கள் யாரும்  விஸ்வரூபம் அளவுக்கு யாரும் பேசவில்லை.. ஏன்...?

தலைவா படம் வெளியாவதில் இருக்கும் சிக்கல் குறித்து இதுவரை மீடியாக்களிடம்  சம்பந்தபட்டவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை...அப்புறம் எப்படி மக்கள் சப்போர்ட் செய்வார்கள்.

 பொதுமக்கள் யாரை கேட்டாலும்...? படம் வெளிவரலை என்ன பிரச்சனை  என்று தெரியலை என்ற அளவில்தான்  பேச்சு இருக்கின்றது...பொது மக்களிடம் பெரியதாய் பெரிய எழுச்சி இல்லை..கமலுக்கு  அனைத்து தரப்பு மக்களிடமும் சப்போர்ட் இருந்தது உண்மை.. முக்கியமாக 40 லிருந்து 60 வயதை கடந்தவர்கள் கூட  அவருக்கு ஆதராவாக இருந்தார்கள்... இங்கே இளைய தலைமுறை மட்டுமே  விஜய்க்கு ஆதரவாக இருக்கின்றார்கள்...

ஒருவேளை பத்திரிக்கையாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை விஜய்  தரப்பு தெரிவித்து இருந்தால் அது குறித்து ஊடகங்கள் பொது மக்கள் விவாதங்களை நடத்துவார்கள்... அப்போது ஒரு அரசின் நிலைப்பாடு என்ன? அல்லது படம் வெளியிடுவதில் என்ன  பிரச்சனை என்பதை திரைஅரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பு விஷயங்கள் மக்கள் மன்றத்துக்கு வரும்....ஆனால் இதுவரை அப்படி ஒரு சந்திப்பு நடக்கவேயில்லை.... அறிக்கை மூலம்தான் இதுவரை விஜய் தன் ரசிகர்களை  கேட்டுக்கொண்டு இருக்கின்றார்...

யாருக்கு காயம் பட்டு இருக்கின்றதோ அவர்கள் தான் கட்டு கட்டிக்கொள்ள வேண்டும்.. நிறைய ரசிகர்களை  பெற்று இருக்கும்  விஜய் அவர் பிரச்சனையை கண்டிப்பாக மீடியாக்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும்... என் தரப்பு  இதுதான்.., நான் ஏன்  அலைகழிக்கபடுகின்றேன் என்று உரத்து குரல் எழுப்பி இருக்க  வேண்டும் ..  ஒருவேளை அப்படி மக்களிடம் மீடியாக்கள் மூலம்  தன் தரப்பை வெளிபடுத்தி இருந்தால் இந்ததிரைப்படம்  எப்போதோ வெளியாகி இருக்கும்...ஒருவேளை கமல் போல அவர் தயாரிப்பாளர் இல்லை என்பதால் அமைதிகாக்கின்றாரா? என்பது நமக்கு புரியவில்லை...

சம்பந்தபட்டவர்களே வெளிப்படையாக பேசாத போது நாம் ஏன் பேசி பொல்லாப்பை சம்பாதிக்கவேண்டும் என்று திரையுலகினர் அமைதி காக்கின்றானர்..  விஜயின் நெருங்கிய நண்பர்கள் கூட அப்படி இருக்கின்றார்களா? என்ன? அமைதிகாக்கின்றார்கள்.. சம்பந்தபட்டவர் அமைதியாக இருக்கும் போது நான் பேசி ஏன்  என் எனர்ஜியை வேஸ்ட்டாக ஆக்க வேண்டும் என்று அனைவரும் மவுனித்து இருக்கின்றன... இப்படி இருப்பது படம் வெளிவரக்கூடாது என்று  நினைக்கும் அதிகார வர்கத்துக்கு மிக சாதகமாக போய் விட்டது...

பொதுமக்கள் பல பிரச்சனைகளை   சந்தித்து வருகின்றார்கள்.. அவர்கள்   தலைவா படம் ரிலிஸ் குறித்து பெரிதாய்   அலட்டிக்கொள்ளவில்லை..

ஒருவேளை எதிர்கால  தமிழக அரசியலில் விஜய்க்கு கால் ஊன்றும்  எண்ணம் இருப்பின்...  இது  அவருக்கு சரியான வாய்ப்பு...மைக் முன் கோர்வையாக மக்கள்  முன் பேச சரியான  வாய்ப்பு.. ஒரு அரசியல் வாதி என்பவன் தனக்கு வரும் பிரச்சனைகளை எப்படி தனக்கு சாதமாக்கி கொள்ள வேண்டும் என்ற வித்தை தெரிந்து இருக்க வேண்டும்... அவருக்கு அந்த வாய்ப்பு இந்த  நேரத்தில் கதவை தட்டி இருக்கின்றது...
இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை... விஜய் படம் ரிலிஸ் விஜய் கையில்தான் இருக்கின்றது....

ஹாலிவுட்டிலும் சரி... மற்ற நாடுகளிலும் சரி....... இதை விட அதிகாரமையத்தை அதிரவைக்கும்  அளவுக்கு படம் எடுத்து தள்ளி இருக்கின்றார்கள்.. ஆனால் அங்கே அவர்கள்  படம் வெளிவருவதில்   பிரச்சனைகளை  சந்தித்ததில்லை... காரணம் அதிகாரவார்கத்தை கேள்வி எழுப்பும் நாயகன் கதாபாத்திரமாக கேள்வி எழுப்புவான்.. அவனுக்கு என்று  குளோசப் எல்லாம் இருக்காது... ஆனால் இங்கே கேமரா பார்த்து நேருக்கு நேர்தான்  நாயகர்கள் பேசுகின்றார்கள்... அது  அதிகாரவர்கத்தை நேருக்கு நேர் பார்த்து கேட்பதாக எடுத்துக்கொள்வதால்தான் இந்த  பிரச்சனையே...

கமல் ஏன்   இந்த விஷயத்தில் பொங்கி  பொங்கல் வைக்க வில்லை என்று கேட்பவர்களுக்கு...  விஜய் படம்  தலைவா ஏன் வரவில்லை? என்ன பிரச்சனை ?என்று  சம்பந்தபட்ட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் முதலில்  மீடியாக்களிடமும் பொதுமக்களிடமும் தன்  தரப்பை வெளிப்படையாக பேச முன் வரட்டும்...

அதன் பின் கமல் பொங்கறதும் பொங்காததும் அவர் இஷ்டம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நன்றி:  ஜாக்கிசேகர்.இணையம்

கருத்துகள் இல்லை: