பாட்னா: பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் 22 பேரின்
மரணத்திற்கு, பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததே காரணம் என முதற்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது.பீகார் மாநிலம் சாப்ரா
அருகில் உள்ள தரம்சதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று
மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயங்கி
விழுந்தனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
அவர்களில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.கெட்டுப்போன உணவைச்
சாப்பிட்டதால் குழந்தைகள் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் ஆர்கானோபாஸ்பேட்
என்ற அரிசி மற்றும் கோதுமை பயிர்கள் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி
மருந்தே காரணம் என்று தெரியவந்துள்ளது.இந்த பூச்சிக்கொல்லி மருந்தை
பயன்படுத்தி கழுவப்பட்ட பாத்திரத்தை சரிவர கழுவாமல் அதில் உணவு
பரிமாறப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகவே அந்த உணவு விஷமாக மாறி உயிர்ப்பலி
ஏற்பட்டுள்ளதாகவும் மாநில கல்வித் துறை அமைச்சர் அமர்ஜீத் சிங் பி.கே. சாகி
தெரிவித்துள்ளார்.
வேண்டுமென்றே இந்த சம்பவம் நடந்ததா அல்லது உள்நோக்கம் இல்லாமல்
நடந்துவிட்டதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
மேலும் கூறினார்.நாடுமுழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த
சம்பவத்தால் பீகாரில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக