திங்கள், 15 ஜூலை, 2013

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக திராவிடர் கழக போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள்

ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் நடத்தவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் தி.மு.க.வினரும் பங்கேற்பார்கள் என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று (13.7.2013) வெளியிட்டுள்ள கடித அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடன்பிறப்பே, 1970ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள்      தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள்.  ஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதிப் பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்ட வனைத் தொழுதிட வேண்டுமென்றும், அனைவருக்கும் சமமாக சாதி உயர்வு தாழ்வு இன்றி அர்ச்சகராகும் உரிமை வேண்டுமென்றும் வலியுறுத்துகிற அடிப்படையில் அந்தக் கிளர்ச்சி அமையுமென்று பெரியார் போர் முரசு கொட்டினார்.

அப்படியொரு கிளர்ச்சி நடத்தாமலே அவரது எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டு வரச் சட்டம் இயற்றப்படும் என உறுதி யளித்து,   நான் தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அறிக்கை கொடுத்தேன்.   அந்த வேண்டுகோளில், குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராக இருக்க வேண்டுமென்று யாரும் இந்த நூற்றாண்டில் வாதாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  காலம் வேகமாகச் சுழன்று மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு தாழ்வு கிடையாது என்ற கொள்கை வலுப்பெற்று வரும் இந்நாளில் அப் படிப்பட்ட ஒரு பிற்போக்கு எண்ணத்தை யாரும் முரட்டுப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  வள்ளுவர், புத்தர், காந்தியடிகள் போன்றோரைப் போற்றுகிறவர்கள், ஆண்டவனுக்கு அர்ச்சகராகக் குறிப்பிட்ட சாதியினர்தான் இருந் திடல் வேண்டுமெனல் அநியாயமாகும்.  அர்ச்சகர்களுக்கென சில  தகுதிகள் இருக்க வேண்டும் என்பதிலோ, போற்றக்கூடிய புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும் என்பதிலோ, அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும் என்பதிலோ, எனக்குக் கருத்து வேறுபாடில்லை.  அப்படிப் பயிற்சி பெறுகிற வர்கள், எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக ஆகலாம்.  அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டி ருக்கிறது.
அதேசமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால் அவர் களுக்கு முதல் சலுகை அளிப்பது பற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவி களைப் பிறப்பினால் கணக்கிடாமல் தகுதி யொன்றினால் மட்டுமே கணக்கிடப்படக் கூடிய நாள் வந்து விடுமேயானால் ஆண்டவனைத் தொழுதிட ஆலயம் செல்வோர் சாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கும் தடை யில்லை என்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்.  கர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம், ஒருவர் பொறுப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு சாதி வர்ணம் பூசப்படக் கூடாது என்பதை இந்த அரசு மட்டுமல்ல; ஆண்டவன் எதிரே அனைவரும் சமம் என்ற கருத்தினை ஒப்புக் கொள்கிற எல்லோரும் ஏற்றுக் கொண்டே தீர்வர்.
ஆகவே, இந்த நல்ல நிலை ஏற்பட ஆலயங்களில் ஆண்டவன் முன்னே சாதியின் பெயரால் மற்றவர் களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன்வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.   இந்த எனது அறிக்கைக்கும் வேண்டுகோளுக்கு மிணங்கப் பெரியார் அவர்கள், தான் நடத்த இருந்த போராட்டத்தைத் தள்ளி வைக்கச் சம்மதித்தார். தந்தை பெரியார் அவர்களுக்கு நான் அளித்த அந்த உறுதிமொழிக்கேற்ப 2.12.70ல் சட்டப் பேரவையில் அர்ச்சகர் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது.  அர்ச்சகர் சட்டம் கண்டு, சமத்துவம் விரும்பாத சனாதனிகள் வெகுண்டார்கள். பல்லாண்டு காலமாக அனுபவித்து வருகிற ஆதிக்கத்தை அவ்வளவு எளிதில் இழந்திடச் சம்மதிப்பார்களா? அதனால் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 12 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் சட்டத்தில் மத சம்பந்த மாக அளிக்கப்பட்டுள்ள உறுதிப்படி அர்ச்சகர்கள் தங்கள் தொழிலை நடத்தும் உரிமையை அந்தச் சட்டத் திருத்தம் தடுக்கிறது எனக்கூறி அந்த அடிப்படையில் ரிட் மனுக்கள் அளித்திருந்தனர்.
அந்த வழக்கில் 1972ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிட உரிமை உண்டு.  மனுதாரர் களால் தவறு என்று கூறப்படும் இந்தச் சட்டம் மத சம்பந்தமான நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிட வில்லை.  எனவே தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தம் செல்லுபடி யானதே என்று தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும், நடைமுறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்தச் சட்டத்தின்படி காரியங்கள் நடைமுறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டது.  அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.  எத்தனையோ முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியும் மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும் கூட அந்த அரசியல் சட்டத்திருத்தப் பணி நடை பெறவே இல்லை.
இது கண்டு கொதிப்படைந்த பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய ஒரு போராட்டத்தை நடத்துவதற்குத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், அந்தப் போராட் டத்தை நடத்தாமலேயே 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் பெரியார் அவர்கள் மறைந்து விட்டார்கள். சென்னை அண்ணா மேம்பாலத்திற்கருகே 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பெரியார் அவர்களின் சிலை திறப்பு விழா அ.தி.மு.க. சார்பாக நடைபெற்றபோது திராவிடர் கழகத்தின் சார்பில் அந்த விழாவில் கலந்துகொண்ட அன்னை மணியம்மையார் அவர்கள் அந்நாளைய முதல மைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னிலையில் பேசும்போது, அர்ச்சகர் சட்டம் முடமாக்கப் பட்டிருப் பதைச் சுட்டிக்காட்டி, அதற்கென அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்கிற ஆவலை உள்ளத்தில் தேக்கி வைத்துக் கொண்டு, அதற்காக ஒரு போராட் டத்தையே நடத்த பெரியார் திட்டமிட்டிருந்தார்.  அதற்குள் மறைந்து விட்டார்.  கலைஞர் கருணாநிதி அவர்கள் பெரியார் மறைந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டார். பெரியாருடைய ஆசைகளை எல்லாம் எவ்வளவோ நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாடவைக்க முடியவில்லை.  ஆகவே அவருடைய நெஞ்சில் ஒரு முள்ளோடுதான் புதைத்திருக்கிறோம் என்று சொன் னார்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே அரசியல் சட்டத்தைத் திருத்தி, அர்ச்சகர் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகை செய்யுங்கள் என்று உருக்கத்துடன் கேட்டுக் கொண்டார். 1978ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சென்னை கடற்கரையில் நான் பேசும்போது, மத்திய பாதுகாப் புத்துறை அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்களையும் அந்த மேடையில் வைத்துக் கொண்டு மத்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோள்களில், பெரியாருக்கு எத்தனையோ விருப்பங்கள் உண்டு. சாதிபேதமற்ற சமுதாயம், மூட நம்பிக்கை ஒழிந்த சமுதாயம் இதையெல்லாம் காணவேண்டு மென்று பெரியார் ஆசைப்பட்டார். என்றாலும், அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டன எனினும், இந்த ஆசை ஒன்றை நிறைவேற்ற முடியாமல் பெரியார் மறைந்து விட்டார்.  ஆகவே மத்திய அரசுக்கு இந்த நூற்றாண்டு விழாவில் நான் இந்தப் பொதுக்கூட்டத்தின் மூலமாக இங்கே வெள்ளமெனத் திரண்டிருக்கின்ற உங்கள் சார்பாக விடுக்கின்ற வேண்டுகோள், அர்ச்சகர் சட்டம் நடைமுறைக்கு வர அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொடுங்கள் என்கிற வேண்டுகோள்  என்பதாகும்.  ஆனால் இந்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட வில்லை.
எனவே தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும்  வகையில்  தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று  அரசாணை ஒன்று பிறப்பிக்கப் பட்டது.  அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி  திருக் கோவில்களில்  அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது.  அப்போது வேத விற்பன்னரும், தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடி யவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியர், இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா சாதிக்காரர்களும் அர்ச்சகர் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித் திருப்பது வேத வாக்கு.   ஆகமத்தைச் சொல்லி மற்ற சாதிக்காரர்களை பிராமணர்கள் கோவிலுக்குள் விடாமல் இருந்தார்கள். ஆனால், உண்மை என்ன வென்றால் பிராம ணனுக்கும், ஆகமத்துக்குமே முரண்பாடுதான்.  பிரா மணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற சாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான்.  ஆனால் உண்மையில் பாஞ்சராத்ர ஆகமப்படி சாதி தத்துவமே இல்லை.  ஆகமப்படியே பார்த்தாலும் யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்.  பிராமணர் இதையே, தன் தொழிலாக்கிக் கொண்டதால், மற்ற யாரையும் உள்ளே விடவில்லை.   ராமசாமி நாயக்கர் அந்தக் காலத்தில் என்னிடம்  தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்குப் போடக்கூடாதாய்யா? என்று கேட் டார்.  அந்தப் பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கிறார்.
இது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சே பித்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தைத் தடுக்கி றார்கள்னு அர்த்தம்.  அவர்களுக்கு நாம் தான் நல்ல புத்தி சொல்லித் திருத்த வேண்டும் என்று பதிலளித்தார்.  தி.மு.கழக ஆட்சியின் அரசாணையினை அடுத்து  பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை  ஆகிய  நான்கு  இடங்களில்  சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங் களும்;   சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும்   ரூபாய் 500 ஊக்கத் தொகையும்  வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள்,  இதர வகுப்பைச் சேர்ந்த  42 மாணவர்கள் உட்பட மொத்தம்  207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர்.   பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்ச கராகும் பிரச்சினை உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக திருக்கோவில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று.  அதற்குப் பின்னர் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்றது.  உச்ச நீதிமன் றத்தில்  தமிழக அரசு  அர்ச்சகர் பிரச்சினையை  முடிவுக்குக் கொண்டு வர  ஆறு மாத கால அவகா சத்தைக் கேட்டுப் பெற்றது.   ஆறு மாத காலம் முடிந்த பிறகும்,  இந்தப் பிரச்சினையில் எவ்விதமான நடவடிக் கைகளையும்  அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.   அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர்,  உச்ச நீதிமன்றம் ஆறு  மாத கால அவகாசம் வழங்கியும்கூட  மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தாலோசனையையும் நடத்த வில்லை.  எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம்.  2006ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட அரசாணையை  தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று  எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுடைய  சட்ட ரீதியான போராட் டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என்று சொல்லியிருக் கிறார்கள்.
மேலும்  அரசியல் சட்ட ரீதியாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர் களுக்கும்  திருக் கோவில்களில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்களும்  கருத்து அறிவித்துள்ளனர்.   இந்த நிலையில்தான் நமது தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களின் முனைப்போடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தும் வகையிலும்,  தமிழ்நாடு அரசு இதனைச் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வற்புறுத்தும் வகையிலும் ஆகஸ்ட் முதல் தேதி யன்று அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்;  இதில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடு ஒன்றி னை நடத்துவது;  மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்துவது;  மூன் றாவது கட்டமாக மறியல் போராட்டத்தை நடத்துவது என்றெல்லாம் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முடிவுக்கு தொடக்கம் முதல் ஆதரவாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்,  திராவிடர் கழகம் நிறைவேற்றி யிருக்கும்  இந்தத் தீர்மானத்திற்கும் ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காகத் தான்  இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். திராவிடர் கழகத் தீர்மானத்தின்படி, இதற்காக  நடத்தும் போராட்டங்களில் கழக உறுப்பி னர்கள் பங்கேற்று அந்தப் போராட் டத்திற்கு எழுச்சி யூட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
அன்புள்ள,
மு.க.

கருத்துகள் இல்லை: