வெள்ளி, 19 ஜூலை, 2013

குடித்துவிட்டு காரோட்டி குழந்தையை கொன்ற முதலாளிவீட்டு பையன் ! சட்டத்தின் ஆட்சியா ? வர்க்கத்தின் ஆட்சியா ?

முனிராஜ்டந்த மே மாதம் 23-ஆம் தேதி அதிகாலையில் எம்.பி. குழும நிறுவனத்தின் குலக்கொழுந்து ஷாஜி புருஷோத்தமன் குடிபோதையில் காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் சென்னை – எழும்பூர் பாந்தியன் சாலையில் ஓட்டிவந்து, நடைபாதையோரமாகத் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது ஏற்றியதில் சிக்கிக் கொண்ட சிறுவன் முனிராஜ் மறுநாள் காலையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனான். அச்சிறுவனின் உடம்பில் கார் ஏறி இறங்கியதில் அவனது இடுப்புப் பகுதி முறிந்து போய், உள்ளுறுப்புகளும் சிதைந்து போயிருந்தன. ஷாஜியின் கார் ஏறி இறங்கியதில் கொல்லப்பட்ட சிறுவன் முனிராஜ்; மகனை இழந்து வாடும் பெற்றோர் தியாகு மற்றும் மாலினி.
இது எதிர்பாராதவிதமாக நேர்ந்துவிட்ட சாலை விபத்தல்ல; நண்பர்களோடு சேர்ந்து குடித்து கும்மாளமடித்துவிட்டு, தலைக்கேறிய போதையோடு ஒருவித வெறித்தனமான இன்பத்தை அனுபவிப்பதற்காக நெடுஞ்சாலைகளில் தமது சொகுசுக் காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டிக் கொண்டு போகும் மேட்டுக்குடி கும்பலின் பொறுக்கி கலாச்சாரத்தில் ஊறிப்போன தறுதலை செய்திருக்கும் படுகொலை இது.

இதில் சிக்கிய முனிராஜின் அத்தை மகள் சுபரஷிதா என்ற சிறுமிக்குத் தலைக்காயம் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவளின் வலது தோள்பட்டை மற்றும் வலது கையின் பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதோடு, வலது கை முட்டிப் பகுதி முற்றிலுமாகச் சிதைந்து போவிட்டது. தற்பொழுது மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் இச்சிறுமியின் வலது கை பழைய நிலைக்குத் திரும்பாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். முனிராஜின் தம்பி வாசு நல்வாய்ப்பாக சிறு காயங்களோடு தப்பிவிட்டான். இவர்கள் தவிர, அந்தப் பேருந்து நிறுத்தத்தில் விளம்பரப் பலகைகளைப் பொருத்திக் கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்களையும் ஷாஜியின் கார் அடித்துத் தூக்கி எறிந்தது. இந்த இருவரில் ஒருவருக்குப் பலமான காயம் ஏற்பட்டு, அவர் பல நாட்கள் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுக்க நேரிட்டது.
கொல்லப்பட்ட முனிராஜும், படுகாயமடைந்துள்ள சுபரஷிதாவும் ஏழைகள்; சாதாரண ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பென்ஸ் இரக சொகுசுக் காரை ஓட்டி வந்த தறுதலை ஷாஜி புருஷோத்தமன் வருடத்திற்கு 2,000 கோடி ரூபாய் வருமானம் வரத்தக்க மிகப்பெரும் தரகு முதலாளித்துவ குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு. அதனாலேயே சென்னை போலீசு வழக்கைப் பதிவு செய்தது தொடங்கி ஷாஜியைக் கைது செய்தது முடிய அனைத்து நிலைகளிலும் வர்க்கப் பாசத்தோடு நடந்து கொண்டது.
ஷாஜி ஓட்டி வந்த கார் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது ஏறி இறங்கி ஓரு ஆட்டோவில் மோதி நின்றவுடனேயே, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரினுள் போதையோடு இருந்த ஷாஜி உள்ளிட்ட நால்வரையும் வெளியே இழுத்துப் போட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்; ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஷாஜியை ரமேஷ் என்பவர்தான் வெளியே இழுத்துப் போட்டிருக்கிறார்.
இத்துணை நேரடி சாட்சியங்கள் இருந்தபோதும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நால்வரில், ஷாஜியையும் அவனது இரண்டு நெருக்கமான நண்பர்களையும் விருந்தினர்களைப் போல வழியனுப்பி வைத்துவிட்டு, ஷாஜியோடு காரில் பயணம் செய் குமாரை ஷாஜி வீட்டு கார் ஓட்டுநராகக் காட்டி, அவர் மீது பிணையில் வெளியே வரத்தக்க ஒரு வழக்கைப் பதிவு செய்து, சிறையில் அடைத்தார்.
ஷாஜி
கொச்சி விமான நிலையத்தில் தமிழகம் போலீசால் கைது செய்யப்பட்டுக் கண்ணியமாக அழைத்து வரப்படும் ஷாஜி.
மே 24 அன்று சிறுவன் முனிராஜ் இறந்து போகிறான். போலீசால் வழியனுப்பி வைக்கப்பட்ட ஷாஜி தலைமறைவாகிறான். இதனிடையே, “கைது செய்யப்பட்ட குமார் ஷாஜி வீட்டு கார் ஓட்டுநர் கிடையாது; அவர் நெல்லூரிலுள்ள ஷாஜியின் குதிரைப் பண்ணையில் வேலை செய்துவருபவர்” என்ற உண்மையை இந்து நாளிதழ் அம்பலப்படுத்தியது. இது மட்டுமின்றி, “ஷாஜி தினந்தோறும் தனது நண்பர்களோடு குடித்துவிட்டு, இரவு நேரங்களில் சொகுசு கார்களை அதிவேகத்தோடு ஓட்டிச் செல்வதைப் பொழுதுபோக்காகக் கொண்டவன்; இதற்கு முன்பு அவனால் இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன; அதில் ஒரு விபத்தில் ஷாஜி ஓட்டிச் சென்ற கார் ஒரு ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலியாகிவிட்டார். அவனது கார் ஓட்டுநர் உரிமமும் காலாவதியாகிப் போன ஒன்று” என்ற உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை போலீசின் மோசடியை அம்பலப்படுத்திச் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டது.
உண்மையை இதற்கு மேலும் மூடிமறைக்க முடியாமல் போனதால், ஷாஜியை முதல் குற்றவாளியாகப் போலீசு அறிவித்தது. போலீசு ஆய்வாளர் ரவிச்சந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆய்வாளர் தன்னிச்சையாக இந்த மோசடியைச் செயதாரா அல்லது மேலதிகாரிகளின் அறிவுரைப்படி நடந்து கொண்டாரா என்பது இனி எக்காலத்திலும் வெளிவராது. ரவிச்சந்திரனுக்கு அடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சரவணன், ஒரு சில நாட்களிலேயே மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதற்கான காரணமும் மர்மமாகவே உள்ளது.
ஷாஜி பணபலம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் மட்டுமல்ல; அரசியல் செல்வாக்கும் கொண்டவன். மத்திய அமைச்சர் வயலார் ரவி, ஷாஜியின் சகோதரியின் மாமனார். இத்தகைய பின்னணி கொண்ட ஷாஜி எளிதாக வெளிநாட்டுக்குத் தப்பியோடி விடுவான் எனத் தெரிந்திருந்தும் சென்னை போலீசு அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு கண்துடைப்புக்காக ஷாஜியைப் பற்றிய விவரங்களை சென்னை விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளிடம் மட்டுமே தெரிவித்திருந்தது, சென்னை போலீசு. ஆனால், ஷாஜியோ பெங்களூர் விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக தாய்லாந்திற்குத் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு சாதாரண பின்னணி கொண்ட குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்றால், அவனது குடும்பத்தையே போலீசு நிலையத்திற்குக் கடத்தி வந்து மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் போலீசு, ஷாஜி விசயத்தில், அவனைச் சரணடையச் சொல்லுமாறு அவனது தந்தை புருஷோத்தமனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. ஷாஜி சரணடைவது உறுதியான சமயத்தில்தான் சென்னை போலீசு இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவனைப் பற்றிய விவரங்களை அனுப்பியதோடு, நீதிமன்றத்தின் மூலம் ஷாஜியைத் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தது. காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக, ஷாஜியை கொச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தது.
ஒரு எதிர்பாராத விபத்து நடந்தாலே, அது பற்றி அறிக்கை விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் ஓட்டுக்கட்சிகளுள் ஒன்றுகூட, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை. குறிப்பாக, ஜெயா அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு பைசா கூட நிவாரண உதவி அளிக்க முன்வரவில்லை. இந்த விசயத்தில் நீதிமன்றங்களுக்கும் தார்க்குச்சி போட வேண்டியிருந்தது.
“உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சுபரஷிதாவின் மருத்துவச் செலவுக்குத் தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாய் அளிக்க வேண்டும்; அத்தொகையைக் குற்றவாளி ஷாஜியிடமிருந்து வசூலிக்க வேண்டும்” எனக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்த பிறகுதான், எம்.பி. குழும முதலாளி புருஷோத்தமன் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தார். தனக்கு முன் பிணை வழங்கக் கோரி ஷாஜி வழக்குத் தொடர்ந்த பொழுது, “குற்றத்தின் தன்மை மற்றும் குற்றவாளியின் செல்வாக்கைக் கருத்தில்கொண்டு, முன் பிணை வழங்கக் கூடாது” எனக் கோரும் குறுக்கீட்டு மனுவையும் தாக்கல் செய்து, மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
ஷாஜி சகலவிதமான வசதிகளோடு முதல் வகுப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். அவனது இரண்டு நண்பர்கள் பிணையில் வெளியே வந்துவிட்டனர். பணம் விளையாடிவிட்டதோ எனச் சந்தேகப்பட இதில் இடமில்லை. தனது களிவெறியாட்டத்திற்காக ஒரு சிறுவனைக் கொன்று போட்ட இவ்வழக்கை வெறும் விபத்தாகவே நீதிமன்றமும் சட்டமும் கருதுகின்றன. போலீசு ஷாஜியைச் சட்டவிரோதமாகத் தப்பவைக்க முயன்றது என்றால், சட்டமும் நீதிமன்றமும் ஷாஜியைச் சட்டப்படியே கொலைக் குற்றத்திலிருந்து தள்ளி நிறுத்தியுள்ளன. vinavu.com
- ரஹீம்

கருத்துகள் இல்லை: