சென்னை: நான் என்ன பாவம் செய்தேன்.... என் மகனுக்கு ஏன் இத்தனை
மனக்கஷ்டம் வரவேண்டும், என தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர்காரர்களிடம்
எஸ்ஏ சந்திரசேகர் வாய்விட்டுப் புலம்பியுள்ளார்.
தலைவா படத்துக்கு வந்துள்ள நெருக்கடி விஜய் மற்றும் அவரது தந்தையை
நிலைகுலைய வைத்துள்ளன.
தலைவா படம் உலகமெங்கும் வெளியாகிவிட்டாலும், விஜய்யின் சொந்த மாநிலமான
தமிழகத்தில் மட்டும் எவ்வளவோ முயற்சி செய்தும் வெளியாகாமல் போய்விட்டது.
முன்பு கமல்ஹாஸனின் விஸ்வரூபத்துக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது. ஆனால்
தனக்கேற்பட்ட நிலையை தொடர்ந்து மீடியா மற்றும் மக்கள் முன் எடுத்துச்
சொல்லி, நீதிமன்றம் போய் தீர்த்துக் கொண்டார் கமல்.
ஆனால் நடிகர் விஜய் அல்லது இயக்குநர் விஜய் அல்லது படத்தின் தயாரிப்பாளர்
யாருமே குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களைக் கூட சந்தித்து நிலைமையைச் சொல்ல
முடியாத சூழல். முன்பு கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதே திரையுலகம்
இப்போது மவுனம் காக்கிறது.
அரசியல் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், தன் மகனுக்கும்
அவர் படத்துக்கும் இப்படி ஒரு நிலை வந்தது அப்பாவாக மட்டுமல்ல,
தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்போதும் தலைவராக உள்ள எஸ்ஏ சந்திரசேகரனுக்கு
மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சர்வ பலம் பொருந்தியதாக, அனைத்து முடிவுகளையும்
தீர்மானிக்கும் முதலாளிகளின் அமைப்பாக இருக்கிற தயாரிப்பாளர் சங்கத்தின்
தலைவரால் தன் மகன் படத்தையே சிக்கலின்றி வெளியிட முடியவில்லையே என்ற பேச்சு
கடந்த ஒரு வாரமாக வெளிப்படையாகவே ஒலித்து வருகிறது.
அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில், "நான் என்ன பாவம் செய்தேன்,
என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும்?" என்று சக
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம்
சொல்லி வருந்தியுள்ளார்.
இவ்வளவு பிரச்சினைக்கும் எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாகக் கூறப்படும் சில
விஷயங்களே காரணங்களாகக் கூறப்படுகிறது. தன்னை அண்ணாவுக்கும் தன் மகன்
விஜய்யை எம்ஜிஆருக்கும் ஒப்பிட்டு எஸ் ஏ சந்திரசேகரன் பேசியதற்கான
ஆதாரங்களை மேலிடத்தின் கவனத்துக்கு திரையுலகைச் சேர்ந்த சிலரே கொண்டு
போயுள்ளனர்.
அடுத்து தலைவா படத்துக்கு வந்த சிக்கல்களைப் பார்த்து, "எம்ஜிஆரின் உலகம்
சுற்றும் வாலிபனுக்கு வராத சோதனையா... இதுவும் அப்படித்தான்," என்று
கமெண்ட் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக