ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

1200 விநாயகர் சிலைகள் சென்னையில் கரைப்பு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இன்று கோலாகலமாக தொடங்கியது. கடலில் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 19ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்து அமைப்புகள் சார்பிலும் தொண்டு நிறுவனங்கள், ஊர் மக்கள் சார்பிலும் சென்னையில் ஆயிரக்கணக்கான பெரிய சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டது. பின்னர், அதற்கு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடந்தது. போலீசாரின் அறிவுரை ஏற்று 10 அடி உயரத்திற்கு மேல் விநாயகர் சிலைகள் நிறுவப்பட வில்லை. கிரிக்கெட் பிள்ளையார், மூஞ்செலி பிள்ளையார், ஸ்பைடர் மேன் பிள்ளையார் என வித விதமான பிள்ளையார்கள் தெருவை அலங்கரித்தனர்.
அனைத்தும் நச்சுத்தன்மை இன்றி களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருந்தது இந்த ஆண்டு தனிச்சிறப்பு. அதே போன்று மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் சிலைகள் நிறுவப்படவில்லை. நேற்று 185 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி முதல் இன்று அதிகாலை வரை பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று காலை முதல் ஆட்டோ, டெம்போ, மாண்டு வண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடைக்கு பின்புறம், திருவொற்றியூர் கார்பரேண்டர் யூனிவர்சல் நிறுவனத்தின் பின்புறம், பாலவாக்கம் பல்கலை நகர், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்கப்பட்டது.

முன்னதாக சிலைகளுக்கு முன் இளைஞர்கள், சிறுவர்கள் இசை வாத்தியங்களை இசைத்தப்படி ஊர்வலமாக சென்றனர். சிலைகளை கடலில் கரைக்க பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் 2 ராட்சத கிரேன்கள் தயார் நிலையில் இருந்தது. அதன் மூலம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகிறது. கையடக்க களிமண் விநாயகர் சிலைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் கடற்கரை ஓரத்தில் கொட்டப்பட்டது. இந்த ஊர்வல பாதுகாப்புக்காக சென்னையில் 12 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வடசென்னை பகுதிகளான ராயபுரம், கொருக்குபேட்டை, வண்ணை, வியாசர்பாடி, திருவொறியூர் பகுதியில் விநாயகர் சிலை கடலில் கரைக்கப்பட்டது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று காசி மேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், எவரெடி நிறுவனம் பின்புறம் உள்ள கடல் பகுதியில் கரைத்தனர். பட்டினப்பாக்கத்தில் 750 சிலைகள், நீலாங்கரை 300, காசிமேடு 60, திருவொற்றியூர் 15, எண்ணூரில் 70 சிலைகள் என மதியம் வரை மொத்தம் 1200 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: