இஜக - பாஜகன்றைய தினமணியின் மூலையில் வந்த செய்தியொன்றை எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் தெரியவில்லை. மூலையில் வந்தாலும் இந்த செய்தியின் நாயகர்கள் அதிகார அளவில் மையத்தில் இருப்பவர்கள். செய்தி என்ன?

இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் டி.ஆர் பச்சமுத்து, அதாவது புதிய தலைமுறை, வேந்தன் மூவிஸ் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் முதலாளி, ‘சுதந்திர’ தினமன்று கமுக்கமாக புதுதில்லி சென்றிருக்கிறார். இங்கே வேட்டி, பனியன், மண்வெட்டியோடு பிளக்ஸ் பேனரில் போஸ் கொடுக்கும் ‘உழைப்பாளி’ அங்கு விக்டோரியன் கோட்டு சூட்டு டை சகிதம் பாஜக தலைமை அலுவகம் சென்று தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்திருக்கிறார்.
இது ஏதோ காமோ சோமோ சந்திப்புதானே, இதற்கு என்ன முக்கியத்துவம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது சாதாரண சந்திப்பு அல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு என்பதால் பத்திரிகையாளர்களும் உடனே பச்சமுத்துவை சந்திருக்கின்றனர். புதுதில்லியில் இருக்கும் செய்தியாளர்கள் இத்தகைய சந்திப்புகளையெல்லாம் கவர் செய்யுமளவு அவலத்தில் உழலுகிறார்களா இல்லை இது உண்மையிலேயே ‘கவர்’ சம்பந்தப்பட்டதா தெரியவில்லை.
போகட்டும், அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பச்சமுத்து உதிர்த்த கருத்துக்களைப் பார்ப்போம்.

இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன.
“இந்திய ஜனநாயகக் கட்சியும், பாஜகவும் மூன்று ஆண்டுகளாக தோழமையோடு இருந்து வருகின்றன. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளித்தது. இவ்விரண்டு கட்சிகளின் கொள்கைகளும், நோக்கங்களும் ஒன்றுதான்.

அக்டோபரில் நடைபெறவுள்ள, எங்கள் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்கு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அழைப்பதற்காக தில்லி வந்தேன்” இவைதான் பச்சமுத்து கூறிய கருத்துக்கள்.
பிறகு பச்சமுத்து அவர்கள் ஏதாவது நட்சத்திர ஓட்டல்களில் பத்திரிகையாளர்களுக்கு விருந்து கொடுத்தாரா என்பதெல்லாம் நாளிதழ்களில் வரவில்லை. ஆனால் இந்த செய்தியையெல்லாம் கவர் செய்வதற்கு விருந்து, மருந்து, வைட்டமின் ப அனைத்தும் அவசியம் என்பதை எந்த பத்திரிகையாளரும் மறுக்க மாட்டார்.
பச்சமுத்துஇனி பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா, அகாலிதளம் வரிசையில் பச்சமுத்துவின் கட்சியும் வலம் வரலாம். இந்தக் கூட்டணியின் மேடைகளில் மற்ற தலைவர்களின் தோளோடு தோள் நின்று பச்சமுத்துவும் கை தூக்கி ஆசிர்வாத போஸ் கொடுப்பார். அது புதிய தலைமுறை வார இதழ் அட்டைப்படக் கட்டுரையாக வருமென்பதும் நிச்சயம்.

“என்ன இருந்தாலும் தமிழன்டா”
வயலில் மண்வெட்டியுடன் வேலை செய்யும் தமிழன் தில்லியில் தனது ‘திறமையால்’ புலிக்கொடி நாட்டிவிட்டான் என்று சீமான் கூட இதை ஆதரிக்கலாம். இந்த உறவை வைத்து தமிழ் ஈழத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்தியப் பெருங்கடலில் நிலைகொண்டிருக்கும் சீனத்து அபாயத்தை அழித்து விடலாம் என்று அய்யா நெடுமாறன் உற்சாகம் பொங்க தினமணியின் நடுப்பக்கத்தில் எழுதும் கட்டுரையையும் எதிர்பார்க்கலாம். “என்ன இருந்தாலும் தமிழன்டா” என நிலைத் தகவல்கள் பேஸ்புக்கில் பேய் மழை போல பெய்யலாம். இந்த நேரத்தில் அறம் சிறுகதை தொகுப்பிற்கு எஸ்ஆர்எம் அறக்கட்டளை விருது வழங்கப்படுவதால், பச்சமுத்துவின் இலட்சியவாதம் – மண்டியிடாத அறம் எனும் காவியக் கட்டுரை ஜெயமோகனது தளத்தில் கண்டிப்பாக வெளியாகும். இவையெல்லாம் உப விளைவுகள்தான். நாம் முக்கிய விளைவுகளைப் பார்ப்போம்.
தமிழகத்தில் இந்தக் கூட்டணியின் மகத்துவம் என்ன? சரத்குமார் அல்லது டி. ராஜேந்தர் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்கு விகிதம் கூட நமக்கில்லையே எனும் அவலமான நிலையில் பாஜக இங்கே காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் போன்ற கொலைகளை வைத்து ஏதும் கிளப்ப முயன்றாலும் அவை வாக்குகளாக மாறிவிடாது என்பது பாஜகவிற்கு தெரியுமளவுக்கு விருப்பமில்லாத உண்மைதான். ஆனால் மறுக்க முடியாத உண்மை.
மோடி ஜெயா நட்பை வைத்து ஏதாவது ஓரிரண்டு சீட்டுக்களை தேற்ற நினைத்தாலும் அம்மா தேர்தலுக்கு பின்புதான் ஏதாவது அருள் பாலிக்க முடியும் என்பதால் தேசியத் தலைமையே அடக்கி வாசிக்கிறது. திமுக, இடதுசாரிகள் கூட சேர முடியாது என்றால் மிச்சமிருப்பவர்கள் வைகோ, ராமதாஸ், சீமான்தான். இவர்களும் தேர்தல் நேரத்தில் அம்மா கூடவோ இல்லை ஐயா கூடவோ இரண்டு பேரும் துரத்தி விட்டால் தனியாகவோ நிற்க கூடும். அந்தத் தனிமையை போக்கும் விதத்தில் பாஜகவுடன் சேர வாய்ப்புண்டு. ஆனால் அது வாக்குப் பதிவுக்கு முந்தைய தினத்துக்கு முந்தின நாள்தான் தெரியும் என்பதால் பிரசாதம் கையில் விழுந்தும் நக்க முடியாத நிலையில் பாஜக இருக்கிறது.
பச்சமுத்து
பச்சமுத்து அவர்கள் அம்பானி வரிசையில் வருவார். மோடியின் கிச்சன் கேபினட்டிலும் நுழைவார்.
இப்பேற்பட்ட சதுரங்க ஆட்டத்தில்தான் பச்சமுத்து பாஜக கூட்டணி மகிமை மறைந்திருக்கிறது. இந்த கூட்டணி தமிழகத்தில் வெல்லாமல் போனாலும் வேறு கோணங்களில் ஆதாயங்களை நிறையவே அடையும். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஒருக்கால் பாஜக கூட்டணி வென்று மோடி பிரதமரானால் என்ன நடக்கும்? இந்தியா முழுவதும் எஸ்ஆர்எம் கல்லூரிகள், போக்குவரத்து, குடிநீர், சினிமா, டிவி என அனைத்து தொழிலும் பச்சமுத்து அன் கோவினால் பரந்து விரிக்கப்படும். பிறகு பச்சமுத்து அவர்கள் அம்பானி வரிசையில் வருவார். மோடியின் கிச்சன் கேபினட்டிலும் நுழைவார்.
அதே போல தமிழகத்து பாஜகவிற்கு புதிய தலைமுறை டிவி, புதிய தலைமுறை வார இதழ் இரண்டும் கட்சிப் பத்திரிகை போல செயல்படும். மாவட்ட, மைய அளவில் உள்ள பாஜக தலைவர்களுக்கு எஸ்.ஆர்.எம் சீட்டுக்கள் கோட்டா முறையில் இலவசமாய் ஒதுக்கப்படும். தற்போது புதிய தலைமுறை பத்திரிகைக்கு சந்தா கட்ட நிர்ப்பந்திக்கப்படும் மாணவர்கள் இனி விஜயபாரத்திற்கும் (ஆர்.எஸ்.எஸ் வார இதழ்) கட்டுமாறு ‘அன்புடன்’ கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இப்படி பரஸ்பர ஆதாயம் இரு தரப்பிற்கும் ஏராளம் இருக்கின்றன.
இப்போதே டி.ராஜேந்தர் கட்சியோடு போட்டியிடும் தமிழக பாஜக தலைவர்கள் அனைவரும் முறை வைத்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தினமும் பேசும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார்கள். இனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற ‘ஆய்வாளர்கள்’ அனைவரும் புதிய தலைமுறையை இந்து தலைமுறையாக மாற்றுவார்கள். இது போல வார இதழிலும் மாலன் அவர்கள் பிய்த்து உதறுவார். பச்சமுத்து தனது இந்திய நிறுவனங்களை மேற்பார்வையிட சொந்தமாக விமானமே வாங்குவார்.
அடுத்த மாதம் பச்சமுத்து கட்சியின் நான்காண்டு தொடக்க விழாவிற்கு ராஜ்நாத் சிங் வரும் போது இவையெல்லாம் டீலாக பேசப்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில் எஸ்ஆர்எம் அறக்கட்டளை பாஜகவிற்கு அளிக்கும் தேர்தல் நன்கொடை கணக்கில் கொள்ளப்படாது.
ராஜ்நாத், பச்சமுத்து
ராஜ்நாத் சிங் – பச்சமுத்து சந்திப்பு. பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தரராஜன் உடன் இருக்கிறார்.
பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் கொள்கையும், நோக்கமும் ஒன்றுதான் என்று பச்சமுத்து கூறியிருப்பதுதான் முக்கியம். அதன்படி ராமர் கோவில், இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் வெறுப்பு, அமெரிக்க அடிமைத்தனம், மதவெறிக் கலவரங்கள், இந்து ராஷ்டிரக் கனவு அனைத்திலும் பச்சமுத்து ஒன்றுபடுகிறார். நடுத்தர வர்க்கத்தின் தாலியறுத்து அவர் சேர்த்திருக்கும் சில பல ஆயிரம் கோடிகள் கொண்ட தொழிலும் அப்படி தொழில் செய்யும் முனைப்பும் பாஜகவிற்கு பொருத்தமானவையே.
ஆகவே உண்மையை உடனுக்குடன் அளிக்கும் புதிய தலைமுறை டி.வி, வார இதழ் போன்ற காவி ஊடங்களை இனியும் நடுநிலைமையான ஊடகங்கள் என்று கருதப் போகிறீர்களா, இல்லை செருப்பால் அடிக்கலாம் தப்பில்லை என்பீர்களா? vinavu.com