கடந்த ஒன்றரை ஆண்டில் கழிவுநீர் அடைப்பை அகற்ற முனைந்த 15 பேர்
இறந்துள்ளதாகவும், அவ்விபத்தில் பெரும்பான்மை சென்னையில்தான்
நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
26.9.2012
புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சென்னை பெரம்பூர் மதுரைசாமி மடம்
தெருவில் உள்ள கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்க முயன்ற
ஒப்பந்த தொழிலாளி திருவேற்காடு சங்கர் (45) விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார்.
அவரை காப்பாற்ற முயன்ற 68வது வார்டுக்கான மெட்ரோ குடிநீர் வாரிய பொறியாளர்
வெங்கட்ராமன் சாக்கடை குழியில் விழவே அவரும் மயக்கமானார். உடன் வந்த
ஒப்பந்த தொழிலாளிகள் உதவிக்கு பலரை அழைத்தனர். எனினும், செம்பியம்
தீயணைப்புத்துறையினர் வந்த பிறகுதான் இறந்தபோன அவர்களது உடல்களை மீட்டனர்.இவர்களது இறப்பை போலீசார் இந்திய குற்றவியல் சட்டம் 174 இன் கீழ் பதிவு செய்துள்ளனர். முன்னதாக 304ஏ (கவனக் குறைவால் ஏற்படும் மரணம்) எனப் பதிவுசெய்தனர். அதாவது சாக்கடை குழியின் மூடியை சங்கர் திறந்த போது வெளிப்பட்ட விச வாயுவால் சிறிது நிலை தடுமாறி அவர் உள்ளே விழுந்து விட்டாராம். போலீசின் இந்த கதையை அவரது உறவினர்கள் ஏற்கவில்லை. காவல்துறையின் உயர் அதிகாரிகள் அதனை மாற்றுவதாக உறுதியளித்தாலும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை.
காரணம் இந்தியாவில் 1993 இல் மனிதர்கள் நேரடியாக கழிவுகளை அகற்ற தடைவிதித்து சட்டம் இருந்தாலும், சென்னை உயர்நீதி மன்றத்தில் 2006 இல்தான் அத்தடையைப் பெற முடிந்தது. தற்போது வெங்கட்ராமன் அழைத்து வந்த சங்கர் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளிகள் அனைவரும் நேரடியாக சாக்கடை அடைப்பை நீக்க வந்தவர்கள்தான். ஏற்கெனவே 4 குழிகளில் அடைப்பை எடுத்து விட்டு 5 வதில் நுழையும் போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. நிரந்தர தொழிலாளிகள் சட்டத்தை நிர்வாகத்திடம் எடுத்துக் காண்பிப்பதால் அவர்களை நேரடியாக குழிக்குள் இறங்க சொல்ல அதிகாரிகள் தயங்குகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களைப் பொறுத்தவரை அதுபோன்ற பிரச்சினை ஏதுமில்லை என்பதால் இவர்களை வேலைக்கமர்த்துகிறது நிர்வாகம்.
அடைப்பை நீக்க உதவும் ஜெட் ராடிங் இயந்திரம் அவர்களிடம் இருக்கவில்லை. மறுநாள் கீழ்பாக்கம் மார்ச்சுவரியில் கூடியிருந்த பொறியாளர்கள் சிலரிடம் கேட்கையில், சென்னையில் அந்த இயந்திரமே மொத்தம் 28 தான் உள்ளதாம். டிவிசனுக்கு இரண்டு வீதம் இருப்பதால் எல்லா இடத்திலும் அடைப்பை நீக்க அது வருவது சாத்தியமில்லை என்றனர். ‘அதனை சப்ளை செய்த நிறுவனம் இயந்திரமொன்றுக்கு தலா ரூ.20 லட்சம் வாங்கிய போதும் பத்தாண்டுகளில் சரிவர பராமரிப்பதில் உதவுவதில்லை. இவற்றில் பல தற்போது ரிப்பேராகத்தான் உள்ளது’ என்கின்றனர். மேலும் எல்லா அடைப்புகளையும் இயந்திரம் வைத்தே சரி செய்ய இயலாது என்கின்றனர். மேலை நாடுகளில் மனிதர்கள் இந்தக் காரியத்தை செய்வதில்லையே என்ற எளிய உண்மைக்கு அவர்களிடம் பதில் இல்லை. அப்படி மனிதனது நேரடி தொடர்பின்றி கழிவகற்றும் திட்டம் அரசிடமே இல்லை என்பதுதான் உண்மை.
சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் இணைய தளத்தில் தற்போதும் எப்படி மனிதர்கள் பாதுகாப்பாக உள்ளே 8 மீ ஆழம் வரை இறங்கி சுத்தம் செய்வது என்பதற்கு வரைபடம் போட்டு விளக்கி உள்ளனர். கையுறைகள், முழுக்க போர்த்தப்பட்ட கவச ஆடை, சுவாசத்திற்கான ஏற்பாடுகள், தலை விளக்கு, ஒளிரும் ஆடை மற்றும் மீட்பதற்கான கருவிகள் என பலவும் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இது எதுவும் விபத்து நடந்த திருவிக நகருக்கு போகவில்லை. ஆனால் இவையெல்லாம் மீட்க வந்த தீயணைப்பு படையினரிடம் காண முடிந்தது. பாதுகாப்பு விசயங்களை அமல்படுத்த கூடவா போதிய உபகரணங்கள் இல்லை? இல்லை அதிலும் ஏதேனும் ஊழல் நடந்துள்ளதா? எனத் தெரியவில்லை. அல்லது இறங்குபவன் ஒப்பந்த தொழிலாளிதானே, அவனுக்கெதற்கு உயிர் வாழும் உரிமை என அரசு கருதுகிறதா? எனத் தெரியவில்லை.
கடந்த ஒன்றரை ஆண்டில் கழிவுநீர் அடைப்பை அகற்ற முனைந்த 15 பேர் இறந்துள்ளதாகவும், அவ்விபத்தில் பெரும்பான்மை சென்னையில்தான் நடந்ததாகவும் கூறுகிறார் சமூக ஆர்வலர் ஏ.நாராயணன். குமார் என்ற தொழிற் சங்க தலைவர் கூறுகையில் ‘நேரடியாக கழிவகற்றும் வேலைக்கு ஒப்பந்த தொழிலாளிகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அடைப்பு என்பது சாக்கடையை பொறுத்தவரை அன்றாடம் நடப்பது. ஆகவே அதற்கு தனியாக ஆள் போட வேண்டும்’ என்கிறார். அதே நேரம் ‘அடைப்பால் கழிவுநீர் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகையில் மனிதத் தலையீடு நேரடியாக இருந்தால்தான் அடைப்பை சரிசெய்ய முடியும்’ என்றும் கூறுகிறார். தொழிற்சங்க வாதிகளே இதனை ஆதரிப்பதால் அரசு இன்னும் ஒருபடி மேலே போகிறது. ஒப்பந்த தொழிலாளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரிவர செய்வதில்லை. முழுதும் எந்திர உதவியால் சாக்கடை அடைப்பை நீக்க முன்வருவதுமில்லை.
மறுநாள் சாக்கடையை சரிசெய்யாததை கண்டித்து பொதுமக்கள் போராட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த வேலையை அவசர அவசரமாக இரவில் செய்துள்ளனர். ஒப்பந்த தொழிலாளி இறந்தால் பிரச்சினையாகுமோ என்ற பயத்தால்தான் பொறியாளர் வெங்கட்ராமன் உள்ளே குதித்து காப்பாற்ற முயன்றிருப்பார் என்கிறார்கள் சக பொறியாளர்கள். ஆனால் சங்கர் இறந்ததை அவரது வீட்டார் டிவி செய்தி பார்த்துதான் தெரிய முடிகிறது. அவருக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.2.5 லட்சம்தான் தருவேன் என ஒப்பந்ததாரர் மருத்துவமனையில் வைத்தே கறாராக கூறியிருக்கிறார். வெங்கட்ராமனின் மரணம் என்பது நாட்டுக்காக உயிர்துறக்கும் ராணுவம், போலீசு போன்றவர்களின் தியாகத்தை போன்றது என்கிறார் மூத்த பொறியாளர் ஒருவர். போலீசோ மருத்துவமனைக்கு வெளியே சங்கர் வீட்டாரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது. தொழிலாளிகளுக்கு தியாகி பட்டம் கிடையாது போலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக