இந்தியாவின் பிராந்திய அரசியல் இராஜதந்திரத்துக்கு இப்போது மிகப்
பெரிய சோதனை ஏற்பட்டுள்ளது. இலங்கை விவகாரத்தில், இந்தியாவுக்கு
உள்ள செல்வாக்கு எத்தகையது என்ற கேள்வி எழுப்பப்படும் சூழல்
ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியா கொண்டிருந்த செல்வாக்கும்,
ஆதிபத்தியமும், 2009 மே 18ஆம் திகதியுடன்
கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்டது. இந்தியாவுடன் நேரடி நட்புக்
கொண்டதாக, புலிகள் இயக்கம், இல்லாவிட்டாலும்,
தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவினது அதிகார சமநிலையைப்
பேணுவதற்கு மறைமுக காரணியாக அந்த இயக்கம் இருந்து வந்தது என்பது
ஆச்சரியமான உண்மை புலிகள் இயக்கம் இருந்தவரையில், இந்தியாவினால், இந்த உண்மை
உணரப்படவில்லை. புலிகள் இயக்கத்தினால் ஏற்படக் கூடிய
தீமைகளை மட்டுமே இந்தியா கணக்குப் பார்த்தது. அதற்கு அப்பால்,
இந்தியாவின் பாதுகாப்பில் செல்வாக்குச் செலுத்தத்தக்க காரணியாக
இருந்துள்ளது என்பது, புலிகளால் ஏற்பட்ட
வெற்றிடத்துக்குப் பின்னரே இந்தியாவினால் உணரப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தெற்காசியாவில்
ஏற்பட்டுள்ள, பிராந்திய, அரசியல், இராஜதந்திர, பொருளாதார
மாற்றங்கள், இந்தியாவுக்கு சாதகமான அம்சங்களைக்
கொண்டிருக்கவில்லை. இலங்கையின் மீது கொண்டிருந்த செல்வாக்கு
உடைந்து போனது அதற்கான மிகப்பெரிய காரணம்.
இந்தியப் பெருங்கடலின், சர்வதேச கடற்பாதைக்கு மிக நெருக்கமாக
அமைந்துள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன் கைக்குள் கொண்டு
வரத் தொடங்கியதன் பின்னர், இலங்கையின் எத்தகைய நகர்வுகளையும்
இந்தியா கைகட்டி நின்று வேடிக்கை பார்க்க வேண்டிய
நிலைக்குள்ளாகியுள்ளது.
அவ்வப்போது இந்தியா தனக்குக் கிடைக்கக் கூடிய சின்னச்சின்ன
துருப்புச்சீட்டுகளை வைத்துக் கொண்டே, இலங்கையுடனான நட்பைப் பேண
வேண்டிய நிலையில் உள்ளது.
இப்போது, 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள
இழுபறியில், இந்தியா முன்னகர்த்த முடியாத ஒரு இராஜதந்திரச்
சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
தனது சொந்தக் குழந்தையான 13ஆவது திருத்தச்சட்டத்தை, இலங்கை
அரசாங்கம் பலிகொடுக்கப் போவதை இந்தியாவினால் பார்த்துக்
கொண்டிருக்கவும் முடியவில்லை. அதேவேளை, அதைத் தடுப்பதற்கு
எதையும் செய்யவும் முடியாத இக்கட்டான நிலைக்குள்ளும் இந்தியா
சிக்கிப் போயுள்ளது.
இந்தியா தனது, இராஜதந்திரிகள் மூலம், வெளிவிவகார அமைச்சர் மூலம்,
பிரதமர் மூலம், எல்லாம், 13ஆவது திருத்தச்சட்டம்
பலவீனப்படுத்தப்படுவதை விரும்பவில்லை என்று தெளிவாக எடுத்துக்
கூறியும், இலங்கை அரசாங்கத்தின் முடிவையோ போக்கையோ மாற்ற முடியவில்லை.
கடைசியாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்த போது கூட, எந்த மாற்றத்தையும்
இந்தியாவினால் செய்ய முடியவில்லை.
தெரிவுக்குழுவே, 13ஆவது திருத்தச்சட்டத்தின் தலைவிதியைத்
தீர்மானிக்கும் என்று மட்டுமன்றி, மாகாணங்களுக்கு காணி, பொலிஸ்
அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது, அது
நடக்காது என்றும் சிவ்சங்கர் மேனனிடம் வெளிப்படையாகவே
கூறியிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ.
இது 13ஆவது திருத்தச்சட்டத்தை, முழு அளவில் நடைமுறைப்படுத்த
வேண்டும் என்ற, அதில் கை வைக்கவே கூடாது என்ற இந்தியாவின்
நிலைப்பாட்டுக்கு முரணானது என்று தெரிந்திருந்தும் கூட, தனது
முடிவில் இருந்து இலங்கை பின்வாங்கவில்லை.
இந்தியாவின் முகத்துக்கு நேரே, அடித்துக் கூறும் இந்தத் தற்துணிவு,
இதற்கு முன்னர் பிரேமதாஸ தவிர்ந்த வேறெந்த ஜனாதிபதிகளுக்கும்
இருந்திருக்கவில்லை. அப்போது, புலிகளுடன் இணைந்து கொண்டு அவர்,
இந்தியப்படைகளை வெளியேறுவதற்குக் காலக்கெடு விதித்தார்.
போர்ப்பிரகடனம் செய்யப் போவதாக அச்சுறுத்தினார்.
எனினும், 13ஆவது திருத்தச்சட்டத்தை கடுமையாக எதிர்த்த பிரேமதாஸ
கூட, அதனை ஒழிப்பதற்கோ, அதன் மடியில் கை வைப்பதற்கோ துணியவில்லை.
ஆனால், இப்போதைய அரசாங்கம், இந்தியாவுடன் போர்ப்பிரகடனம்
செய்யவில்லையாயினும், இந்தியாவின் குழந்தையான 13ஆவது
திருத்தச் சட்டத்தையே பலிகொடுக்கத் துணிந்து விட்டது.
13ஆவது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கான தெரிவுக்குழுவின் பணிகள் ஆரம்பமாகி விட்டன.
தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே உறுதியாகக் கூறிவிட்டார்.
இந்தியாவின் குழந்தையான 13ஆவது திருத்தச்சட்டத்தை அழிப்பதற்கே
இந்தியாவின் உதவியை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடியது தான்.
மிகப்பெரிய நகைச்சுவை. அதாவது தெரிவுக்குழுவுக்குள் தமிழ்த்
தேசியக்கூட்டமைப்பை வரவழைக்க இந்தியா உதவ வேண்டும் என்று
சிவ்சங்கர் மேனனிடம், மஹிந்த ராஜபக்ஷவும், சல்மான் குர்ஷித்திடம்
பஷில் ராஜபக்ஷவும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இவையெல்லாவற்றுக்கும் பின்னரும், 13ஆவது திருத்தச்சட்டத்தைத்
தற்போதுள்ளது போலப் பாதுகாக்கவோ, முழுமையாக நடைமுறைப்படுத்தவோ,
இலங்கை அரசாங்கம் முன்வரப் போவதில்லை என்பது இந்தியாவுக்கு
நன்றாகவே புரிந்திருக்கும்.
ஆனாலும், இந்தியத்தரப்பு இன்னமும், இலங்கை அதைச் செய்யும் என்று
நம்புவதாக அறிக்கைகளையே வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
13ஆவது திருத்தச்சட்டத்தை தற்போதைய நிலையில், விட்டு வைக்க இலங்கை
அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில், இந்தியாவுக்கு மாற்றுத் தெரிவு
என்று எதுவுமே இல்லாத வெறுமை நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த வெளி தான், இலங்கைக்குச் சாதகமானது
இப்போது இந்தியாவுக்கு இலங்கை மீது உள்ள ஒரே, பிடி அல்லது
துருப்புச்சீட்டு என்றால், அது, கொமன்வெல்த் உச்சி மாநாடு தான்.
இந்தியாவினது எந்தக் கருத்தும், கொமன்வெல்த் மாநாடு நடைபெறும் வரையில்
தான் இலங்கையால் செவிமடுக்கப்படும்.
அதற்குப் பின்னர், இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் நிலை, கேள்விக்குள்ளாக்கப்படும்.
இலங்கை உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் உள்நாட்டு விவகாரங்களில்
தலையிடப் போவதில்லை என்ற இந்தியாவின் அணுகுமுறை, இலங்கைக்கு வாய்த்த
மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்தியா தனது வாயாலேயே தனது பலவீனத்தை
வெளிப்படுத்தி விட்ட நிலையில், உள்நாட்டு விவகாரம் என்ற தளத்தை
வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கம் சுலபமாக காய்களை நகர்த்தி
வருகிறது.
இதனால், தமிழர்களின் நலன்களும், உரிமைகளும்
கேள்விக்குள்ளாக்கப்படுவதுடன் நின்றுவிடப் போவதில்லை. இலங்கையில்
உள்ள தமிழர்களை நாம் ஒருபோதும் கைவிட்டு விடப் போவதில்லை என்று, இந்தியா
அடிக்கடி கூறும் வாக்குறுதியும் கூட கேள்விக்குள்ளாகி விடும்.
இப்போதைய நிலையில், இலங்கை விவகாரத்தில், எதையும் செய்யவும் முடியாத –
அதேவேளை, எதையும் செய்யாமல் இருக்கவும் முடியாத திரிசங்கு நிலையில் இந்தியா
சிக்கிப் போயுள்ளது.
இந்த இராஜதந்திர நெருக்கடி – இடைவெளி இந்தியாவுக்கு எதுவரை நீளப் போகிறது
என்பதை, புதுடில்லியின் அதிகாரபீடம் தான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த முடிவை இந்தியா, எந்தளவுக்குத் தாமதிக்கிறதோ, அந்தளவுக்கு பிராந்திய
ரீதியில் இந்தியாவின் செல்வாக்கும் கேள்விக்குள்ளாக்கப்படவே வாய்ப்புக்கள்
உள்ளன.
-ஹரிகரன் ilakkiyainfo.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக