நெல்லை: முல்லைப் பெரியாறு அணை 1,000 ஆண்டுகள்
ஆனாலும் உடையாது. இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு சென்று மின்சாரம்
தயாரிக்கவே அணை பலகீனமாக இருப்பதாகக் கூறி கேரள அரசு சதி செய்கிறது என
தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,முல்லைப் பெரியாறு அணை 1,000 ஆண்டுகள் ஆனாலும் உடையாது. அணை பலகீனமானது என்று கூறி கேரள, தமிழக மக்களை கேரள அரசு ஏமாற்றி வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்திற்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அணை உடைந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கேரள அரசு கூறுகிறது. அப்படியே வைத்துக் கொண்டாலும் முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் முழுவதும் இடுக்கி அணைக்கு தான் செல்லுமே தவிர வெளியே செல்லாது.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு அந்த அணை தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு சென்று மின்சார உற்பத்தி செய்வதற்காக கேரள அரசு சதி செய்கிறது. இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாவட்டங்கள் வறண்டுவிடும். பொறியாளர்களின் தொழில்நுட்பங்களுக்கு எதிராக கேரளா வதந்தியைப் பரப்பி வருகிறது. இதை ஒருபோதும் தமிழக பொறியாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழகத்தின் அனைத்து பணிகளையும் பொறியாளர்களை வைத்தே செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு நீண்ட நாட்கள் வழங்காமல் உள்ள அண்ணா விருதினை தமிழக முதல்வர் வழங்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக