பொன்னுச்சாமி, ஓர் உதவி இயக்குநர். முதலாளிகள் ஆதிக்கம் செய்யும் சினிமாவில் சாதிக்க முடியும் என்று நம்பி சென்னைக்கு வந்த லட்சக்கணக்கான அப்பாவிகளில் இவரும் ஒருவர். ‘மொழி’, ‘பயணம்’ உட்பட பலப் படங்களை இயக்கிய ராதாமோகனின் உதவியாளர். தனியாக  படம் இயக்க முடிவு செய்ததும் அலைந்து திரிந்து இறுதியில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தமிழக அதிகாரியான தனஞ்செயனை சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார்.
இவர் சொன்ன கதையை கேட்டதுமே தனஞ்செயனுக்கு அலாரம் அடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என அனுபவ மூளை உணர்த்தியிருக்கிறது. உடனே முழு திரைக்கதையையும் எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். பொன்னுச்சாமியும் நம்பிக்கையுடன், தான் எழுதிய திரைக்கதையை கம்ப்யூட்டரில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்து, அதை பைண்ட் செய்து கொடுத்திருக்கிறார். உரிய நேரத்தில் அழைக்கிறோம் என்று சொல்லி அவரை தனஞ்செயன் வழியனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால், நாட்கள் மாதங்களாகி ஆண்டுகள் ஆன பிறகும் யுடிவி-யில் இருந்து பொன்னுச்சாமிக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. இடையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் நடிக்கும் ‘தாண்டவம்’ படத்தை யுடிவி தயாரிப்பதாக செய்தி வந்தது. ஒருவேளை இந்தப் படம் முடிந்ததும், தன்னை அழைக்கலாம் என பொன்னுச்சாமி காத்திருந்தார்.
அப்போதுதான் அந்த இடி இறங்கி பொன்னுச்சாமியின் வாழ்க்கையை பொசுக்கியது. ‘தாண்டவம்’ படம் குறித்த செய்திகளை வாசித்தவருக்கு அதிர்ச்சி. எந்தக் கதையை தனஞ்செயனிடம் சொன்னாரோ, அந்தக் கதை அப்படியே இயக்குநர் விஜய்யின் பெயரில் உருவாகிக் கொண்டிருந்தது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளியான கதாநாயகன், தன் செவிகளையே கண்களாக பாவித்து எதிரிகளை பழி வாங்குவதுதான் கதை. இந்த ஒன் லைன் யாருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஆனால், திரைக்கதை? அது அப்படியே பொன்னுச்சாமி கொடுத்த பவுண்டட் ஸ்கிரிப்ட்.
பொதுவாக கதை திருட்டு என்பது தமிழ்ப் படவுலகில் சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. சொல்லப்போனால் இதற்காக யாரும் கூச்சப்படுவதில்லை. வெளிநாட்டு படங்களை சுட்டும், தங்களிடம் உதவி இயக்குநராக இருப்பவர்களின் படைப்பை களவாடியுமே பெரும்பாலான இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர்களுக்கும் தெரியும். ஆனாலும் எதிர்காலத்தில் கிடைக்கும் என நம்பும் பொற்கால வாழ்க்கைக்காக நிகழ்காலத்தில் தங்கள் கற்பனை திருடப்படுவதை பொறுத்துக் கொள்கிறார்கள்.
‘தாண்டவம்’ படத்தின் இயக்குநரான விஜய், இப்படி கதை திருடுவதில் மற்ற இயக்குநர்களைப் போல மன்னர். ‘க்ரீடம்’, ‘பொய் சொல்லப் போறோம்’ ஆகிய அவரது படங்கள் பிறமொழிகளின் தழுவல் என்றால், ‘மதராசப்பட்டினம்’, அப்படியே ‘டைட்டானிக்’ ஹாலிவுட் படத்தின் காப்பி. இதனுடன் ‘லகான்’ இந்திப் படத்தை தயிர்வடையில் பூந்தி தூவுவது போல் தூவியிருந்தார். ஆனால், சென்ற ஆண்டு வெளியான அவரது ‘தெய்வத் திருமகள்’ காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் அப்படியே ‘ஐ’ம் சாம்’ ஹாலிவுட் படத்தின் நகல். இதில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. இந்த ‘தெய்வத் திருமகள்’ படத்தை தமிழகத்தில் வெளியிட்டதன் வழியாகத்தான் யுடிவி மோஷன் பிக்சர்ஸ், முதல்முறையாக தென்னகத்தில் காலடி எடுத்து வைத்தது.
ஆகவே தனஞ்செயனும் சரி, இயக்குநர் விஜய்யும் சரி ஆரம்பம் முதலே அக்யூஸ்டுகளாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் தன் கதையை திருடியிருக்கிறார்கள் என பொன்னுச்சாமியும் அடித்துச் சொல்கிறார். இதை பொன்னுச்சாமியின் திரைக்கதையை படித்தவர்களும் ஆமோதிக்கிறார்கள். ‘தாண்டவம்’ டிரெய்லரில் இருக்கும் பல காட்சிகள் அப்படியே  பொன்னுச்சாமியின் திரைக்கதையில் இருப்பதாக சத்தியம் செய்கிறார்கள்.
ஆனாலும் ‘தாண்டவம்’ கதை, இயக்குநர் விஜய்யின் சொந்த சரக்கே என நிரூபிக்க குட்டிக்கரணம் அடிக்கிறார், தனஞ்செயன். இதற்காகவே பல லட்சம் ரூபாயை செலவு செய்து அமெரிக்காவில் இருந்து  டேனியல் கிஷ் என்னும் பார்வையற்ற நபரை அழைத்து வந்து, ‘இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுதான் ‘தாண்டவம்’ படத்தை எடுத்திருக்கிறோம்…’ என காதில் பூ சுற்றுகிறார்.
இதையெல்லாம் பார்த்து கொந்தளித்துப் போன பொன்னுச்சாமி, தனஞ்செயனை சந்தித்து நியாயம் கேட்க முயன்றிருக்கிறார். ஆனால், இவரை சந்திக்கவே தனஞ்செயன் மறுத்துவிட்டார். உடனே, தான் அங்கம் வகிக்கும் இயக்குநர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். சொம்பும், ஜமுக்காளமுமாக யுடிவி சென்ற பஞ்சாயத்து தலைவர்கள், கடைசி வரை பேச்சு வார்த்தையை இழுத்தடித்திருக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ‘தாண்டவம்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வாங்கி விட்ட தனஞ்செயன், வரும் வெள்ளிக்கிழமை (28.09.12) படம் வெளியாவதாக விளம்பரமும் செய்து வருகிறார்.
படம் வெளியாகி விட்டால், தனக்கு நியாயம் கிடைக்காது… யுடிவியுடன் சமரசமாகி, அடுத்தப் படத்துக்கான வாய்ப்பை பெற்று இயக்குநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தனக்கு துரோகம் செய்து விட்டார்கள். இனியும் அவர்களை நம்பி பயனில்லை… என்பதை புரிந்து கொண்டு சக உதவி இயக்குநர்களின் உதவியோடு நீதிமன்றத்தின் கதவை பொன்னுச்சாமி தட்டியிருக்கிறார்.
இன்று இந்த வழக்கில் வந்த இடைக்கால உத்தரவின்படி தாண்டவம் படத்தை வெளியிடுவதற்கு யூடிவிக்கு தடையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் வழக்கு தொடர்ந்து நடக்கிறது. இறுதித் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஒரு புறமிருக்க எந்த நாளிதழ் அல்லது பத்திரிகைகளிலும் இது குறித்த செய்தி, ஒரு துணுக்காகக் கூட இதுவரை வரவில்லை. அப்படி செய்தி வரக் கூடாது என்பதற்காகவே ‘தாண்டவம்’ பட விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் வாரி வழங்கப்பட்டுள்ளன. தவிர இன்றைய தினம் பல படங்களை யுடிவி தயாரித்து வருகிறது. அந்தப் படங்களின் புகைப்படங்களும், செய்திகளும், விளம்பரங்களும் ஒவ்வொரு வார – மாத – நாளிதழுக்கும் தேவை. எனவே இந்த கதைத் திருட்டை குறித்து அச்சு ஊடகங்கள் கவலைப்படவில்லை. சன் டிவியில் வெளியாகும் பெரும்பாலான நெடுந்தொடர்களுக்கு யுடிவிதான் விளம்பரங்களை வாங்கித் தருகிறது. பிற தனியார் தொலைக்காட்சிகளுக்கு படியளப்பதும் யுடிவிதான். எனவே காட்சி ஊடகங்களும் மவுனம் சாதிக்கின்றன.
பொன்னுச்சாமி கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். டைட்டில் கார்டில் தன் பெயர் வர வேண்டும். தன் படைப்புக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைக்காகத்தான் போராடி வருகிறார்.
ஆனால், டைட்டில் கார்டில் பெயர் போட முடியாது. அது பணிந்தது போலவும், திருட்டை ஒப்புக் கொண்டது போலவும் ஆகும். வேண்டுமானால், கொஞ்சம் பணத்தை வீசுகிறோம். எடுத்துக் கொண்டு போ… என யுடிவி பேரம் பேசுகிறது.
இருக்கும் நகைகளை எல்லாம் அடகு வையுங்கள் என பொழுதெல்லாம் விளம்பரத்தில் கூவும் வேலை இருப்பதால், இப்படியொரு சம்பவம் நடப்பதே தனக்கு தெரியாது என்பது போல் விக்ரம், ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்கப் போய்விட்டார்.
இயக்குநர் சங்க பொறுப்பில் இருக்கும் பலர், வெறும் இயக்குநர்கள் மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் கூட. எனவே யுடிவியில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்றுதான் நாக்கைத் தொங்க போட்டபடி அலைகிறார்களே தவிர, பொன்னுச்சாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடத் தயாராக இல்லை.
கமலஹாசனின் ‘தசாவதாரம்’ படம் முதல் எண்ணற்ற படங்கள் இப்படி உதவி இயக்குநர்களின் படைப்பை களவாடித்தான் உருவாகி இருக்கின்றன. லாபம் சம்பாதித்திருக்கின்றன. பசி, பட்டினியால் வாடியபடி தங்கள் கற்பனையை காகிதத்தில் வடிக்கும் உதவி இயக்குநர்களின் நிலை குறித்து குரல் கொடுக்க மட்டுமல்ல, பரிதாபப்படவும் யாரும் தயாராக இல்லை.
திருட்டு டிவிடிக்காக கைகோர்த்து குரல் எழுப்ப தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயாராக இருக்கிறார்கள். காரணம், இது மூலதனம் தொடர்பானது. லாபம் பறிபோகும் விஷயம். ஆனால், கதை திருட்டு அப்படியல்ல. அது, வெறும் உதவி இயக்குநர்களின் மூளை உழைப்பு. அவர்கள் சிந்தும் ரத்தம். ஆனாலும் இந்த ரத்தம் தமிழக மக்களின் நலனுக்காக அவர்களது வாழ்க்கையை பண்படுத்துவதற்கு பயன்படுவதில்லை. முதலாளிகள் உருவாக்கியிருக்கும் ஃபார்முலாக்களில் வெரைட்டி காண்பிப்பதையே இத்தகைய உதவி இயக்குநர்கள் வாழ்க்கை இலட்சியமாக கருதுகிறார்கள்.
அதுவே இறுதியில் கதைத்திருட்டுக்கு அடிப்படையாக இருக்கிறது. சினிமாவில் ஒரு ஆளாகி மக்களுக்கு மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற கனவின் பின்னால் இருப்பது பணம், புகழ், பிரபலம் மூன்றின் மீதான கவர்ச்சிதான். அதனால்தான் சினிமாத்துறை முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் துறையாக இருக்கிறது. இதை உடைக்க வேண்டுமானால் சினிமாவில் ஒரு ஆளாகி செய்வதன் மூலம் முடியாது. சினிமா உலகுக்கு வெளியே நடக்கும் மக்கள் போராட்டங்களில் தனது கலை பயன்படட்டும் என்று ஒரு மக்கள் கலைஞனைப் போல சிந்திக்க வேண்டும்.
பொன்னுச்சாமியைப் போன்ற உதவி இயக்குநர்கள் அப்படி சிந்திப்பார்களா? அப்படி சிந்திக்காதவரை இந்த கதை திருட்டுக்களுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களை தண்டிப்பது சாத்தியமில்லை. திருட்டுக்கதை உதவி இயக்குனரை ஏமாற்றிய