செவ்வாய், 16 ஜூலை, 2013

கறுப்பு என்றால் அசிங்கம், சாத்தான், இருட்டு, அழிவு; வெள்ளை என்றால் தூய்மை, அழகு, அமைதி, சமாதானம்

ஜிம்மர்மேன், மார்ட்டின்மெரிக்காவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கறுப்பின இளைஞன் மார்ட்டின் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. கொலை செய்த வெள்ளையர் ஜார்ஜ் ஜிம்மர்மேன் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ளை இனவெறிக்கு ஆதரவாக அமெரிக்க நீதித்துறை செயல்படுவதை தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.
ஜிம்மர்மேன், மார்ட்டின்
டிரேவான் மார்ட்டின் எனும் கறுப்பின இளைஞன் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரை சேர்ந்தவன். 17 வயது இளைஞன். தன் தந்தையைக் காண சான்போர்ட் நகருக்கு வந்திருந்தான். சில நாட்கள் சான்போர்ட் நகரில் தங்கியிருந்தான். 2012-ம் வருடம் பிப்ரவரி 26-ம் தேதி இரவு, கடைக்கு சென்று இனிப்புகள், தேனீர் போன்ற சிலவற்றை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான் மார்ட்டின். அப்போழுது பக்கத்துக் குடியிருப்பு காவலாளியாக இருந்த 27 வயதான ஜார்ஜ் ஜிம்மர்மேன், மார்ட்டினை துரத்தத் தொடங்கியுள்ளார், அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மார்ட்டினை சுட்டுக் கொன்றுவிட்டார்.

”மார்ட்டின் என்னை தாக்கவந்தான், அவனிடம் இருந்து என் உயிரை காப்பாற்றிக்கொள்ளவே நான் அவனைச் சுட்டேன்” என ஜிம்மர்மேன் வாக்குமூலம் அளித்தார். ஆனால் உண்மையில் ஜிம்மர்மென் சம்பவத்தன்று மார்ட்டினை பார்த்தவுடன், அவசர உதவி சேவைக்கு அழைத்து பேசியுள்ளார். அதில் ஆரம்பம் முதலே, சந்தேகப்படும்படியாக ஒரு கறுப்பின இளைஞனை தான் பார்ப்பதாகவும், அவன் திருடன் போல் இருக்கிறான், கறுப்பினத்தவர்கள் திருடர்கள் தான் என்றும் பேசியுள்ளார்.
இதையடுத்து ஜிம்மர்மேன் மார்ட்டினை தாக்கப் போவதை அறிந்து அவசர உதவி சேவையாளர், ”அப்படியெல்லாம் எதுவும் செய்ய வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார். தேவையானால் தான் உடனடியாக போலீஸை அனுப்புவதாகவும் கூறியுள்ளார் (இவையனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சாட்சியமாக அளிக்கப்பட்டன). யாரையும் பொருட்படுத்தாத ஜிம்மர்மேன் மார்ட்டினை தாக்கத் தொடங்கினார்.
அதே நேரம் இருவர் சண்டை போடுவதை பார்த்த சிலர் அவசர உதவிக்கு அழைத்து தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களின் சாட்சிப்படி, இருவர் கட்டிப் புரண்டு சண்டை போடுவதாகவும், ஒரு சிறுவன் காப்பாற்றுங்கள் என்று அலறிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். பின்னர் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதை பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கறுப்பின இளைஞர்கள் என்றாலே திருடர்கள், கொள்ளையர்கள் என முன்முடிவுடன் பார்க்கப்படுவதும், வெள்ளையின வெறியர்களின் கடுமையான பிரச்சாரமும் கறுப்பினத்தவர்களை சீண்டியபடி உள்ளன.
ஜிம்மர்மென் வழக்கு விசாரணையில் நிறைய பொய் சொல்லியுள்ளதை அப்பொழுது பல பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. மார்ட்டின் கையில் சில இனிப்புகள் மட்டும் வைத்திருந்த நிலையில் கையில் துப்பாக்கியுடன் இருந்த ஜிம்மர்மேன், மார்ட்டின் தன்னை பலமான ஆயுதத்தால் தாக்கியதாக கூறினார். இது பின்பு பொய் என நிரூபிக்கப்பட்டது. அதே நேரம் மார்ட்டினிடம் கத்தி, துப்பாக்கி போன்ற எந்த வித ஆயுதமும் இல்லை என்பது நிருபிக்கப்பட்டது.
ஆயுதம் ஏதும் இல்லாத அப்பாவி கறுப்பின இளைஞனை மார்ட்டின் வெறுப்புடன் எந்த வித காரணமுமின்றி கொலை செய்தது வெட்ட வெளிச்சமாகியது. ஒரு வருடத்திற்கு மேல் விசாரணையில் இருந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி நெருங்கி வந்த நிலையில் கூட ஜிம்மர்மேன் எதுவும் பேசாமல் இருந்தார். நீதிமன்றத்திலும் வாய் திறக்கவில்லை. வெள்ளையின வெறி அப்பட்டமாக தெரிந்தும், இந்த வழக்கில் தீர்ப்பு ஜிம்மர்மேனுக்கு சாதகமாக அதாவது வெள்ளையின வெறிக்கு ஆதரவாகவே வழங்கப்பட்டுள்ளது.
ஜிம்மர்மேனுக்கும் மார்ட்டினுக்கும் முன் விரோதமில்லை, ஜிம்மர் மேன் இதற்கு முன் குற்றச் செயல்கள் எதுவும் புரியவில்லை, இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஜிம்மர்மேனின் வெள்ளையின வெறி மிகுந்த பேச்சுகளும், பொய்களும், பதிவுகளும் கவனமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.
கறுப்பு என்றால் அசிங்கம், சாத்தான், இருட்டு, அழிவு; வெள்ளை என்றால் தூய்மை, அழகு, அமைதி, சமாதானம், என்று மக்கள் மத்தியில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதனாலான சமூக வெறுப்பை தினம் தோறும் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்து வருபவர்கள் கறுப்பின மக்கள்.
மார்ட்டினின் கொலை திட்டமிட்ட கொலை இல்லை என்றாலும், அமெரிக்க சமூகத்தில் ஊறிப்போன வெள்ளையின வெறியின் வெளிப்பாடு. ஆனால், நீதித்துறையோ வெள்ளையின வெறிக்கு துணை போய் ஜிம்மர்மேன் குற்றவாளி இல்லை என அறிவித்து அம்பலமாகி விட்டது. முதல் கறுப்பின அதிபர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒபாமா கூட நீதித்துறையை நாம் மதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கறுப்பின மக்கள் மீது இருக்கும் காழ்ப்பிற்கு இன்னொரு உதாரணமும் இந்த வழக்கு தொடர்பாக வெளிப்பட்டுள்ளது. மார்ட்டின் கொலை வழக்கில் தீர்ப்பு வரும் நாளன்று ஒருவேளை மார்ட்டினுக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை என்றால், கறுப்பின மக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என கோர்ட் வளாகம் முதல் கறுப்பினத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எல்லாம் போலீஸார் அதிகப்படுத்தப்பட்டனர்.
ஆனால் தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் கூடி இருந்த கறுப்பின மக்கள் சோகத்துடனும், விரக்தியுடனும் அமைதியாக கலைந்தனர். நாடு முழுவதும் அமைதியான பேரணிகள், கூட்டங்கள் நடத்தப்பட்டன. இது அமெரிக்க வெள்ளையின வெறியர்களின் முகத்தில் காறி உமிழ்வது போன்று இருந்தது.
சாதி வெறியோ, வெள்ளை இனவெறியோ அவற்றை கட்டிக் காக்கும் அரசும், சட்டமும் அதன்படி செயல்படும் நீதித் துறையும் அவற்றை ஒழித்து விடும் என்பது பகல் கனவு. அதைத் தான் ஜிம்மர்மேன் தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. vinavu.com

கருத்துகள் இல்லை: